வெங்கட் சாமிநாதன்
வெங்கட் சாமிநாதன் (1 ஜூன் 1933 - 21 அக்டோபர் 2015 ) தமிழ் இலக்கிய விமர்சகர். திரைப்படம், மரபிசை, நாட்டார்கலைகள் ஆகியவற்றைப் பற்றியும் தொடர்ச்சியாக அறிமுகக் கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதிவந்தார். யாத்ரா என்னும் சிற்றிதழை நடத்தினார். தேசியவிருது பெற்ற அக்ரஹாரத்தில் கழுதை என்னும் திரைப்படத்தின் கதைவசனத்தை எழுதினார்
பிறப்பு, கல்வி
வெங்கட் சாமிநாதன் 1 ஜூன் 1933 ல் கும்பகோணம் அருகே உடையாளூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். இளமையில் உடையாளூரில் இருந்து நிலக்கோட்டைக்குச் சென்று அங்கே தன் தாய்மாமனுடனும் பாட்டியுடன் தங்கினார்.14 வயதுவரை நிலக்கோட்டையிலேயே வளர்ந்தார். ஆரம்பக்கல்வியும் நடுநிலைக் கல்வியும் நிலக்கோட்டையில் நடைபெற்றது. 1946 இறுதியில் வெங்கட் சாமிநாதனின் தாய்மாமா மதுரைக்கு குடிபெயர்ந்தார். அவருடன் மதுரைக்குச் சென்ற சாமிநாதன் அங்கே மதுரையில் சேதுபதி உய்ரநிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியை தொடர்ந்தார். ஓராண்டு கழித்து 1947ல் பள்ளி இறுதிக் கல்விக்காக மீண்டும் உடையாளூர் திரும்பி அங்கிருந்து கும்பகோணம் சென்று கும்பகோணம் பாணாதுரைப் பள்ளியில் படித்தார்.
தனிவாழ்க்கை
பள்ளியிறுதிப் படிப்பை முடித்தபின் சாமிநாதன் உறவினர் ஒருவரின் அழைப்பின் பேரில் 1950ல் ஒரிசாவில் ஹிராகுட் அணை கட்டப்படும் பணியில் ஊழியராகச் சேர்ந்தார். அங்கிருந்து மத்திய அரசுப்பணித் தேர்வெழுதி வென்று டெல்லியில் பணிக்குச் சேர்ந்தார். ஓய்வு பெறும்வரை டெல்லியில் வாழ்ந்தார். பின்னர் சென்னையில் வாழ்ந்தார். மனைவி இறந்தபின் மகனுடன் பெங்களூர் சென்ற சாமிநாதன் இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார்
இலக்கியவாழ்க்கை
வெங்கட் சாமிநாதனின் இலக்கிய வாழ்க்கை மூன்று கட்டங்கள் கொண்டது
எழுத்து காலகட்டம்
வெங்கட் சாமிநாதன் ஹிராகுட்டில் இருக்கும்போதே சி.சு. செல்லப்பா தொடங்கிய எழுத்து இதழுடன் தொடர்பு கொண்டிருந்தார். எழுத்து இதழில் இரண்டாவது இலக்கத்திலேயே அவருடைய வாசகர்கடிதம் வெளியாகியிருந்தது. தொடர்ச்சியாக எழுத்து இதழுக்கு தன் எதிர்வினைகளை எழுதி கொண்டிருந்த சாமிநாதன் 1959 ல் சென்னை வந்து சி.சு.செல்லப்பாவைச் சந்தித்தார். 1961 ல் எழுத்து இதழில் சாமிநாதன் எழுதிய பாலையும் வாழையும் என்னும் கட்டுரை பிரசுரமாகியது. தமிழ் நவீன இலக்கியச் சூழல் ஒரு பாலைவனம் என்றும் அதில் ஓரிரு படைப்புகள் தவிர எவையும் குறிப்பிடத்தக்கவை அல்ல என்றும் கடுமையாக எழுதியிருந்த அக்கட்டுரை விவாதத்திற்கு உள்ளாகியது. சாமிநாதனின் கட்டுரையால் ஆர்வம்கொண்ட பிரமிள், சுந்தர ராமசாமி ஆகியோர் அவருடன் தொடர்பு கொண்டனர். அவர்களுக்குள் நட்பும் உரையாடலும் தொடங்கியது. இக்காலகட்டத்தில் வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரைகள் பாலையும் வாழையும் என்ற பெயரில் ராஜபாளையம் மணி பிரசுரத்தால் வெளியிடப்பட்டன. தமிழில் தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு ஆளான நூல் இது. சுந்தர ராமசாமியின் முன்னுரையுடன் இந்நூல் வெளிவந்தது.
