under review

சுப்புடு

From Tamil Wiki
Revision as of 03:43, 27 August 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சுப்பு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்பு (பெயர் பட்டியல்)
சுப்புடு

சுப்புடு (பி.வி. சுப்பிரமணியம்) (மார்ச் 27, 1917 - மார்ச் 29, 2007) நாடக நடிகர், இயக்குநர். இசை, நாட்டிய விமர்சகர். எழுத்தாளர். பல நாடகங்களை எழுதி, இயக்கி அரங்கேற்றினார். நடித்தார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இசைக் கச்சேரிகள், நாட்டியங்கள் குறித்து விமர்சனங்கள் எழுதினார். இசை விமர்சனத் துறைக்குப் புத்துயிரூட்டியவராகக் கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

சுப்புடு என்றழைக்கப்படும் பி.வி. சுப்பிரமணியம். மார்ச் 27, 1917 அன்று, பர்மாவில், வெங்கட்ராம ஐயர்-சரஸ்வதி அம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். உயர்நிலைக் கல்வி வரை கற்றார்.

தனி வாழ்க்கை

சுப்புடு, ரங்கூனில் கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றினார். 1942-ல், ஜப்பான் தாக்குதலால் ஏற்பட்ட போர் நெருக்கடி நிலையால் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்தார். முதலில் சிம்லாவில் சில வருடங்கள் இருந்தார். பின் டில்லிக்கு வந்தார். டில்லியில் மத்திய அரசின் நிதியமைச்சகத்தில் எழுத்தர் ஆகப் பணியாற்றினார்.

மணமானவர். மனைவி: சந்திரா.

நாடக வாழ்க்கை

சுப்புடுவின் தந்தை வெங்கட்ராம ஐயர், ஒரு நாடகக் கலைஞராக இருந்தார். அவர் மூலம் சுப்புடு நாடக ஆர்வம் பெற்றார். பதினைந்து வயதிலேயே 'ப்ரகலாதா', 'சீதா கல்யாணம்' போன்ற நாடகங்களில் நடித்தார். தந்தை நடத்திய நாடகங்களிலும் பல்வேறு வேடங்களில் நடித்தார். டில்லியில், 'சௌத் இந்தியன் தியேட்டர்ஸ்' என்னும் 'தட்சிண பாரத சபா' ('South Indian Theatres') என்ற நாடகக் குழுவை பூர்ணம் விஸ்வநாதன், கோபு, ராஜி ஆகியோருடன் இணைந்து தொடங்கினார். அக்குழு மூலம் பல நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தார். தேவனின் 'கோமதியின் காதலன்', தி.ஜானகிராமனின் 'வடிவேலு வாத்தியார்', கல்கியின் 'கள்வனின் காதலி', பி.எஸ். ராமையாவின் 'போலீஸ்காரன் மகள்', 'தேரோட்டி மகன்' உள்ளிட்ட பல நாடகங்களை அரங்காற்றுகை செய்தார். இந்தியா முழுவதும் சென்று பல நாடகங்களை நடத்தினார்.

சுப்புடு, முற்றிலும் தொழில் முறையல்லாத நடிகர்களைக் கொண்டே தன் நாடகங்களை நடத்தினார். மிமிக்ரியிலும் வல்லவராக அறியப்பட்டார்.

வானொலி

சுப்புடு, வானொலி நாடகங்கள் பலவற்றில் நடித்தார்.

