under review

நியாயகுசுமாஞ்சலி

From Tamil Wiki
Revision as of 15:46, 15 May 2026 by Jeyamohan (talk | contribs) (→‎ஸ்தாபகம் ஐந்து)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நியாயகுசுமாஞ்சலி 1888ல் ஏசியாட்டிக் சொசைட்டி ஆப் பெங்கால் வெளியிட்ட முதல் பதிப்பு
நியாயகுசுமாஞ்சலி

நியாயகுசுமாஞ்சலி (பொயு 10 ஆம் நூற்றாண்டு) உதயணர் எழுதிய இந்து தத்துவ நூல். இது நியாயவியலின் பிற்கால விளக்க நூல்களில் ஒன்று. நியாயவியல் தர்க்கங்களின்படி இறை (பிரம்மம், ஈஸ்வரன்) இருப்பை நிறுவ முயல்கிறது. நவநியாயம் என பின்னாளில் அழைக்கப்பட்ட இறையுள்ள நியாயவியலின் முன்னோடி நூல்களில் ஒன்று.

ஆசிரியர்

நியாயகுசுமாஞ்சலியின் ஆசிரியர் உதயணர் . இவர் பிரசஸ்தபாதர் எழுதிய பதார்த்த தர்ம சம்கிரகம் நூலுக்கு உரையெழுதியவர். வைசேஷிகம், நியாயம் ஆகிய தரிசனங்களை இணைத்தவர்.

நூல் அமைப்பு

நியாயகுசுமாஞ்சலி ஒரு பிரகரணம் வகை நூல். ஒரு தலைப்பை அல்லது ஒரு பேசுபொருளைப் பற்றி மட்டும் பேசுவது. செய்யுளும் வசனமும் கலந்த வடிவம் என்பதனால் மிஸ்ரப்பிரகரணம் என இது வகைப்படுத்தப்படுகிறது. நியாயகுசுமாஞ்சலி 73 பாடல்கள் கொண்டது. ஸ்தாபகம் (மலர்க்கொத்து) எனப்படும் ஐந்து படலங்களாக அவை பிரிக்கப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்

நியாயகுசுமாஞ்சலியில் இறை (ஈஸ்வரன்) உண்டு என்பதற்கான நியாயவியல் சார்ந்த தர்க்கங்களை உதயணர் முன்வைக்கிறார்.

ஐந்து இறைமறுப்பு வாதங்கள்

இறை இல்லை என்பதற்கு சொல்லப்படும் ஐந்து வாதங்களை உதயணர் தொகுத்தளிக்கிறார்

  • உலகியலனுபவத்திற்கு அப்பாலுள்ளதை அடையும் உலகியலனுபவம் அல்லாத வழிமுறைகள் ஏதும் இல்லை (கடவுளை அடைவதற்காக சொல்லப்படும் எல்லா வழிமுறைகளும் இந்த அனுபவ உலகம் சார்ந்தவையாகவே உள்ளன)
  • ஈஸ்வரன் என்னும் உருவகம் இல்லாமலேயே இந்த உலகனுபவத் தளத்தைக் கடந்து அடுத்த நிலையை அடைதல் இயல்வதாகும். (முக்தி அல்லது வீடுபேறுக்கு ஈஸ்வரனின் உதவி இன்றியயமையாதது அல்ல)
  • தர்க்கபூர்வமாக விவாதித்து இறை இல்லை என நிரூபிக்கமுடியும் (உண்மையில் ஈஸ்வரன் இருந்தால் அந்த தர்க்கங்கள் பிழையானவையாக இருக்கும்.)
  • இறை இருந்தால் அது அறியக்கூடுவதாக இல்லை (இறை என சொல்லப்படுவன எல்லாமே தனிப்பட்ட அனுபவங்களே. புறவயமான தர்க்கமோ நிரூபணமோ அதற்கில்லை)
  • இறை உண்டு என தர்க்கபூர்வமாக நிரூபிக்க முடிவதில்லை.

நியாயகுசுமாஞ்சலியில் இந்த ஐந்து வாதங்களையும் நியாயவியலின் முறைகளைப் பயன்படுத்தி உதயணர் மறுக்கிறார். நான்கு படலங்களை மறுப்புக்கு மறுப்பு என்னும் தொனியில் எழுதிய உதயணர் ஐந்தாம் படலத்தில் இறை உண்டு என்பதற்கான தர்க்கங்களைச் சொல்கிறார்.

ஸ்தாபகம் ஒன்று

பிரம்மம் அல்லது ஈஸ்வரன் இரண்டு அடிப்படையிலேயே ஏற்கப்படுகிறது என உதயணர் சொல்கிறார். ஒன்று, தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் வழிபாடு. இரண்டு, முன்னோர் சொல் அல்லது வேதம் முதலிய சுருதிகள். இந்நூலில் தான் இவற்றை தர்க்கபூர்வமாக முன்வைக்கப் போவதாக அறிவிக்கிறார்.

