first review completed

திருப்பள்ளியெழுச்சி (தொண்டரடிப்பொடியாழ்வார்)

From Tamil Wiki
Revision as of 14:17, 29 December 2022 by Madhusaml (talk | contribs)

தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி திருவரங்கத்தில் கோவில் கொண்ட அரங்கனைத் துயிலெழுப்பும் பதிகம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் ஆறாம் பிரபந்தமாக இடம்பெறுகிறது. மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் திருவரங்கத்தில் விஸ்வரூப சமயத்தில் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் வீணை கானத்துடன் பாடப்படுகின்றன. மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் வெங்கடேச சுப்ரபாதத்திற்குப் பதிலாக, தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கனின் திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது. பெருமாளை திருக்கண் மலர செய்ய, ஆழ்வார் வேண்டிய பாடல்கள் ஆனதால், இதற்கு திருப்பள்ளியெழுச்சி என்ற பெயர். நாலாயிரத்தில் வேறு எந்த பிரபந்தத்திற்கும் இல்லாத பெருமையாக, நேரடியாக ஓர் வழிபாட்டுச் செயலைக் கொண்டு தலைப்பு பெற்ற பிரபந்தம் திருப்பள்ளியெழுச்சியின் தத்துவப் பொருள் உறங்கலும் விழித்தலும் இல்லாத இறையை துயிலெழுப்பும் முகமாய், மாந்தர் தமக்குள் மறைந்த இறையைத் துயிலெழுப்புதலாகும்.

ஆசிரியர்

வைணவ திருப்பள்ளியெழுச்சியை இயற்றியவர் தொண்டரடிப்பொடியாழ்வார் (இயற்பெயர்: விப்ரநாராயணர்). வைணவ அடியார்களின் பாத தூளியாய் அவைகளுக்குத் தொண்டு செய்ததால் 'தொண்டரடிப்பொடி' எனப் பெயர் பெற்றார். திருவரங்கத்தில் புஷ்ப கைங்கர்யம் (மலர்ச்சேவை -துளப மாலைகளும், பூமாலைகளும் கட்டும் பணி) செய்து வந்தார்.

திருப்பள்ளியெழுச்சி இயற்றல்-குருபரம்பரைக் கதை

திருமாலைக்கு உரையெழுதிய நஞ்ஜீயர் தன் உரையில், "உலக இன்பங்களில் உழன்று கிடந்த ஆழ்வாரை, அரங்கன் விழிப்பித்தான். அரங்கனைக் காணவந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தன்னைக் கண் திறந்து பாராமல், யோக நித்திரையில் இருக்கும் அரங்கனைக் கண் விழிக்கச் செய்வதற்காக இயற்றியது திருப்பள்ளியெழுச்சி" எனக் குறிப்பிடுகிறார்.

திருமாலையை இயற்றிய பின்பு ஆழ்வார் அரங்கன் கண் மலர்ந்து தன்னை ஆட்கொள்ள வேண்டிக் காத்திருந்தார். யோக நித்திரையில் இருந்த பெருமாளை, எல்லாம் தயாராக உள்ளது, திருக்கண் மலர்ந்து தொண்டரடிப்பொடி என்னும் தன்னை பகவத் பாகவத கைங்கர்யம் செய்ய தகுந்தவன் என்று அருள் புரிய வேண்டும் என்பதை “அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய்” என்று பிரார்த்திக்கும் பிரபந்தம் ஆகும்.

பார்க்க: தொண்டரடிப்பொடியாழ்வார்

பெயர்க்காரணம்

சங்க காலங்களில் மன்னர்களை அதிகாலையில் துயிலெழுப்பப் பாடும் பாடல் வகை துயிலெடை நிலை எனப்பட்டது. (தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்-தொல்காப்பியம் 1037). பன்னிரு பாட்டியலும் துயிலெடை நிலைக்கு இலக்கணம் கூறியுள்ளது. பக்தி இயக்க காலத்தில் சமுதாயத்தில் நிலவிவந்த இவ்வழக்கம் இறைவனை எழுப்புவதற்காக அமைந்தது. மன்னர்களைப் பாடும் இலக்கிய வகைமை இறைவனைப் போற்றித் துயிலெழுப்பும் போது' திருப்பள்ளியெழுச்சி' எனப் பெயர் பெற்றது. சமஸ்கிருதத்தில் இது 'சுப்ரபாதம்' என அழைக்கப்படுகிறது.