அனிதா ரத்னம் - சந்திரா சுப்புடு - சுப்புடு

நாட்டிய வாழ்க்கை

சுப்புடு நாட்டியம் அறிந்தவர். சில நாட்டியங்களுக்கு நட்டுவாங்கம் செய்தார். பரத நாட்டியம் குறித்துச் சிறு நூல் ஒன்றை எழுதினார். பல நாட்டிய நிகழ்வுகளில் கஞ்சிரா, ஹார்மோனியம் வாசித்தார். நாட்டியம் குறித்தும், நாட்டியக் கலைஞர்கள் குறித்தும் பல விமர்சனங்களை தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் எழுதினார். நடிகை ஸ்ரீ வித்யா நாட்டியமாடியது குறித்து 'சுற்றளவைக் குறைத்தால் உலகம் சுற்றலாம்' போன்ற விமர்சனக் குறிப்புகளை எழுதி ஸ்ரீவித்யா, எம். எல். வசந்தகுமாரி உள்ளிட்ட பலரது எதிர்ப்புக்குள்ளானார். 'அனிதா ரத்னம்' உள்ளிட்ட பல நாட்டியக் கலைஞர்களை ஊக்குவித்தார்.

இதழியல்

சுப்புடு, 'ஸ்டேட்ஸ்மென்' இதழில் இசை மற்றும் நாட்டிய விமர்சகராகப் பணியாற்றினார்.

அப்துல்கலாம் வழங்கிய சிறந்த இசை விமர்சகருக்கான விருது

இசை வாழ்க்கை

தொடக்கம்

சுப்புடு இளம் வயது முதலே இசை ஆர்வம் கொண்டிருந்தார். சகோதரிகளுக்கு இசை கற்பிக்க வரும் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் மூலம் இசை கற்றார்.

இசை விமர்சனம்

சுப்புடு, இசை பற்றிய தனது சிறு சிறு விமர்சனக் குறிப்புகளை 'ரங்கூன் டைம்ஸ்' இதழுக்கு அனுப்பினார். அவை பிரசுரமாகின. டில்லியில் வசித்தபோது அங்கு நடக்கும் நாட்டியம், நாடகம், இசைக்கச்சேரி போன்றவற்றுக்குச் சென்றார். இசைக் கச்சேரி ஒன்றைப் பற்றிய விமர்சனத்தை 'கல்கி' இதழுக்கு அனுப்பினார். அது பிரசுரமானது. கல்கியின் ஊக்குவிப்பால் தொடர்ந்து பல இசை விமர்சனங்களை எழுதினார். கல்கியையே தனது மானசீக குருவாகக் கொண்டார். மணியன் ஆசிரியராக இருந்த 'இதயம் பேசுகிறது' இதழில் 16 அண்டுகாலத்திற்கும் மேலாக இசை விமர்சனங்களை எழுதினார். தினமணி, தினமணி கதிர், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஸ்டேட்ஸ்மென் போன்ற இதழ்களிலும் பல இசை விமர்சனங்களை எழுதினார்.

சர்ச்சைகள்

சுப்புடுவின் இசை விமர்சனங்களில் நகைச்சுவை உணர்ச்சி மேலோங்கியிருந்தது. அதே சமயம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும் இருந்தன. மூத்த இசைக் கலைஞரான செம்மங்குடி சீனிவாச ஐயரை, "செம்மங்குடிதான் எவ்வளவு அழகாகப் பேசுகிறார்! அவர் தொடர்ந்து மேடைகளில் பேசலாமே? ஏன் பாடுகிறார்?" என்று சீண்டினார். இவ்வாறு பல இசைக்கலைஞர்களை தனது பேச்சாலும், எழுத்தாலும் சுப்புடு விமர்சித்ததால் பல சர்ச்சைகள், சச்சரவுகள் ஏற்பட்டன. தஞ்சையில் சுப்புடுவுக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. தாக்குதல் முயற்சிகளும் நிகழ்ந்தன என்றாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் தனது விமர்சனங்களை எழுதினார்.

'காதிலும் கம்மல்; குரலிலும் கம்மல்', 'கேதாரம் சேதாரமாகிவிட்டது', '"best luck for next year' என்றெல்லாம் சுப்புடு எழுதியதால் இசைக் கலைஞர்கள் பலரது கண்டனத்துக்கு உள்ளானார். இசைக்கலைஞர்கள் மட்டுமல்லாது சபாக்களையும் சுப்புடு விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கடுமையாகச் சாடினார். சுப்புடுவின் விமர்சனத்தால் சீண்டப்பட்ட சில சபாக்கள் "Dogs and Subbudu not allowed" (நாய்களுக்கும் சுப்புடுவுக்கும் உள்ளே அனுமதியில்லை)" என்று வாயிலில் எழுதி மாட்டினர்.

