under review

இளையராஜா

From Tamil Wiki
இளையராஜா
இளையராஜா
இளையராஜா
இளையராஜா குடும்பத்தினருடன்
இளையராஜா, கங்கை அமரன் சிறு வயதில்

இளையராஜா (ரா. ஞானதேசிகன்) (பிறப்பு: ஜுன் 2, 1943) இசைவாணர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், வாத்தியக்கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களுக்கு இசையமைத்தார். திரைப்படங்களல்லாத பல தனி ஆல்பங்களை வெளியிட்டார். முழு சிம்ஃபொனியை இயற்றிய முதல் இந்தியர். 'பஞ்சமுகி' என்ற புதிய கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியவர்.

பிறப்பு, கல்வி

இளையராஜாவின் இயற்பெயர் ஞானதேசிகன். இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் ராமசாமி, சின்னத்தாயம்மாள் இணையருக்கு ஜுன் 2, 1943-ல் பிறந்தார். டேனியல் ராசய்யா என பெயர் மாற்றம் பெற்றார். உடன்பிறந்தவர்கள் பாவலர் வரதராஜன், தாவீது டேனியல் பாஸ்கர் (ஆர்.டி. பாஸ்கர்), கங்கை அமரன். வீட்டின் வறுமை காரணமாகப் பள்ளிப்படிப்பு பாதியில் தடைப்பட்டது.

இளையராஜா குடும்பத்தினருடன்

தனிவாழ்க்கை

இளையராஜா ஜீவாவைத் திருமணம் செய்து கொண்டார். மகன்கள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர். மகள் பவதாரிணி. ஜீவா அக்டோபர் 31, 2011-ல் காலமானார். இளையராஜா மூகாம்பிகையின் பக்தர். ரமணரைத் தன் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டார்.

அமைப்புப் பணிகள்

  • இளயராஜா "Isai OTT" என்ற தளத்தை தொடங்குவதற்கான முயற்சிகளில் இருக்கிறார். இதன் மூலம் இசைத்துறை ஜாம்பவான்களுக்கு மரியாதை செய்யவும், இந்தியா நெடுக புதிய திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்கள் தங்கள் கலையை நிகழ்த்த வாய்ப்பு அமைக்கும் தளமாகவும் இளையராஜா திட்டமிடுகிறார்.
இளையராஜா, தன்ராஜ் மாஸ்டர்

இசை வாழ்க்கை

இளையராஜா திரையுலகில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனை தன் ஆதர்சமாகக் கொண்டார். வொல்ப்காங் அமேடியஸ் மொஸார்ட் (Wolfgang Amadeus Mozart), ஜோஹன் செபாஸ்டியன் பாக் (Johann Sebastian Bach), லுட்விக் வான் பீத்தோவன்(Ludwig van Beethoven) ஆகியோர் உலக அளவில் ஆதர்சமான இசைக்கலைஞர்கள்.

ஆரம்ப காலம், கச்சேரிகள்

அண்ணன் வரதராஜனின் கச்சேரியில் கருத்துவேறுபாடு காரணமாக ஹார்மோனிய இசைக்கலைஞர் வராதிருந்தபோது வேறுவழியில்லாமல் சிறுவனான இளையராஜாவை அன்றைய கச்சேரியில் வாசிக்க வைத்தார். மக்களின் வரவேற்பைப் பெற்றதால் ஹார்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் மேலும் ஈடுபாடு கொண்டு தேர்ச்சி பெற்றார். 1961-1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கேற்றார். 'பாவலர் சகோதரர்கள்' என்று அழைக்கப்பட்ட இக்குழுவுடன் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார். இளையராஜா குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளிடம் முறைப்படி சங்கீதம் கற்றார்.