முதனூல் கருத்த னளவு மிகுதி
பொருள்செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும்
இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே.

என்று நன்னூல் கூறுவதுபோல் நூலில் கூறப்பட்ட விஷயத்தைக் கொண்டு (நுதலிய பொருளால்) திருப்பள்ளியெழுச்சி என்று பெயர் பெற்றது.

நூல் அமைப்பு

திருப்பள்ளியெழுச்சி பத்து ஆசிரியப்பாக்களால் ஆன பதிகம். திருமலைஆண்டான் வடமொழியிலும், திருவரங்கப் பெருமாள் அரையர் தமிழிலும் இரு தனியன்கள்(பாயிரங்கள்) இயற்றியுள்ளனர். ஒவ்வொரு பாடலும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே என்று முடிவடைகிறது.

பாடல்களில் புலரியின் காட்சிகள் விரிகின்றன. அருணன் எழ, இருள் சற்றே விலகுகிறது, மலர்களும் கமுகுப் பாளைகளும் இனிய மணத்துடன் விரிகின்றன. மலர்ந்த மலர்களின் மணத்தை ஏந்தி மாருதம் வீசுகிறது. புலரிக்குரிய புள்ளினங்களின் ஓசை, மேய்ச்சலுக்குச் செல்லும் ஆநிரைகளின் கழுத்து மணியோசை, ஆயர்களின் குழலோசை, காலைப்பொழுதுக்கான தண்ணும்மை, எக்கம் ஆகிய வாத்தியங்களிலிருந்து வரும் இசை, பரிவாரங்களுடன் அரங்கன் கண் மலரக் காத்து நிற்கும் தேவர்கள், மானிடர்களின் கடலலை போன்ற அரவம் ஆகிய ஒலிகள் எங்கும் நிறைந்தன எனவே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்! என அழைக்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

கஜேந்திரன் என்னும் யானையின் அருந்துயர் நீக்கிய, விஸ்வாமித்ர மாமுனியின் வேள்வியைக் காத்த, சுடரும் சக்கரத்தை ஏந்திய அரங்கத்தம்மா, என அடியார்க்கு அருள் செய்யும் தன்மையைக் கூறி பள்ளி எழுந்தருள்வாய் என வேண்டுகிறார். தோளில் துளப மாலையும், கையில் பூக்குடலையுமாக நிற்கும் தன்னை அரங்கன் தன் அடியவர் சேவைக்குத் ஆட்படுத்தி அருள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் ('அடியனை அளியனென்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே!').

இலக்கிய/பண்பாட்டு இடம்

ஒரு நூலில் அல்லது காவியத்தில், ஒரே பொருளை அல்லது நிகழ்வை முதலிலும், முடிவிலும் சொல்வது ஓர் முழுமையை அளிப்பதால் சிறப்பாகக் கருதப்படுகிறது. திருப்பள்ளியெழுச்சியில் “கதிரவன் குணதிசை வந்து அடைந்தான்” என்றும், “மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் ” என்றும் தொடங்கும் திருப்பள்ளியெழுச்சி “கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ, கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ “ என்று முடிவில் அதே மலர்கள் மலர்வதையும், கதிரவன் எழுவதையும் கூறி முழுமை செய்கிறது.

கண்ணுக்கினிய காட்சிகளும் மலர்களின் அழகும், காதுக்கினிய ஓசைகளும், இனிய மணமும், தென்றல் காற்றும் என ஐம்புலன்களையும் மகிழ்விக்கும் காலைப் பொழுதின் மனதை கவரும் சித்தரிப்பு இப்பிரபந்தத்திற்கு அழகு சேர்க்கிறது.