சுப்புடு தனது விமர்சனங்களால் அதிகம் சர்ச்சைக்கு உள்ளானாலும், தகுதியுள்ள கலைஞர்களைப் பாராட்டவோ, ஊக்குவிக்கவோ தவறியதில்லை. சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன், வயலின் ஏ. கன்யாகுமரி உள்ளிட்டோரை அவர்கள் இளம் வயதிலேயே அவர்களது திறமையைக் கண்டறிந்து அடையாளம் காட்டினார். தனது விமர்சனங்கள் மூலம் ஊக்குவித்தார். "நானும் கிட்டத்தட்ட 65 வருஷங்களாக இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மாண்டலின் சீனிவாசைப் போல் ஒரு அவதார புருஷனைக் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. என்னால் அவனது இசை மேதாவிலாசத்தை ஆய்வு செய்யவோ, எடை போடவோ இயலவில்லை" என்று குறிப்பிட்டார்.

"கர்நாடக சங்கீதப் பாடகர்கள் சினிமாவில் பாடக்கூடாது. அப்படிப் பாடினால் குரல் கெட்டுவிடும்" என்பது சுப்புடுவின் உறுதியான கருத்தாக இருந்தது. அதைப் பற்றி இதழ்களில் எழுதினார். மேடைகளிலும் பேசினார். நிகழ்ச்சிக்கு வராமலேயே விமர்சனம் செய்ததாகவும் சுப்புடு மீது விமர்சனம் வைக்கப்பட்டது.

தனது இசை விமர்சனம் பற்றி சுப்புடு, "விமர்சனத்துக்கு என்றே சில வார்த்தைத் தொடர்கள் இருக்கு. 'காம்போதி களைகட்டவில்லை' என்று மட்டும் எழுதுவாங்க. ஏன் களைகட்டவில்லை என்று நான் சொல்லுவேன். அதோட நான் dry ஆக எழுத மாட்டேன்" என்று குறிப்பிட்டார்.

சுப்புடு வாழ்க்கை வரலாறு

அமைப்புச் செயல்பாடுகள்

சுப்புடு, ராஜாஜி, தொடங்கி வைத்த 'கலைக் கழகத்தின்' இயக்குநராகப் பொறுப்பேற்றுப் பல நிறுவனங்களுக்கு நிதி திரட்டி உதவினார்.

விருது

மறைவு

சுப்புடு, மார்ச் 29, 2007 அன்று, தனது 90-ம் வயதில், வயது மூப்பால் காலமானார்.

நினைவு

சுப்புடுவின் வாழ்க்கை வரலாறு, லடா குருடேன் சிங்கால் தொகுக்கப்பட்டு 'BEYOND DESTINY - The Life and Times of Subbudu' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது. பாரதீய வித்யா பவன் இந்நூலை 2005-ல் வெளியிட்டுள்ளது. சுப்புடுவின் விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு 'சுப்புடு தர்பார்' என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது.

மதிப்பீடு

சுப்புடு, இசை மற்றும் நாட்டிய விமர்சனங்களால் பலரது எதிர்ப்பைச் சந்தித்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். தனது கடுமையான விமர்சனங்களால், 'சுய விருப்பு, வெறுப்பு கலந்து எழுதினார்' என்பது போன்ற பலரது வசைகளுக்கு ஆளானார். இசை விமர்சனத் துறைக்கு எழுச்சியூட்டியவராக அறியப்படுகிறார். நாடகத் துறைக்கும் சிறந்த பங்களிப்புகளை வழங்கினார். இசை, நடனம், நாடகம் என மூன்று துறைகளுக்கும் சிறந்த பங்களித்த முன்னோடிக் கலைஞராக மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Aug-2026, 09:12:28 IST