1969-ல் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய பாணியில் ஆர்மோனியம், பியானோ, கித்தார் கருவியிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தன்ராஜ் மாஸ்டர் அவரை ‘ராஜா’ என அழைத்தார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

1970-களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக சலில் சௌத்ரியிடம் பணிபுரிந்தார். பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி.கே. வெங்கடேஷின் உதவியாளராகச் சேர்ந்தார். அவரது இசைக்குழுவில் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார். இந்தக் காலக்கட்டங்களில் அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் அவர் சுயமாகப் பாடல்கள் எழுதி, சக வாத்தியக்கலைஞர்களை அதற்கு இசை அமைக்கச் செய்தார். ஏ.ஆர். ரஹ்மானின் தந்தை ஆர்.கே. சேகரிடம் வாத்தியங்களை வாடகைக்கு எடுத்தும் இசையமைத்தார்.

இளையராஜா, குரு தட்சிணாமூர்த்தி
திரைப்படங்கள்

இளையராஜா 1975-ல் பஞ்சு அருணாச்சலம் மூலம் 'அன்னக்கிளி' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில், மேற்கத்திய இசையோடு தமிழ் மரபையும் புகுத்தி, அவர் உருவாக்கிய ‘மச்சானப் பாத்தீங்களா?’ என்ற பாடல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதைத் தொடர்ந்து 'பதினாறு வயதினிலே', 'பொண்ணு ஊருக்கு புதுசு' போன்ற படங்களில் இசையமைத்தார். மலையாளத்திலும் தமிழிலும் எழுபதுகளில் ஒரேசமயம்தான் சினிமாவில் நவீனஅலை ஆரம்பித்தது. அதுவரை சினிமாவின் காட்சிமொழியில் இருந்துவந்த ஒரு சம்பிரதாயத்தன்மையை உதறி மேலே சென்ற இயக்குநர்கள் உருவானார்கள். தமிழில் பாரதிராஜா, தேவராஜ் -மோகன் போன்றவர்கள் எடுத்த புதியவகைக் காட்சிமொழி கொண்ட படங்கள் முழுக்க முழுக்க இளையராஜாவின் இசையாலேயே மக்களின் ரசனைக்குரியவையாக மாறின. இளையராஜா அந்தப்படங்களின் காட்சிமொழி விட்டுவிட்ட இடங்களை இசைமூலம் நிரப்பிக்காட்டினார்.

இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி ஆகிய மொழிப்படங்களுக்கு இசையமைத்தார்.

அன்னக்கிளி பட கேசட் பின்னட்டை
பின்னணி இசை

பின்னணி இசைச்சேர்ப்பை இளையராஜாவுக்கு முன்பின் என பிரிக்கலாம். தமிழின் பெரும்பாலான பெரிய இசையமைப்பாளர்களின் படங்களில் பின்னணி இசை அவர்களின் இசைநடத்துநர்களால் (ஜோசப் கிருஷ்ணா, புகழேந்தி) அமைக்கப்பட்டது. ஆனால் இளையராஜா படத்தைப் போட்டுப்பார்த்து, அதன் ஒட்டுமொத்தத்தையும் உள்வாங்கி, ஒவ்வொரு காட்சித்துணுக்கையும் அவதானித்து முழுமையாக ஈடுபட்டுப் பின்னணி இசையமைத்த முதல் இசையமைப்பாளர்.

இளையராஜா, ஆர்.டி. பர்மன் குழுவினர்
சிம்ஃபொனி

இளையராஜா லண்டன் ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவால்(Royal Philharmonic Orchestra) நிகழ்த்தப்பட்ட முழு சிம்ஃபொனியை ஏற்பாடு செய்தார். முழு சிம்ஃபொனியை இயற்றிய முதல் இந்தியர். ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவால் முழு சிம்ஃபொனியை இசையமைத்த முதல் ஆசியர்.

அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை 'மேஸ்ட்ரோ' என்று அழைப்பர். அவர் இசையமைத்த சிம்ஃபொனி இன்றளவும் வெளியிடப்படவில்லை என்றாலும் கலைஞர்கள் அவரை 'மேஸ்ட்ரோ'(Maestro)என அழைத்தனர்.

