எஸ்.ஏ.பி.அண்ணாமலை

From Tamil Wiki
எஸ்.ஏ.பி. அண்ணாமலை

எஸ்.ஏ.பி. அண்ணாமலை (எஸ்.ஏ.பி.) (டிசம்பர் 2, 1924 - ஏப்ரல் 17, 1994) இதழாளர், எழுத்தாளர். குமுதம் பல்சுவை வார இதழை நிறுவி ஆசிரியராக இருந்து நடத்தியவர். எஸ்.ஏ.பி. என்னும் பெயரில் நாவல்களை எழுதினார்.

பிறப்பு, கல்வி

செட்டிநாட்டில் காரைக்குடியை அடுத்துள்ள கோட்டையூரில் அ. பழனியப்பச் செட்டியாருக்கும் லட்சுமி ஆச்சிக்கும் டிசம்பர் 2, 1924-ல் பிறந்தார். எஸ்.ஏ.பி. அண்ணாமலை ஆறுமாதக்குழந்தையாக இருக்கும்போதே தந்தை காலமானார். காரைக்குடியில் பள்ளிப்படிப்பையும் சென்னை சட்டக்கல்லூரியில் சட்ட இளங்கலை படிப்பையும் முடித்தார்.

தனிவாழ்க்கை

கோதை ஆச்சி

எஸ்.ஏ.பி. அண்ணாமலை 1945-ல் கோதை ஆச்சியை மணந்தார். மகன் டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் பிரபலமான இதய நோய் சிகிச்சை மருத்துவராக இருக்கிறார். மகள் விஜயலட்சுமி அழகப்பன் மைசூரில் வசிக்கிறார். மற்றொரு மகள் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கிருஷ்ணா சிதம்பரம், சென்னையில் வசிக்கிறார்.

இதழியல்

எஸ்.ஏ.பி. அண்ணாமலை தன்னுடன் சட்டக்கல்லூரியில் பயின்ற தோழர்கள் பி.வி. பார்த்தசாரதி, நாராயணன் இருவருடன் இணைந்து அச்சு-பதிப்பு தொழிலில் ஈடுபட முயன்றார். தேவி அச்சகம் என்னும் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். முதலில் மாதமிருமுறை இதழ் ஒன்றை நடத்த திட்டமிட்டார். பின்னர் அதை வார இதழாக நடத்த முடிவுசெய்தார். 1947-ல் குமுதம் இதழ் பி.வி. பார்த்தசாரதி வெளியீட்டாளராகவும் எஸ்.ஏ.பி. அண்ணாமலை ஆசிரியராகவும் பணியாற்ற வெளியாகியது. காரைக்குடி தொழிலதிபரான அழகப்பச் செட்டியார் இதழின் கௌரவ ஆசிரியராக ஆனார். தொடக்க காலத்தில் அவர் நண்பர்கள் ஆனந்ததீர்த்தன், நாராயணன் ஆகியோர் உதவினர். பின்னர் ரா.கி. ரங்கராஜன், புனிதன், ஜ.ரா. சுந்தரேசன் என்னும் உதவியாசிரியர் குழு உருவாகியது. குமுதம் நிறுவனத்தில் இருந்து கல்கண்டு என்னும் இதழ் தமிழ்வாணனை ஆசிரியராக கொண்டு வெளியானது. குமுதம் இதழ் எழுபதுகளில் இந்தியாவில் அதிகம் விற்கும் இதழ்களில் மூன்றாவது இடத்தில் இருந்தது.

அமைப்புப் பணிகள்

எஸ்.ஏ.பி. ஒரு தேக்கத்திற்குப்பின் 1951-ல் மீண்டும் விசைகொண்ட தமிழ் எழுத்தாளர் சங்க செயல்பாடுகளில் ஈடுபட்டார். விவேகானந்தர் மேல் ஈடுபாடு கொண்டவர், விவேகானந்தர் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டு பல ஊர்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றினார். ஆனால் ஒருமுறை ஓர் இலக்கியக்கூட்டத்தில் பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை நெடுநேரம் பேசியது கண்டு இதழியலின் காலத்தேவை மிக்க பணிக்கு மேடைப்பேச்சு ஒத்துவராது என உணர்ந்து மேடைகளில் தோன்றுவதை கைவிட்டார் என விக்ரமன் குறிப்பிடுகிறார். குமுதம் புகழ்பெற்ற பின்னர் அவர் மிக அரிதாகவே பொதுமேடைகளில் தோன்றினார். புகைப்படங்களும் குறைவாகவே பிரசுரமாகியுள்ளன.

இலக்கியப் பணிகள்

ஜவஹர் பழனியப்பன்

எஸ்.ஏ.பி. மாணவராக இருக்கையிலேயே பிரசண்ட விகடன், சுதேசமித்திரன் இதழ்களில் கதைகளை எழுதியிருக்கிறார். குமுதம் ஆசிரியர் ஆனபிறகு எஸ்.ஏ.பி. என்னும் பெயரில் தொடர்கதைகளை எழுதினார். அவற்றில் தொடக்ககால கதையான 'சின்னம்மா' செட்டிநாட்டு பின்னணியில் எழுதப்பட்டது. தமிழில் முழுக்கமுழுக்க செட்டிநாட்டுப் பின்னணியில் எழுதப்பட்ட முதல் நாவல் என்று சொல்லத்தக்கது. எஸ்.ஏ.பி. பெரிய நிகழ்வுகள் இல்லாமல் சாதாரணமாக ஓடும் கதைகள் வழியாக மென்மையான சில உணர்வுகளை உருவாக்கும் 'மலர்கின்ற பருவத்தில்' போன்ற நாவல்களை எழுதியவர். பொதுவாசகர்களுக்குரிய காதல், மர்மம் கொண்ட கதைகள் அவர் எழுதியவை.

நல்ல இலக்கிய வாசகரான எஸ்.ஏ.பி. அண்ணாமலை குமுதம் இதழை வணிகநோக்குடன் கேளிக்கை இதழாகவே நடத்தினார். ஆனால் அவர் எழுதிய அரசு பதில்களில் இலக்கியச் செய்திகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்தார். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் என்னும் நாவல் அவர் குறிப்பிட்ட பின்னரே பொதுவாசகர்களை அடைந்தது. ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்ற பல இலக்கியவாதிகளின் படைப்புகளையும் அறிமுகம் செய்திருக்கிறார்.

அரசியல்சார்பு

எஸ்.ஏ.பி. அண்ணாமலை உறுதியான காங்கிரஸ் ஆதரவு மனநிலை கொண்டவர். ஜவஹர்லால் நேருவின் ஆதரவாளர், பின்னர் இந்திரா காந்தியை ஆதரித்தார். நெருக்கடிநிலையையும் ஆதரித்து குமுதம் நிலைபாடு எடுத்தது.

மறைவு

எஸ்.ஏ.பி. - இளமைக்கால படம்

ஏப்ரல் 17, 1994 அன்று அமெரிக்காவில் தன் மகன் ஜவஹர் பழனியப்பன் இல்லத்தில் காலமானார்.

நூல்கள்

  • காதலெனும் தீவினிலே
  • நீ
  • சின்னம்மா
  • மலர்கின்ற பருவத்தில்
  • பிறந்த நாள்
  • இன்றே இப்போதே
  • உன்னையே ரதியென்று
  • பிரம்மச்சாரி
  • சொல்லாதே
  • ஓவியம்
  • இன்றிரவு
  • நகரங்கள் மூன்று, சொர்க்கம் ஒன்று

உசாத்துணை

[1]