first review completed

ஆவூர் காவிதிகள் சாதேவனார்

From Tamil Wiki

ஆவூர் காவிதிகள் சாதேவனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இவரது 2 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

ஆவூர் காவிதிகள் சாதேவனார் என்னும் பெயரிலுள்ள காவிதி என்பது வேளாண்மையில் சிறந்த உழவருக்கு அரசன் வழங்கும் விருது. ஆவூர் தஞ்சை மாவட்டத்தில் உள்ளதோர் ஊர். சாதேவனார் என்னும் பெயரிலுள்ள முன்னொட்டு சால் (சால்பு- சிறந்த) என்பதைக் குறிக்கும். ஆவூர் காவிதிகள் சாதேவனார், ஆமூர் கவுதமன் சாதேவனார் என்றும் வழங்கப்படுகிறார்

இலக்கிய வாழ்க்கை

ஆவூர் காவிதிகள் சாதேவனார் இயற்றிய 2 பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூல்களில் அகநானூற்றில் 159- வது பாடலாகவும் நற்றிணையில் 264- வது பாடலாகவும் இடம் பெற்றுள்ளன.

பாடல்களால் அறியவரும் செய்திகள்

அகநானூறு 159
  • தெண்கழி என்னும் உப்புவயலில் விளைந்த வெள்ளைக் கல்லுப்பை விலை கூறிக்கொண்டு, கழுத்தில் வலிமை கொண்ட எருதுகள் பூட்டிய வண்டிகளை வரிசையாக உமணர்கள் ஓட்டிச் செல்வர். வழியில் சமைத்து உண்டு, சமைத்த அடுப்புகளை அப்படியே விட்டுச் செல்வர்.
  • வடித்த கூர்மையான அம்பும், கொடுமை செய்யும் வில்லும் கொண்ட ஆடவர் தம் வில்லை வளைத்துக்கொண்டு, பசுக் கூட்டத்தைக் கவர்ந்து செல்வர். எதிர்த்தவர்களோடு போராடி வெற்றி கண்டவர் தம் துடியை (உடுக்கை) அடிப்பர். துடியில் பண் முழக்குவோர் உவலைப் பூ மாலை அணிந்திருப்பர். இவர்கள், உமணர் விட்டுச் சென்ற அடுப்பில், தாம் வேட்டையாடியவற்றை வாட்டித் தின்பர். பல வழிகள் பிரியும் கடும்பாதையில் இது நிகழும்.
  • ஆமூர் அக் காலத்தில் சிறந்து விளங்கிய ஊர். அது இடி முழங்கும் குறும்பாறை மலைக்குக் கிழக்கில் இருந்தது. (இது இப்போது வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆமூர்) இதனை வானவன் என்னும் சேர மன்னன் தாக்கினான். ஆமூர் அரசன் கொடுமுடி என்பவன் வானவனின் யானையை வீழ்த்தி ஆமூரைக் காப்பாற்றினான்.

பாடல் நடை

அகநானூறு 159

பாலைத் திணை

தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர்
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி,
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும்
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன்
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின்
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.

(தெண்கழி என்னும் உப்புவயலில் விளைந்த வெள்ளைக் கல்லுப்பை விலை கூறிக்கொண்டு, கழுத்தில் வலிமை கொண்ட எருதுகள் பூட்டிய வண்டிகளை வரிசையாக உமணர்கள் ஓட்டிச் செல்வர். வழியில் சமைத்து உண்டு, சமைத்த அடுப்புகளை அப்படியே விட்டுச் செல்வர்.வடித்த கூர்மையான அம்பும், கொடுமை செய்யும் வில்லும் கொண்ட ஆடவர் தம் வில்லை வளைத்துக்கொண்டு, பசுக் கூட்டத்தைக் கவர்ந்து செல்வர்.எதிர்த்தவர்களோடு போராடி வெற்றி கண்டவர் தம் துடியை (உடுக்கை) அடிப்பர். துடியில் பண் முழக்குவோர் உவலைப் பூ மாலை அணிந்திருப்பர். இவர்கள், உமணர் விட்டுச் சென்ற அடுப்பில், தாம் வேட்டையாடியவற்றை வாட்டித் தின்பர். பல வழிகள் பிரியும் கடும்பாதையில் இது நிகழும். இந்த வழியில் காதலர் சென்றுள்ளார் என்று அவலம் கொள்ளாதே, தோழி அந்த ஆமூர் நீண்ட மதில் சுவரைக் கொண்டது. மறைந்திருந்து தாக்கும் குகைகளைக் கொண்டது. அந்த ஆமூர் வாழ்க்கையே காதலர்க்குக் கிடைப்பதாயினும் பூண் அணிந்த உன் மார்பில் பொருந்திக் கிடப்பதை மறந்து ஆமூரில் தங்கியிருக்க மாட்டார், உன் காதலர்.)

நற்றிணை 264

பாலைத் திணை உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறுத்தியது

பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர
ஏகுதி- மடந்தை!- எல்லின்று பொழுதே:
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே.

(மடந்தைப் பெண்ணே! பொழுது இருட்டுவதைப் பார். பாம்பு வளைக்குள் நுழையும்படி வானம் மழை பொழியும் காலம் தோன்றும்போது, மணிநிறப் பிடரியைக் கொண்ட ஆண்மயில் தன் அழகு ஒளிறும் தோகையை விரித்துக்கொண்டு ஆடுவது போல, பூச்சூடிய உன் மென்மையான கூந்தல் காற்றில் அசைந்தாடச் செல்வாயாக.மூங்கில் காட்டில் மேய்ந்த பசுக்களைக் கோவலர் ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் மணியொலி இங்குக் கேட்கிறதே அதுதான் என்னுடைய நல்ல சிற்றூர்.)

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.