மார்கழி அதிகாலைகளில் அனைத்து வைணவ ஆலயங்களிலும் திருப்பாவை பாசுரங்களுக்கு முன் திருப்பள்ளியெழுச்சி சேவிக்கப்படுகிறது[1]/பாடப்படுகிறது. திருப்பதி போன்ற மற்ற மாநிலங்களில் உள்ள வைணவ ஆலயங்களிலும் மார்கழி அதிகாலைகளில் இறைவனைத் துயிலெழுப்ப வெங்கடேச சுப்ரபாதத்திற்கு பதிலாக தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகிறது. தமிழுக்கும் ஆழ்வார்களுக்கும் உரிய தனிப்பெருமையாகக் கருதப்படுகிறது. திருப்பள்ளியெழுச்சி போன்ற வழிபாட்டு முறைகள் ஓர் பண்பாட்டின் தனித்தன்மைகளாகக் கருதப்படுகின்றன.

தத்துவப் பொருள்

வடமொழியில் மிகப் பிரபலமான திருப்பள்ளியெழுச்சியான சுப்ரபாதத்தில் ராமனாக அவதரித்த திருமாலின் விபவரூபத்திற்கு (விபவம்-அவதாரங்கள்) விஸ்வாமித்திரர் "கௌசல்யா சுப்ரஜா ராமா…உத்திஷ்ட” என்று திருப்பள்ளியெழுச்சி பாடியதைப்போல் திருமாலின் அர்ச்சாவதாரத்தில் (அர்ச்சை-கோவிலில் இருக்கும் மூர்த்தம்) அரங்கனைத் துயில் எழுப்பும் விதமாக, திருப்பள்ளியெழுச்சி என்னும் பிரபந்தத்தையும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளியிருப்பதாக வைணவ உரையாசிரியர்கள் கருதுகின்றனர். அரங்கனை வைகுண்டத்தில் இருக்கும் பரம்பொருளான பரவாசுதேவனாகக் கொண்டே இந்த திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடப்பட்டு உள்ளன என திருவரங்கப் பெருமாள் அரையர் வடமொழியில் எழுதிய தனியன்[2] குறிப்பிடுகிறது.

உறங்கலும் விழித்தலும் இல்லா இறையை, தானே முழுதுணரும் இயற்கை உணர்வுள்ள இறைவனை உறங்கிவிழிக்கும் தன்மையையுடைய மானுடர் துயிலெழுப்பப் பாடுவது திருப்பள்ளியெழுச்சி. திருப்பள்ளியெழுச்சி தன்னுள் மறைந்துகிடக்கும் இறையை, ஆன்மிக உணர்வை எழுப்பும் அக விழிப்பாகவும் கருதப்படுகிறது

உறங்குவதுபோல் யோகம் செய்யும் அரங்கனை ('உறங்குவான் போல் யோகு செய்வானாய்ஆம் முதல்வன் இவன்' -திருவாய்மொழி)-உறங்கிவிழிக்கும் இயல்பினராகிய மானிடர் துயில் எழும்போது தொழுதுகொண்டு எழுதல் திருப்பள்ளியெழுச்சி.

திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்-எளிய பொருளுடன்

தனியன் -திருவரங்கப்பெருமாள் அரையர்

மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னிய சீர்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் வண்டுதிணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப்
பள்ளி உணர்த்தும் பிரான் உதித்த ஊர்

(வண்டுகள் மீண்டும் மீண்டும் வந்து அணையும் தேன் நிறைந்த சோலைகள் சூழ் திருவரங்கத்தில் பள்ளிகொண்ட அரங்கனை துயில் எழுப்பி, நமக்குப் பேருபகாரம் செய்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த ஊர் திருமண்டங்குடி என்று மறையறிந்த பெரியோர்கள் கூறுவர்.

கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
கனவிருளகன்றது காலையம் பொழுதாய்,
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே. 1

அரங்கா, கதிரவன் கிழக்கு திக்கில் உதித்துவிட்டான்.இரவின் அடர்ந்த இருள் அகன்று காலை புலர்ந்து விட்டது. அழகிய மலர்களெல்லாம் தேன்வழிய மலர்ந்துவிட்டன.தேவர்களும், அரசர்களும் திரண்டு உன் திருக்கண்கள் நோக்கிய தெற்கு திக்கில் கூடிவிட்டனர். ஆண் யானைகளும், பெண் யானைகளும், வாத்தியங்களும் சேர்ந்து ஒலிக்கும் அரவம் அலைகடலின் ஓசையை ஒத்திருந்தது. எனவே இனியும் பள்ளியில் (சயனத்தில்) இருக்கலாகாது. நீ விரைவில் எழுந்து அருள்வாயாக.

கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்
கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ,
எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்
ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி,
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்
வெள்ளெயி றுறவதன் விடத்தினுக் கனுங்கி,
அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே.

நன்கு மலர்ந்த மல்லிகைக் கொடிகளைத் தடவி வந்த கீழ்க்காற்று வீசிக்கொண்டிருக்கிறது. அந்த மலர்ப்படுக்கையில் உறங்கும் அன்னங்கள் மழைபோலே பொழிந்த பனியாலே நனைந்த தங்கள் சிறகுகளை உதறிக்கொண்டு எழுந்தன. தன்னுடைய கூரிய விஷப் பற்களாலே கடித்துத் துன்புறுத்தி, தன் குகை போன்ற பெரிய வாயாலே கஜேந்திரன் என்ற யானையின் காலை விழுங்கப்பார்த்த முதலையைக் கொன்று கஜேந்திரனின் துயரைப் போக்கிய அரங்கா! பள்ளி எழுந்து அருள்வாயாக!

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம்
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி இவனோ
பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடை கீறிவண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடலொளிதிகழ் தரு திகிரியந்தடக்கை
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

பார்க்கும் திசையெல்லாம் சூரிய ஒளி படர்ந்து விட்டது. இரவில் ஒளிரும் விண்மீன்களும், நிலவும் ஒளி குறைந்தன.பரந்த இருள் நீங்கிவிட்டது. விடியல் காற்று சோலைகளிலுள்ள பாக்குமரங்களிடையே மடலைக்கீற அந்த அழகிய பாளைகளின் மணத்தைப் பெற்றுக்கொண்டு வீசுகிறது. ஒளிபொருந்திய சுதர்சனம் என்னும் ஆழியைக் கையில் ஏந்திய அரங்கா! துயில் எழுவாய்.

புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனைகடல் அரவம்
களிவண்டும் இழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலன்தொடையல் கொண்டடியினைப் பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலாங்கையர்கோண் வழிபாடு செய்கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

மலர்ந்துநின்ற சோலையிலுள்ள பறவைகள் ஒலியெழுப்புகிறன. இரவு கழிந்து காலைப் பொழுது புலர்ந்தது. கிழக்கு திசையில் ஆரவாரிக்கும் கடலினுடைய ஓசை சூழ்கிறது. தேனைப் பருகிக் களித்த வண்டுகள் முரல்கின்றன.பலவகைப் பூக்களாலே தொடுக்கப்பட்ட அழகிய அலங்கல் மாலைகளை ஏந்திக்கொண்டு தேவர்கள் உன் திருவடி பணிய வந்து நிற்கிறார்கள். இலங்கை மன்னன் விபீஷணன் வழிபடும் அரங்க நகரில் பள்ளிகொண்டவனே, பள்ளி எழுந்தருளாய்!

இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ
இறையவர் பதினோரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் ஆறுமுகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
குமார தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்
அருவரையனை நின் கோயில் முன்னிவரோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

பன்னிரண்டு தமிழ் மாதங்களுக்கும் ஒவ்வொரு பெயர் கொண்ட ஆதித்யர்கள்(சூரியன்), பதினொன்று ருத்திரர்கள் (சிவன்) , தேவர்களுக்கு சேனாதிபதியான ஷண்முகக் கடவுள், அவரை படத்தலைவராகக் கொண்ட தேவர்கள், எம கிங்கரர்கள், எட்டு வசுக்கள் மற்றும் பற்பல தேவதைகள், அவர்கள் அனைவருடைய பரிவாரங்கள் என உன் திருக்கண் மலர்வதைக் காண மலை போல உயர்ந்த கோபுரங்களையுடைய உன் கோவிலின் முன் திரண்டிருக்கிறார்கள். அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருள்வாய்.