உலகியலில் இருந்து முக்தியை அல்லது வீடுபேறை அடைய உலகியலுக்கு அப்பாற்பட்ட வழிமுறைகளே உதவும் என்பதற்கான காரணங்கள்

  • இந்த உலக இயக்கம் காரணங்களில் இருந்து உருவாகி காரணங்களாக மாறிக்கொண்டே இருப்பது.
  • காரணகாரிய உறவின் சுருள் முடிவின்றி நீள்வது
  • காரணங்கள் எனப்படும் செயல்களின் விளைவுகள் பல கிளைகளாக விரிபவை, பல தன்மைகள்கொண்டவை, முன்பு ஊகித்துவிட முடியாதவை
  • வேள்விகள் முதலிய வீடுபேறுக்கான உலகியல்செயல்கள் மிகப் பொதுப்படையானவை.
  • அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையானவை. வலி, இன்பம் எல்லாமே வேறுபடுகின்றன. ஒரு வழிபாட்டுச் செயல்பாடு ஒருவருக்கு அளிப்பதை இன்னொருவருக்கு அளிப்பதில்லை
ஸ்தாபகம் இரண்டு

தர்மத்தின் (பிரபஞ்ச இயக்கத்தின் நெறி, அறம்) தொடர்ச்சி என்பது இறை இல்லாமல் இயல்வதே என்று சொல்லப்படுவதை உதயணர் மறுக்கிறார். தர்மத் தொடர்ச்சி நிகழ்வது கீழ்க்கண்ட காரணங்களால்தான்

  • தர்மத்தை அறிவது அகவயமானதாக இல்லை, அது புறவயமானதாகவே அறியக்கூடுவதாக உள்ளது
  • பிரபஞ்சத்திலேயே படைப்பும் அழிவும் நிகழ்வது கண்கூடாக உள்ளது.
  • ஈஸ்வரன் இல்லையேல் தர்மம் தொடர்வதில் உள்ள உறுதிப்பாடு என்ன?
  • தர்மம் அழியாது தொடர்வதற்கு ஈஸ்வரன் அன்றி வேறு உறுதிப்பாடு என்ன?
ஸ்தாபகம் மூன்று

இறையை அறிதல் பற்றிய எதிர்க்கூற்றுக்களை ஒன்றொன்றாக நிராகரிக்கும் உதயணர் கீழ்க்கண்ட தர்க்கங்களை முன்வைக்கிறார்.

  • இறைமறுப்புக்கு புறவய, அனுபவ நிரூபணம் இல்லை.
  • பலவற்றில் இருந்து தொகுத்துக் கொள்ளப்படும் முடிவுகள் நிரூபணம் ஆவதில்லை.
  • உவமை, எடுத்துக்காட்டு ஆகியவை மறுப்புக்கான ஆதாரங்கள் அல்ல.
  • தனிப்பட்ட அனுபவ வாக்குமூலங்கள் மறுப்புக்கான சான்றுகள் அல்ல.
  • உள்ளுறை உண்மைகளின் ஊகம் உறுதியான இறைமறுப்பை நிகழ்த்துவதில்லை.
  • அறியமுடியவில்லை என்பது இல்லை என்பதற்கான சான்று அல்ல.
ஸ்தாபகம் நான்கு

இப்பகுதியில் பூர்வ மீமாம்சம் சொல்லும் வாதங்களை மறுக்கிறார். ஒன்றை அறிவதென்பதற்கு பூர்வமீமாம்சகர்கள் சொல்லும் தர்க்கம் என்பது அதை முன்பு அறிந்திருக்கலாகாது அல்லது முன்பு அறிந்ததில் இருந்து புதிய அறிதல் வேறுபட்டிருக்கவேண்டும் என்பதாகும். அவ்வாறு நோக்கினால் ஈஸ்வரன் இருப்பை நிறுவ முடியாது. இங்கனைத்திலும் ஈஸன் உறைகிறான் என்றால் இங்குள்ள அனைத்தும் ஏற்கனவே அறியப்பட்டது என்பதே. அதன் பெயரை மட்டுமே ஈஸ்வரவாதிகள் மாற்றுகிறார்கள், எந்த புதிய மாற்றமும் இல்லை. அதை உதயணர் மறுக்கிறார். ஏற்கனவே அறிந்த ஒன்றை புதியதென அறிதல் நிகழும்போது புதியது நிறுவப்படுகிறது. வேங்கைப்பூங்கொத்து என அறியப்பட்டது புலி என அறியப்படும்போது ஏற்கனவே அது அறியப்பட்டது என்பது புதிய அறிதலை நிராகரிப்பதில்லை.

