உறையன்
From Tamil Wiki
This page is being created by ka. Siva
உறையன், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
உறையன் என்னும் இப்புலவரின் பெயர் இயற்பெயரா அல்லது காரணப்பெயரா என்பதை அறியமுடியவில்லை.
இலக்கிய வாழ்க்கை
உறையன் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 207- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. தன் இனத்தைக் காணமுடியாமல் பலமுறை குரலெழுப்பும் பருந்தின் ஒலி தவிர வேறு ஒலிகள் இல்லாத இடம் பாலை நிலம் என இப்பாடல் நயத்துடன் உரைக்கிறது.
பாடலால் அறியவரும் செய்திகள்
குறுந்தொகை 207
- பாலைத் திணை
- செலவுக் குறிப்பு அறிந்து. ''அவர் செல்வார்'' என்று தோழி சொல்ல, தலைவி உரைத்தது.
- சொல்லிவிட்டுச் சென்றால் செல்லமுடியாது என்று சொல்லாமல் சென்றாராம். தன் கூட்டத்து இணையைப் பிரிந்த ஒற்றைப் பருந்து ஓமை மரக் கிளையில் இருந்துகொண்டு புலம்பும் குரல்தான் அவருக்குப் பேச்சுத் துணையாம். வழியில் கற்கள் சுடுவதால் கால் ஊன்ற முடியாமல் தாவித் தாவிச் செல்கிறாராம். நம்மீது அக்கறை உள்ள சிலர் இதனைப் பார்த்து வந்து சொல்கிறார்கள்.
பாடல் நடை
குறுந்தொகை 207
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென்
றத்த வோமை அங்கவட் டிருந்த
இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் மாக்கட் குயவுத்துணை யாகும்
கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி
நல்லடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்டனம் ஆர்வலர் பலரே.