under review

அம்மெய்யன் நாகனார்

From Tamil Wiki
Revision as of 11:43, 28 November 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva

அம்மெய்யன் நாகனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்று சங்க இலக்கிய தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

அம்மெய்யன் நாகனாரின் இயற்பெயர் நாகன் என்பதாகும். நாகன் என்ற பெயரில் பல புலவர்கள் இருந்ததால் இவரை தனித்துக் குறிக்க அம்மெய்யன் என்ற அடைமொழியை சேர்த்துள்ளனர். இதுவன்றி, அம்மெய்யன் என்பது நாகனாரின்  தந்தை பெயர் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

இலக்கிய வாழ்க்கை

அம்மெய்யன் நாகனார் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கிய தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் 252- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. தலைவன் பொருள் தேடச் செல்ல தலைவி தடை சொல்லக்கூடாது, அழக்கூடாது என தோழி அறிவுறுத்துவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

நற்றிணை 252
  • பாலைத் திணை
  • பொருள்வயிற் பிரியும்'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.
  • உலர்ந்த ஓமை மரத்தில்  இருக்குமிடம் தெரியாமல் ஒடுங்கிக்கொண்டு ‘சில்வீடு’ என்னும் வண்டு ஒலிக்கும் வழியில் தொலைநாடு சென்று  திறமையுடன் பொருள் தேடிக்கொள்ளாதவருக்கு வாழ்க்கை இல்லை என்று அவர் நெஞ்சம் அவரை இழுக்கிறது.
  • அவர் செல்லும்போது இடையே தடுத்து நிறுத்தக்கூடாது என்று இவள் நினைத்தாள் போலும்.
  • கலை வேலைப்பாடு உள்ள சுவரில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புடைப்போவியம் போன்று  அழகுடன் திகழ்பவள் இவள்.
  • நுட்பமாகப் பக்கம் உயர்ந்த அல்குலை உடையவள். இருள் நிற மலர் இதழ்கள் இரண்டைப் பிணைத்து வைத்தாற்போன்ற கண்கள் மட்டும் மழை பொழிகின்றன.
  • முயல் வேட்டைக்கு முடுக்கிவிடப்படும் நாயின்  நாக்குப் போன்ற மென்மையான உள்ளங்கால் அடிகளைக் கொண்டவள். பொம்மிய கூந்தலை உடையவள்.  அணிகலன் பூண்டவள்.
  • இவள் குணம் இப்படிப் பக்குவப்பட்டுக் காணப்படுகிறதே,

பாடல் நடை

நற்றிணை 252

உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி,
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்,
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது,
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்' என,
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த
வினை இடை விலங்கல போலும்- புனை சுவர்ப்
பாவை அன்ன பழிதீர் காட்சி,
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய்
நல் நாப் புரையும் சீறடி,
பொம்மல் ஓதி, புனைஇழை குணனே!

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

நற்றிணை 252,  தமிழ்த் துளி இணையதளம்

நற்றிணை 252, தமிழ் சுரங்கம் இணையதளம்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.