standardised

அரு. சு. ஜீவானந்தன்

From Tamil Wiki
Revision as of 10:16, 8 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
அரு.சு. ஜீவானந்தன்

அரு.சு. ஜீவானந்தன் (ஆகஸ்ட்  19, 1948) மலேசிய நவீன இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களில் ஒருவர்.  'இலக்கியச் சிந்தனை' எனும் அமைப்பைத் தோற்றிவித்தவர். சிறுகதை எழுத்தாளர்.

தனி வாழ்க்கை

அரு. சு. ஜீவானந்தன் ஆகஸ்ட்  19, 1948-ல் கோலாசிலாங்கூரில் உள்ள மன்மவுத்தோட்டத்தில் பிறந்தார். அப்பாவின் பெயர் அருமைநாதன். அம்மாவின் பெயர் சுந்தரம். எட்டு சகோதர சகோதரிகள் உள்ள குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார் ஜீவானந்தன். ஆரம்பக் கல்வியை மன்மவுத் மற்றும் சுங்கை பூலோ தோட்ட தமிழ்ப்பள்ளியில் பயின்றார். 1962 முதல் 1967இல் இடைநிலைக்கல்வியை கம்போங் குவாந்தானில் தொடர்ந்தார். பின்னர், 1976இல் லண்டனுக்குச் சென்று கணினித்துறையில் பயின்றார். 1977இல் திருமணம் செய்துக்கொண்ட இவர் மனைவியின் பெயர் வள்ளியம்மை. இவருக்கு மூன்று குழந்தைகள். 1970 முதல் 1975 வரை மலேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார் ஜீவானந்தன். 1997இல் அவர் சிக்கிய மோசமான விபத்துக்குப் பின்னர் எழுதுவதை பெரும்பாலும் குறைத்துக்கொண்டார். 2000 முதல் 2015 வரை சுய தொழில்களில் ஈடுபட்டார். விபத்தில் ஏற்பட்ட முதுகெலும்பு பாதிப்பால்  2015க்குப் பின்னர் முழுமையாக ஓய்வில் இருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

1965இல் தமிழ் இளைஞர் மணிமன்றம் மூலம் மொழியின் மீது ஜீவானந்தனுக்குப் பிடிப்பு ஏற்பட்டது. பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், திருக்குறள் போட்டி என ஆர்வமாகப் பங்கெடுத்தார். மணிமன்றம் வழியாகவே இவருக்கு எழுதுவதற்கான தூண்டுதல் ஏற்பட்டது. 1967இல் இவரது முதல் கட்டுரை தமிழ் நேசன் நாளிதழில் பிரசுரமானது. தொடர்ந்து தமிழ் முரசு, தமிழ் மலர் போன்ற நாளிதழ்களுக்கும் வானொலியில் இளைஞர் உலகம் பகுதிக்கும் ஆர்வமாகப் படைப்புகளை அனுப்பினார்.

ஆரம்பத்தில் மு. வரதராசன், சி.என். அண்ணாதுரை போன்றவர்களின் படைப்புகளை வாசித்தவர், இதழ்கள் வழியாக சுஜாதா மற்றும் ஜெயகாந்தனை அறிந்தார். ஜெயகாந்தன் எழுத்துகள் இவருக்கு ஆதர்சமானப் பின்னர் தன் புனைவுகளில் மாற்றங்களை கொண்டு வந்தார். அக்காலக்கட்டத்தில் 'தமிழ் நேசன்' நாளிதழ் நடத்திய சிறுகதைக்கான பவுன் பரிசு திட்டத்தின் கீழ் இவருக்கு 1972, 1974, 1976 என தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கம் கிடைத்தது.

1973இல்  தொடங்கப்பட்ட 'இலக்கிய வட்டம்' சிற்றிதழ் இவரது புனைவு முயற்சிக்கு தகுந்த களமாக அமைந்தது. அவ்விதழை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு சிறுகதைகள் எழுதினார்.

1976இல் லண்டனில் கணினித்துறை பயிலச் சென்ற ஜீவானந்தனுக்கு மார்க்ஸிய சித்தாங்கள் அறிமுகமாயின. மார்க்ஸிய நூல்களையும் இலக்கியங்களையும் வாசிக்கத் தொடங்கினார்.

இவரது சிறுகதை தொகுப்பு 1994இல் வெளியீடு கண்டது.

இலக்கியச் செயல்பாடுகள்

அரு. சு. ஜீவானந்தன் 1985இல் தன் நண்பர்களுடன் இணைந்து 'இலக்கியச் சிந்தனை' எனும் அமைப்பைத் தொடக்கினார். இக்குழுவில் எம். குமாரன், சாமி மூர்த்தி, மு. அன்புச்செல்வன் இணைந்தனர். மாதந்தோறும் பத்திரிகைகளில் வரும் கதைகளைப் படித்து அதில் சிறந்த கதைகளுக்குப் பரிசுகள் கொடுப்பது, சிறுகதை போட்டி நடத்துவது  என இவ்வியக்கத்தின் வழி செயல்பட்டார். பின்னர் மா. சண்முகசிவாவுடன் இணைந்து 'அகம்' எனும் இலக்கியக் குழுவைத் தோற்றுவித்து இயங்கினார். இக்குழுவில் சாமி மூர்த்தியும் இணைந்துகொண்டார். அவ்விலக்கிய குழுவின் வழி மாதம் ஒரு நூல் குறித்து உரையாடினர். மூத்த எழுத்தாளர்களை அழைத்துவந்து 'மயில்' இதழ் அலுவலகத்தில் நேர்காணல் செய்தனர். சுந்தர ராமசாமி, எஸ். வி. ராஜதுரை போன்ற ஆளுமைகளுடன் உரையாடல்களை ஏற்பாடு செய்தார்.

இலக்கிய இடம்

மலேசியத் தமிழ் புத்திலக்கியத்தில் அரு. சு. ஜீவானந்தனின் புனைவுகளை முற்போக்கு அழகியலின் தொடக்கமாக வரையறை செய்யலாம். தொடக்கத்தில் மிகை உணர்ச்சியும் மேலோங்கிய பிரச்சாரமும் இவர் சிறுகதைகளில் தொணித்தாலும் பின்னாளில் இவர் எழுதிய  'அட இருளின் பிள்ளைகளே', 'புள்ளிகள்' போன்ற சிறுகதைகள் இவர் தனக்கான தனித்த எழுத்துலகை கண்டடைந்ததற்கான சான்றுகள்.

பரிசுகள், விருதுகள்

  • 1972, 1974, 1976 ஆகிய மூன்று ஆண்டுகள் தமிழ் நேசன் நாளிதழின் தங்கப்பதக்கம் இவர் சிறுகதைகளுக்குக் கிடைத்தன
  • முருகு சுப்பிரமணியன் தங்க விருது - 2016
  • அரு. சு. ஜீவானந்தன் சிறுகதைகள் தொகுப்புக்கு கோயம்புத்தூர் லில்லி தேவசிகாமணி அறவாரியத்தின் பரிசு - 1997

நூல்கள்

  • அரு. சு. ஜீவானந்தன் சிறுகதைகள் - 1994

உசாத்துணை

  • மீண்டு நிலைத்த நிழல்கள் - 2018

இணைய இணைப்பு



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.