ஸ்தாபகம் ஐந்து

ஈஸ்வரனின் இருப்புக்கு உதயணர் சொல்லும் நியாய அடிப்படையிலான தர்க்கங்கள் இவை

  • காரியவாத்: (காரணமாக அமைதல்) இங்கே காரியமாக (விளைவாக) உள்ள பொருட்கள் இவற்றுக்கு மூலமாக (காரணமாக) உள்ள ஒன்றுக்கான நிரூபணம்
  • அயோஜனாத்: (கருத்துநிலையாக அமைதல்) அணுக்களை இணைவுகொள்ளச் செய்வதற்கு அப்படிச் செய்யவேண்டும் என்னும் எண்ணம் எங்கோ எதிலோ இருந்திருக்கவேண்டும். நோக்கமும் ஒரு கருத்துநிலை. ஒரு நோக்கம் இல்லையென்றால் அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாகியிருக்காது. ஒவ்வொரு அணுவும் தன்விருப்புப்படி செயல்பட்டிருந்தால் பிரபஞ்சம் இல்லை.
  • திருடாத் (அடிப்படையாக அமைதல்) பிரபஞ்சம் இந்த கட்டுக்கோப்புடன் இருக்கச்செய்யும் ஒரு விசை இருந்தாகவேண்டும். ஒரு மையம், ஒரு தொகுப்புவிசை. ஒவ்வொரு துளியிலும் பிரபஞ்சத்திலுள்ள ஒருங்கிணைவே சான்று.
  • சம்ஹரணாத்: (அழிப்புவிசையாக அமைதல்) பிரபஞ்சத்தை அதன் அடிப்படைப்பொருட்களாக கட்டவிழ்ப்பு செய்யும் ஒரு விசை இருந்தாகவேண்டும். ஒவ்வொரு கணமும் நாம் காணும் அழிவுகளுக்கு அப்படித்தான் ஒரு காரணத்தை கண்டறிய முடியும்.
  • பாடாத்: (ஞானமென அமைதல்) புதியன கற்பிக்கும் , புதிய ஞானத்தை உருவாக்கும் ஓர் அடிப்படை பிரபஞ்சத்திலுள்ளது
  • பிரத்யாயத்: (ஒவ்வொன்றுக்கும் முன்தொடர்ச்சியாக அமைதல்) முன்னறிவின் தொடர்ச்சி ஒரு சான்று. ஓர் அறிவு இன்னொன்றாக ஆகி உருவாகும் தொடர்ச்சியே சான்றாகிறது.
  • ஸ்ருதெ: (வேதங்களிலுள்ள சுருதித்தன்மையாக அமைதல்) வேதம் போன்ற சுருதிநூல்கள் நிகழ்வதற்கு அனைத்துக்குமான ஓர் ஆசிரியத்துவம் தேவை. மனிதர்களுக்கு வேதம் அமைந்துள்ளது என்பதே வேதங்களால் உணரப்படும் ஒன்று உண்டு என்பதற்கான சான்று.
  • அனவத்யாத்: (ஆசிரியர்களுக்குள் உள்ள ஆசிரியர்த்தன்மையாக அமைதல்) வேதநூல்களுக்கு மனிதர்கள் ஆசிரியர்களாக இருக்கவேண்டியுள்ளது. அந்த மனிதர்கள் உருவாகிறார்கள். எல்லா ஞானிகளிடமும் ஞானமென்னும் பொதுக்கூறாக வெளிப்படும் ஒன்று உண்டு.
  • சாங்கியவிசேஷாத்: (புறவுலக அறிதல் சாத்தியமாதல்) காரணமும் விளைவுகளும் முடிவின்றிப் பெருகியிருக்கும் இப்பிரபஞ்சத்தை அறிவதற்கு நமக்கு புறவுலகை அறியும் ஆற்றல் இருப்பது சான்று.

தத்துவ இடம்

நியாயவியல் பழைய காலகட்டத்தில் பருப்பொருள் சார்ந்த பிரபஞ்சத்தை விளக்கும் தர்க்க முறையாகச் செயல்பட்டது. பின்னர் சமணர்களும் பௌத்தர்களும் அதை தங்கள் பிரபஞ்சக் கொள்கைகளை விளக்க பயன்படுத்திக் கொண்டனர். உதயணர் நியாயவியலை இறைக் (பிரம்மம், ஈஸ்வரன்) கொள்கையை தர்க்கபூர்வமாக நிறுவுவதற்கு பயன்படுத்திக் கொண்டார். அது ஒரு பெரிய தொடக்கமாக அமைந்தது. அந்த வழியில் ஏராளமான வேதாந்த அறிஞர்கள் நியாயவியலை பயன்படுத்திக்கொண்டார்கள். நியாயகுசுமாஞ்சலி பின்னர் உருவான நவநியாயம் என்னும் புதிய நியாயவியலின் முதன்மை நூலாக கருதப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2024, 19:24:49 IST