first review completed

அதிஷா

From Tamil Wiki
அதிஷா

அதிஷா (சு. வினோத் குமார்) (பிறப்பு: மார்ச் 6, 1983) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், இதழியலாளர், திரைக்கதையாசிரியர். விளையாட்டு, சினிமா, அறிவியல், சுற்றுசூழல் ஆகியவற்றைப் பற்றிய கட்டுரைகள் எழுதினார். ஆனந்தவிகடன், தடம் இதழ்களின் இதழாசிரியராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

அதிஷாவின் இயற்பெயர் வினோத் குமார். அதிஷா கோயம்புத்தூரில் மு.சுப்ரமணியம், சித்ரா இணையருக்கு மார்ச் 6, 1983-ல் பிறந்தார். கோவை புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் டிப்ளமோ பயின்றார். மாரத்தான் ஓட்டத்தில் ஆர்வம் உடையவர்.

இதழியல்

அதிஷா பதினைந்து ஆண்டுகள் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். 2009 தொடங்கி ஏழாண்டுகள் புதிய தலைமுறையில் நிருபராக இருந்தார். 2016 முதல் 2018 வரை ஆனந்தவிகடனில் இணை ஆசிரியராக இருந்தார். 2018 முதல் 2020 வரை ஆனந்தவிகடனின் இதழாசிரியராக இருந்தார். இந்த காலகட்டத்தில் தடம் இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார். தற்போது சுயாதீனப் பத்திரிக்கையாளராக உள்ளார்.

திரை வாழ்க்கை

அதிஷா குறும்படங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சித் தொடர்களுக்கு திரைக்கதை எழுதி வருகிறார். 2023-ல் வெளியான 'ரத்தம்' திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

அதிஷா 2008 முதல் வலைப்பூ வழியாக எளிய நகைச்சுவைக் கட்டுரைகள், புனைவுகள் எழுதத் தொடங்கினார். அதன் வழியாக இதழியலில் பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது. ஆனந்தவிகடனில் நகைச்சுவைக் கட்டுரைகள் பல எழுதினார். விளையாட்டு, சினிமா, அறிவியல், சுற்றுசூழல், இலக்கியம் ஆகிய தலைப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார். ஆனந்த விகடன், குங்குமம், குமுதம், தமிழ் இந்து, தினமலர், தினகரன், உயிர்மை, தடம், அந்திமழை, சூரியகதிர், 'அரண் செய்' ஆகிய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்தன.

அதிஷாவின் முதல் சிறுகதை 'கெட்டவார்த்தை' ஆனந்த விகடனில் 2010-ல் வெளியானது. முதல் நூல் 'ஃபேஸ்புக் பொண்ணு' சிறுகதைத் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்தது. ஆதர்ச எழுத்தாளர்களாக சுஜாதா, ஷோபாசக்தி, வைக்கம் முகம்மது பஷீர், அசோகமித்திரன், ஜெயமோகன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • உயிர்மையின் சுஜாதா விருது – 2014

இலக்கிய இடம்

அதிஷா எளிய நடையில் விளையாட்டு, சினிமா, அறிவியல், சுற்றுசூழல் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி வருபவராக அறியப்படுகிறார்.

நூல் பட்டியல்

சிறுகதை தொகுப்பு
  • ஃபேஸ்புக் பொண்ணு (உயிர்மை, 2015)
கட்டுரைகள் தொகுப்பு
  • சொல் அல்ல செயல் (விகடன் பிரசுரம், 2016)
  • சர்வைவா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நேற்று இன்று நாளை (விகடன் பிரசுரம், 2018)
  • ஆண்பால், பெண்பால், அன்பால் (விகடன் பிரசுரம், 2017)
  • நாம் ஏன் உடற்பயிற்சிகளை கைவிடுகிறோம் (தமிழ்வெளி, 2021)

இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.