இளையராஜா நேரடி இசைக்கச்சேரி
நேரடி இசைக்கச்சேரிகள்

இளையராஜா பல நேரலை இசைக்கச்சேரிகளை இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பிய நாடுகளில் அரங்கேற்றினார்.

இளையராஜா
தனி ஆல்பங்கள்
  • 1986-ல் 'How To Name it' என்ற இந்திய-மேற்கத்திய கலப்பு இசை ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆலபத்தை தியாகராஜர், ஜே.எஸ். பாச் ஆகியோருக்கு அர்ப்பணித்தார்.
  • 1988-ல் 'Nothing but wind' என்ற ஆல்பம் புல்லாங்குழல் வாசிப்பாளர் ஹரிபிரசாத் சௌரசியா, ஐம்பது துண்டு இசைக்குழுவால் நிகழ்த்தப்பட்டு வெளியிடப்பட்டது.
  • 1994-ல் கர்நாடக கிருதிகளின் தொகுப்பான 'Classicals on the Mandolin' என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இதனை உ. ஸ்ரீநிவாஸ் பதிவுசெய்தார்.
  • 2004-ல் குரு ரமண மகரிஷியின் மேல் இயற்றப்பட்ட 'குரு ரமண கீதம்' என்ற பக்திப்பாடல்களை இயற்றினார்.
  • 2005-ல் 'திருவாசகம்' (Thiruvasagam: A Classical Cross Over) என்ற பெயரில் மாணிக்கவாசகரின் திருவாசகத்தை இசையாக்கினார்.
  • 2006-ல் 'The Music messiah' என்ற உலக இசை ஆல்பத்தை வெளியிட்டார்.
  • 'இளையராஜாவின் கீதாஞ்சலி' என்ற தமிழ் பக்தி இசைத்தொகுப்பினையும், “மூகாம்பிகை” என்ற கன்னட பக்தி இசைத் தொகுப்பினையும் வெளியிட்டார்.
  • ஆதி சங்கரர் எழுதிய 'மீனாக்ஷி ஸ்தோத்திரம்' என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.
இளையராஜா
இளையராஜா

சிறப்புகள்

  • 1994-ல் இளையராஜா புதிய ராகமான 'பஞ்சமுகி' யைக் கண்டுபிடித்ததற்காக மியூசிக் அகாடமியால் கௌரவிக்கப்பட்டார்.
  • இந்தியத் திரைப்படங்களில், மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில், இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
  • இந்தியத் திரைப்பட இசையில் மேற்கத்திய பாரம்பரிய இசை இசைக்கருவிகள், சரம் ஏற்பாடுகளைப் பயன்படுத்திய ஆரம்பகால இந்திய திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர். இது படங்களுக்கான ஒலிகளின் சிறந்த ஒலியை உருவாக்க இவரை அனுமதித்தது.
  • 1986-ல், 'விக்ரம்' தமிழ்த் திரைப்படத்தில் கணினி மூலம் திரைப்படப் பாடல்களைப் பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளர்
  • மிகக் குறைந்த நேரத்திலேயே இசையமைத்துவிடும் இளையராஜாவின் திறமையை பலரும் பதிவு செய்துள்ளனர். ஆர்.கே. செல்வமணி தன் செம்பருத்தி படத்திற்காக இளையராஜா ஒன்பது பாடல்களை நாற்பத்தியைந்து நிமிடத்தில் பதிவு செய்ததாகக் குறிப்பிட்டார். தளபதி படத்தின் ஒலிப்பதிவை அரை நாளில் முடித்துவிட்டதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் தெரிவித்தார்
  • பிபிசி நிறுவனம் 155 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் ’உலகின் எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான முதல் பத்து பாடல்கள்’ பட்டியலுக்காக கருத்துக் கணிப்பு நடத்தினர். இக்கருத்துக் கணிப்பின்படி, தளபதி படத்திற்காக அவர் இசையமைத்த ’ராக்கம்மா கைய தட்டு’ பாடல் நான்காவது இடத்தைப் பிடித்தது.
  • 2013-ல் இந்திய சினிமாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் CNN-IBN நடத்திய கருத்துக்கணிப்பில், இளையராஜா அதிகபட்சம் 49% பெற்று இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2019-ல் சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து சாம்பியன்ஷிப் நிகழ்வின் தொடக்க விழாவிற்கு தலைமை விருந்தினராக இளையராஜா கலந்து கொண்டார்.
இளையராஜா

