under review

ந. சொக்கலிங்கம்

From Tamil Wiki
Revision as of 22:58, 27 June 2026 by ASN (talk | contribs) (Page Created: Para Added and Edited: Images Added: Link Created: Proof Checked)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ந. சொக்கலிங்கம்

ந. சொக்கலிங்கம் (நெல்லை ந. சொக்கலிங்கம்; முனைவர் நெல்லை ந. சொக்கலிங்கம்; பேராசிரியர் நெல்லை ந. சொக்கலிங்கம்) (பிறப்பு: 1942) ஆய்வாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர். தனித்தமிழ் ஆர்வலர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

ந. சொக்கலிங்கம், 1942-ல், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் மீ.சு. நடராச பிள்ளை - சரஸ்வதி (எ) குப்பம்மாள் இணையருக்குப் பிறந்தார். நெல்லை நகராட்சித் தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மதுரை திரவியம் தாயுமானவர் (ம.தி.தா) இந்துக் கலாசாலை மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வி கற்றார். மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பயின்று தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1966-68-ல் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். ‘வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் இலக்கணக் கோடுபாடுகள்’ என்னும் தலைப்பில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், இராம. பெரியகருப்பனின் நெறியாள்கையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ந. சொக்கலிங்கம் திருமண வாழ்க்கை குறித்த தகவல்களை அறிந்துகொள்ள இயலவில்லை.

முனைவர் ந. சொக்கலிங்கம்

கல்விப் பணிகள்

ந. சொக்கலிங்கம், தொலைபேசித்துறையில் ஐந்தரை ஆண்டுகள் பணியாற்றினார். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். தொடர்ந்து ஸ்ரீ வைகுண்டம் குமரகுருபரர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். நெல்லை ம.தி.தா. இந்து கல்லூரியில் பணியாற்றினார். 1977-ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வித் துறையில் விரிவுரையாளராகப் பொறுப்பேற்றார். இணைப் பேராசிரியராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் பொறுப்புயர்வு பெற்று 2002-ல் பணி ஓய்வு பெற்றார்.

மதுரை ஃபாத்திமா கல்லூரி, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி, அக்சிலியம் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் போன்றவை நடத்தும் கருத்தரங்குகளில் மதியுரைஞர் குழுவில் பணியாற்றினார்.

ந. சொக்கலிங்கத்தின் நெறியாள்கையில் 47 மாணவர்கள் இளமுனைவர் பட்டமும், 7 மாணவர்கள் முனைவர் பட்டமும் பெற்றனர்.

ந. சொக்கலிங்கம் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ந. சொக்கலிங்கம், இலக்கணம், இலக்கியம், ஆய்வு, கட்டுரை, வாழ்க்கை வரலாறு என 15 நூல்களை எழுதினார். சொக்கலிங்கத்தின் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் பல ஆய்விதழ்களிலும், பல்கலைக்கழகங்கள், செம்மொழி உயராய்வு நிறுவனம், கல்லூரிகள் போன்றவற்றில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளிலும் வெளியாகின. 1969 - 2010 வரை நிகழ்ந்த இந்தியப் பலகலைக் கழகத் தமிழாசிரியர் மன்ற கருத்தரங்குகளில் தொடர்ந்து பங்குகொண்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.

மேடையுரை

ந. சொக்கலிங்கம், பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிகழ்வுகளிலும், கருத்தரங்குகளிலும் பங்கேற்று உரை நிகழ்த்தினார். சமய, ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றினார்.

விருது

தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது - 2022

மதிப்பீடு

ந. சொக்கலிங்கம், 35 ஆண்டுகாலம் மாணவர்களுக்குத் தமிழும் இலக்கணமும் பயிற்றுவித்தார். இலக்கண, இலக்கிய தேர்ந்த அறிஞராக விளங்கினார். பாரதிதாசன் படைப்புகள் குறித்தும், தமிழ் மொழியியல், இலக்கணம், இலக்கியம் குறித்தும் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டார். கட்டுரைகளையும், நூல்களையும் எழுதினார். கல்வியாளர், எழுத்தாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • மரபில் பூத்த மலர்கள்
  • சொற்சித்திரங்கள்
  • பாரதிதாசன் பாடல்களில் மரபும் புதுமையும்
  • பாவேந்தரின் எண்ணமும் எழுத்தும்
  • வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள் (சாகித்ய அகாதெமி வெளியீடு)
  • இலக்கண இலக்கியக் களஞ்சியம் தண்டபாணி சுவாமிகள்
  • வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகளின் இலக்கணக் கோட்பாடுகள்
  • தகவலியலும் தமிழியலும்
  • அசலும் நகலும்
  • இலக்கணத்தொகை
  • கவிவேந்தர் மூவர்
  • தமிழில் ஆய்வு அனுபவங்கள்
  • இலக்கிய இமயம்

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.