second review completed

அருணந்தி சிவாசாரியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
அருணந்தி சிவாசாரியார்( சகலாகம பண்டிதர், அருணந்தி தேவ நாயனார்) (பொ.யு. 1195-1250) மெய்கண்ட சந்தானத் துறவியருள் ஒருவர். மெய்கண்டாரின் தலைமை மாணாக்கர். சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு மெய்கண்ட சைவ சித்தாந்த நூல்களை இயற்றியவர்.  
அருணந்தி சிவாசாரியார்( சகலாகம பண்டிதர், அருணந்தி தேவ நாயனார்) (பொ.யு. 1195-1250) புறச்சந்தான குரவர்கள் எனும் மெய்கண்ட சந்தானத் துறவியருள் ஒருவர். மெய்கண்டாரின் தலைமை மாணாக்கர். சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு மெய்கண்ட சைவ சித்தாந்த நூல்களை இயற்றியவர்.  


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==

Revision as of 04:45, 3 May 2024

அருணந்தி சிவாசாரியார்( சகலாகம பண்டிதர், அருணந்தி தேவ நாயனார்) (பொ.யு. 1195-1250) புறச்சந்தான குரவர்கள் எனும் மெய்கண்ட சந்தானத் துறவியருள் ஒருவர். மெய்கண்டாரின் தலைமை மாணாக்கர். சிவஞான சித்தியார், இருபா இருபஃது என்னும் இரு மெய்கண்ட சைவ சித்தாந்த நூல்களை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அருணந்தி சிவாசாரியார் நடு நாட்டின் திருத்துறையூரில் ஆதிசைவ அந்தண குலத்தில் பொ.யு. 1195-ல் பிறந்தார். இவரது இயற்பெயரும் பெற்றோர் பெயரும் அறியவரவில்லை.

உரிய வயதில் வேதம்‌ வேதாங்கங்களைக் கற்றுணர்ந்தார். சிவதீட்சை பெற்றார். காமிகமாதி சைவாகமங்கள்‌ இருபத்தெட்டினையும்‌, மிருகேந்திரமாதி இருநூற்றேழு உபாகமங்களையும்‌ பயின்று 'சகலாகம பண்டிதர்‌' என்று பெயர் பெற்றார். தமிழிலும் வடமொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார். அவரிடம் பல மாணாக்கர் கல்வி பயின்றனர்.

சகலாகம பண்டிதரின் மாணாக்கர்களுள் வேளாளர் குலத்தலைவர் அச்சுத களப்பாரும் ஒருவர்.

ஆன்மிக வாழ்க்கை

மெய்கண்டார் பிறந்ததுகுறித்த தொன்மம்

சகலாகம பண்டிதரின் ஆணைப்படி திருவெண்காடு சென்று நோன்பிருந்து வேண்டிக்கொண்டு பிறந்த மைந்தர் மெய்கண்டார். அச்சுத களப்பாருக்குக் குழந்தைப் பேறு இல்லாமையால் குலகுருவின் அருளை வேண்டினார். சகலாகம பண்டிதர் திருமுறைகளை ஓதித் துதித்து கயிறுசார்த்திப் பார்த்தபோது[1] ஞானசம்பந்தரின் திருவெண்காட்டு திருப்பதிகத்தின் இரண்டாம்‌ பாடல்‌ (பேயடையா எனத் தொடங்கும் தேவாரம்) காணப்‌ பட்டது. அதை நிமித்தமாகக் கொண்டு அச்சுதகளப்பாரும் , மங்களாம்பிகையும் திருவெண்காட்டில் தங்கி முக்குளநீரில்‌ நீராடி, வெண்காட்டுப் பெருமானைத் துதித்து வந்தனர். ஒரு ஆண் குழந்தையைப் பெற்று சுவேதவனப்பெருமான்‌ (வெண்காட்டார்) எனப் பெயரிட்டனர். அக்குழந்தை பரஞ்சோதி முனிவரிடம் உபதேசம் பெற்று இளம் வயதிலேயே மெய்யுணர்வு பெற்று மெய்கண்டார் என அறியப்பட்டது.