யாத்ரா காலகட்டம்
எழுத்து இதழில் இலக்கியம் தவிர சினிமா, ஓவியம் போன்றவற்றுக்கு இடமில்லை என்னும் நிலைபாடு கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவுக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் முரண்பாடு உருவாகியது. வெவ்வேறு சிற்றிதழ்களில் எழுதிக்கொண்டிருந்த சாமிநாதன் தனக்காக ஒரு சிற்றிதழை ஆரம்பித்தார். யாத்ரா என்னும் அவ்விதழ் சிலகாலம் ராஜபாளையத்தில் இருந்து வெளிவந்தது. பின்னர் நாகர்கோயிலில் இருந்து, அ.கா.பெருமாள் ஒத்துழைப்புடன் வெளிவந்தது. வெங்கட் சாமிநாதன் யாத்ராவில் திரைப்படம், ஓவியம், நாட்டாரியல் ஆகியவற்றுடன் அரசியல் விமர்சனங்களையும் எழுதினார். ‘மார்க்ஸின் கல்லறையில் இருந்து ஒரு குரல்’ போன்ற விவாதத்திற்குள்ளான கட்டுரைகள் யாத்ராவில் வெளிவந்தன. வெங்கட் சாமிநாதனின் யாத்ரா காலகட்ட எழுத்து தீவிரமான இலக்கியப் பூசல்தன்மை கொண்டது. தனிநபர் தாக்குதல்களும் மிகுந்திருந்தது. பிரமிளுக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் இடையே கடுமையான கருத்துபூசல்கள் நிகழ்ந்தன. பிரமிள் வெங்கட் சாமிநாதனை கடுமையாகத் தாக்கி அவர் நடத்திய லயம் இதழில் எழுதிக்கொண்டிருந்தார். வெங்கட் சாமிநாதனுக்கும் க. கைலாசபதிக்கும் இடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இக்காலகட்ட கட்டுரைகள் அன்றைய வரட்சியில் இருந்து இன்றைய வளர்ச்சி வரை, இலக்கிய ஊழல்கள் என நூல்களாகத் தொகுக்கப்பட்டன.
இறுதிக்காலம்
பணி ஓய்வுக்கு முன் வெங்கட் சாமிநாதன் ஒரு விபத்துக்கு ஆளானார். அதில் கால் முறிந்து அவர் மீண்டுவர ஓரிரு ஆண்டுகள் ஆயின. அக்காலத்தில் யாத்ரா நின்றுவிட்டது. வெங்கட் சாமிநாதன் சென்னைக்கு வந்தபின் அவருடைய எழுத்துக்களை வெளியிட அவருக்காகவே வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் (வெசஎ) என்னும் இதழை தஞ்சை பிரகாஷ் எழுதினார். அவ்விதழ் தொடர்ந்து வெளிவரவில்லை. வெங்கட் சாமிநாதன் 2000 த்துப் பின் உருவாகி வந்த இணைய இதழ்களில் எழுத தொடங்கினார். திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் தொடர்ச்சியாக அவருடைய எழுத்துக்கள் வெளியாயின. பின்னர் சொல்வனம், தமிழ் ஹிந்து இணையதளம் ஆகியவற்றில் எழுதினார். இக்காலகட்டத்து வெங்கட் சாமிநாதனின் எழுத்துக்கள் நினைவுப்பதிவுகள், நூல்மதிப்புரைகள் ஆகியவை நிறைந்தவை. நேரடியான அரசியல் கட்டுரைகளும் எழுதினார். வெங்கட் சாமிநாதன் தொடக்கம் முதலே திராவிட இயக்கத்திற்கு எதிரான அரசியல்பார்வை கொண்டிருந்தார்.
திரைப்படம்
இதழியல்
விவாதங்கள்
மறைவு
வெங்கட் சாமிநாதன் 21 அக்டோபர் 2015 ல் பெங்களூரில் தன் மகன் இல்லத்தில் மறைந்தார்.