எழுத்து

இளையராஜா 'சங்கீதக் கனவுகள்', 'வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, வழித்துணை', 'துளி கடல்', 'ஞான கங்கா', 'பால் நிலாப்பாதை', 'உண்மைக்குத் திரை ஏது'?, 'யாருக்கு யார் எழுதுவது?', 'என் நரம்பு வீணை', 'நாத வெளியினிலே', 'பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்', 'இளையராஜாவின் சிந்தனைகள்', 'வெண்பா நன்மாலை' போன்ற நூல்களை எழுதினார்.

இளையராஜா

மதிப்பீடு

”இளையராஜாவுக்கு முன்னால் இருந்த இசையமைப்பாளர்கள் சினிமாவில் பணியாற்றிய இசைநிபுணர்கள். இளையராஜா சினிமாவை உருவாக்குவதில் பங்கெடுத்த முதல் இசையமைப்பாளர். முந்தைய இசையமைப்பாளர்களுக்கு சினிமாவின் ஒட்டுமொத்த கதையமைப்பு, காட்சிக்கட்டுமானம், கதைமாந்தர்களின் உணர்ச்சிகரம் பற்றிய ஆர்வமோ அறிதலோ இருந்ததில்லை. எப்போதுமே இளையராஜா படத்தை உருவாக்குபவர்களில் ஒருவர். கதையையும், சூழலையும், கதாபாத்திரங்களையும் முழுமையாகவும் துல்லியமாகவும் உள்வாங்குவதில் திறமையானவர். இளையராஜா வருகைக்குப்பின் திரைப்படங்களில் இசை ‘சேர்க்கப்படுவது’ இல்லாமலானது. இசையுடன் சேர்ந்தே திரைப்படம் உருவாக்கப்படுவது தொடங்கியது. பெரும்பாலும் அனைத்துப் படங்களுக்கும் ஓர் இசைத்திட்டத்தை [scheme] அவர் உருவாக்குகிறார். பாடல்களாகவும் தீம்இசையாகவும் அதை அளித்தார். அது படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தது.” என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

ஆங்கிலேய இசையமைப்பாளர் ஆண்டி வோடல் (Andy Votel) ”இசையில் காதல்/அடைக்கலம்/காமம்/உவகை/சோகம்/வீரம் என எந்தவகை ஜானரை எடுத்துக் கொண்டாலும் இளையராஜா அதற்கு இசையமைத்திருக்கிறார்” என மதிப்பிட்டுள்ளார். தளபதி படத்தின் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலின் இசைக்குறிப்புகளைக் கண்டு ஆர்.டி. பர்மன் மற்றும் குழுவினர் பிரமித்து எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.

இளையராஜா பத்ம பூஷண் விருது
இளையராஜா

விருது

  • 2010-ல் பத்மபூஷன் விருதும், 2018-ல் பத்மவிபூஷன் விருதும் பெற்றார்.
  • 1988-ல் லதா மங்கேஷ்கர் விருதும், 2012-ல் சங்கீத நாடக அகாதமி விருதும் பெற்றார்.
  • ஐந்து முறை தேசிய திரைப்பட விருதுகள் பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மாநிலங்களில் இசையமைப்பாளருக்கான மாநில விருதுகள் பெற்றார்.
  • இளையராஜாவுக்கு 'இசைஞானி’ என்ற பட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சூட்டினார்.
  • 1994-ல் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 1996-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கின.
  • 2022-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் இளையராஜாவை நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்தார்.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page