மெய்கண்டாரை குருவாக ஏற்றல்

சகலாகம பண்டிதர் மெய்கண்டார் அருளுரை கூறுவதை அறிந்து அவரைப் பார்க்கவந்தார். மெய்கண்டார் அருளுரையில் மூழ்கியிருந்தமையால் அவரைப் பொருட்படுத்தவில்லை. அதைக்கண்டு ஆணவம் புண்பட்ட பண்டிதர் "ஆணவமலத்தின் மெய்நிலை என்ன?' என்று மெய்கண்டாரைக் கேட்டார். மெய்கண்டார் பண்டிதரைச் சுட்டிக்காட்டினார். அதை கண்டதும் ஆணவம் அழிந்த பண்டிதர் மெய்கண்டாரின் மாணவரானார்.

மெய்கண்டார் சைவ குருபரம்பரையின் முதல்வரான நந்திதேவரின் பெயரை 'அருள்நந்தி" என்ற தீக்கைப்பெயராகச் சூட்டி சிவஞான போதத்தை உபதேசித்து, பண்டிதரைத் தன் தலைமை மாணாக்கராக ஏற்றார்.

சைவ சித்தாந்தம்

மெய்கண்டாரின் நாற்பத்தொன்பது மாணவர்களில் அருணந்தி சிவாசாரியாரே முதன்மையானவர். சைவ சித்தாந்தத்தின் 14 மெய்கண்ட சாத்திரங்களில் இரு நூல்கள் அருணந்தி சிவாசாரியார் எழுதியவை.

மெய்கண்டாரின் ஆணைப்படி மெய்கண்டாரின் சிவஞானபோதம் நூலுக்கு விளக்கமாக சிவஞான சித்தியார் என்னும் நூலை எழுதினார். சிவஞான சித்தியார் பரபக்கம்(301 செய்யுள்கள்), சுபக்கம்(328 செய்யுள்கள்) என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது. பரபக்கம் உலகாயதம், பௌத்தம், சமணம், மீமாம்சை, ஏகான்மவாதம், சாங்கியம், பாஞ்சராத்திரம் ஆகிய மதங்களின் கருத்துகளையும்,அவை தத்துவ உலகத்திற்குப்  பொருந்தாதவை என்ற மறுப்புக்களையும் கூறுகிறது. சுபக்கம் மெய்கண்டாரின் சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களின் கருத்துகளையும், அவை தருகின்ற விளக்கங்களையும் விளக்கும் உரைநூலாகச் செய்யுள் வடிவில் அமைந்துள்ளது.

இருபா இருபஃது அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான மெய்கண்ட தேவர் பதிலளிப்பது போன்ற வினா விடை நூலாக அமைந்துள்ளது. இது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களினதும் இயல்புகளை விளக்கும் இந்நூல் பத்து வெண்பாக்களும், பத்து ஆசிரியப்பாக்களும் மாறி மாறி வரும்படி அமையும் இருபா இருபஃது என்னும் சிற்றிலக்கிய வகைமையைச் சார்ந்தது.

மறைஞான சம்பந்தர் அருணந்தி சிவாசாரியாரின் மாணவர். அவருக்கு அருணந்தியார் தன் இரு நூல்களையும் உபதேசம் செய்தார்.

இறப்பு

அருணந்தி தேவ நாயனார்‌ திருத்துறையூரில் பொ.யு. 1250-ல் புரட்டாசித் திங்கள் பூரம் அன்று சமாதியடைந்தார். இவரது சமாதித் திருக்கோயில் திருத்துறையூரில்(திருத்தளுர்) சிஷ்டகுருநாதர் கோயிலுக்கு எதிரே செல்லும் தெருவின் முடிவில் அமைந்துள்ளது. அங்கு ஆண்டுதோறும் புரட்டாசி பூரநாளில் இவரது குருபூஜை நடைபெறுகிறது. 

பாடல் நடை

அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே
    அறிவுதளை அருளினால் அறியாதே அறிந்து
 குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும்
    கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயிற்
 பிறியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப்
    பிரபஞ்ச பேதமெல்லாந் தானாய்த் தோன்றி
 நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி
    நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதாரன் ஆயே"
- சிவஞான சித்தியார், 8. 2 - 20.

நூல்கள்

  • சிவஞான சித்தியார்
  • இருபா இருபஃது

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. கயிறு சார்த்திப் பார்ப்பது-பிரச்சினைகள் தீர இறைவனின் உத்தரவு/நிமித்தம் வேண்டி சமய நூல்களில் நூலை நுழைத்து திறந்து அது சென்ற பக்கத்தில் உள்ள செய்தியை நிமித்தமாக/செய்தியாகக் கொள்வது.



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.