(இந்த பாசுரத்தில் முதலில் ஆறுமுகன் என்று கூறி, பின்னர் குமரதண்டம் என்று கூறுவது, முருகனின் ஆயுதத்தையும், அங்கு வந்துள்ள மற்ற எல்லா தேவதைகளின் ஆயுதங்களையும் குறிக்கும் என்பது ஒரு பொருள்)

அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வதிவனோ
எம்பெருமான் உன் கோயில் வாசல்
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவன்
அந்தரம் பாரிடமில்லை மற்றிதுவோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

அரங்கா உன் திருக்கோயிலின் வாசலிலே தேவேந்திரனும் ஐராவதமும் தவிர தேவர்களும் அவர்களின் பரிவாரங்களும் அருந்தவம் புரியும் ஸநகாதி முனிவர்களும் குழுமி நிற்கிறார்கள். மருத கணங்களும் யக்ஷர்களும், கந்தர்வர்கள் நெருக்கவும் வித்யாதரர்கள் தள்ளவும் ஆக உன் திருவடி தொழுவதற்காக மயங்கி நிற்பதால் ஆகாயத்திலும் பூமியும் இடமில்லாமல் போனது. அரங்கத்து அரவணையில் பள்ளி கொண்டவா நீ எழுந்தருள்வாயாக!

ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ்குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள்
கந்தர்வரவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவன்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

குற்றமற்ற சிறுபறையும், ஒற்றைத் தந்தி உடைய தண்னும்மையும் மத்தளமும், வீணையும், புல்லாங்குழல்களுமாய் திக்குகள் எங்கும் இவைகளின் முழக்கத்தோடு பாடல் இசைக்க, கின்னரர்களும், கருடர்களும், கந்தர்வர்களும் மற்றவர்களும் தேவர்களும், மஹரிஷிக்களும் சாரணர்களும், யக்ஷர்களும், சித்தர்களும் உன் திருவடிகளை வணங்குவதற்காக ஆவலுடன் வந்திருக்கிறார்கள். ஆகையாலே அவர்களுக்கு புலரியில் காட்சி அருள்வதற்காக அரங்கத்தம்மா நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

கடி மலர் கமலங்கள் மலர்ந்தனன் இவையோ
கதிரவன் கனைக்கடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரிக்குழல் பிழிந்துதறித்
துகிலோடு தேறினார் சூழ்புனல் அரங்கா
தொடையுற்ற துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்போடிஎன்னும்
அடியனை அளியனென்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே!

மணம் மிக்க தாமரை மலர்கள் மலர்ந்து விட்டன; கதிரவன் கனைப்பதுபோல் அலையோசை செய்ய்ம் கடலின் அப்புறம் கதிரவன் எழுந்தான் . உடுக்கை போன்ற சிறுத்த இடை மாதர் நீராடி, தமது சுருண்ட குழலைப் பிழிந்து உதறி, ஆடை உடுத்தி, காவிரிக் கரை ஏறினர். அழகாகத் தொடுக்கப்பெற்ற திருத்துழாய் மாலையையும் பூக்குடலையும் ஏந்திய தோளையுடைய தொண்டரடிப்பொடி என்ற பெயருடைய அடியேனை உன்னருளுக்கு ஏற்றவன் என்று கருதி ஆட்கொண்டு, உன் அடியவர் தொண்டில் ஈடுபடுத்த அரங்கா, பள்ளி எழுந்தருள்வாய்!

உசாத்துணை

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி-எளிய விளக்கவுரை

திருப்பள்ளியெழுச்சி உரை, acharya.org

அடிக்குறிப்புகள்

  1. திருப்பள்ளியெழுச்சி, மாலோல கண்ணன், youtube.com uploaded by amutham music
  2. தமேவமத்வா பரவாஸுதேவம்
    ரங்கேசயம் ராஜவதர்கணீயம்-
    ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
    பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.

    (வைகுண்டத்தில் வீற்றிருக்கும் பரவாசுதேவனான பரம்பொருளே திருவரங்கத்தில் அரசனாக வீற்றிருக்கிறான் என்பதை முழுதாக உணர்ந்து அவனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிய தொண்டரடிப்பொடியாழ்வாரை வணங்குகிறேன்).


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.