under review

ஊன்பொதி பசுங்குடையார்

From Tamil Wiki
Revision as of 16:07, 1 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஊன்பொதி பசுங்குடையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய நான்கு பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

ஊன்பொதி பசுங்குடையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவருக்கு 'ஊன்பொதி பசுங்குடை 'என்னும் சொல்லாட்சியை பயன்படுத்தியமையால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அ. துரையரங்க சாமி குறிப்பிடுகிறார். ஆனால் அச்சொல்லாட்சி இவரது பாடல்கள் எதிலும் இடம்பெறவில்லை.

இலக்கிய வாழ்க்கை

ஊன்பொதி பசுங்குடையார் பாடிய நான்கு பாடல்கள் புறநானூறில் 10, 203, 370 மற்றும் 378 -ம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன. இவர் பாடிய நான்கு புறநானூற்று பாடல்களும் பாடாண் திணையில் இயன்மொழி துறையில் அமைந்து மன்னர்களின் சிறப்புகளை எடுத்து கூறுபவை. புறநானூறு 10-ம் பாடலில் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியை குறித்தும் 203-ம் பாடலில் சேரமான் பாமுளூர் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியை குறித்தும் 370, 378-ம் பாடல்களில் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை குறித்தும் பாடியுள்ளார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
  • சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் நாட்டில் உள்ள மகளிர் அமிழ்தினும் இனிய உணவை சமைப்பர். அதனை இரவலர்க்கு விருந்தாகக் கொடையளிப்பர். அத்தகு மகளிர் மட்டுமே தழுவும் தோள்களை கொண்டவன். அல்லாது போரில் தன்னை தழுவ வரும் மள்ளரை வெட்டி வீழ்த்தும் வீரமிக்கவன்.
  • திரும்பி பார்த்து வருந்த வேண்டாத நற்செயல்களை மட்டுமே ஆற்றுபவன். நெய்தலங்கானல் நிலத்திற்கு தெய்வம் போன்றவன். தன்னை நாடிவந்து புகழும் புலவர்க்கு பரிசல் வழங்குபவன்.
சேரமான் பாமுளூர் இளஞ்சேட் சென்னி
  • பகைவரின் கோட்டை அவர் வசம் இருக்கும்போதே பாணருக்கு அக்கோட்டையை கொடையாக வழங்கி, போரிட்டு வென்று பகைவரின் கோட்டையை பாணரிடம் ஒப்படைக்கும் நிகரற்ற வீரம் கொண்டவன். கொடையளிப்பதற்கு வருத்தம் கொள்ளாதவன்.
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
  • சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியின் வீரர்கள் எதிரி படை மறவர்களை நெற்கதிர்களை அறுப்பது போல் தமது கூரிய வாளாலும் வேலாலும் கொன்று குவிக்கும் வல்லமை கொண்டோர். அப்படி கொல்லப்பட்ட மறவர்களின் பிணக்காட்டின் நடுவே வயலில் செல்லும் எருது போல் யானைகள் ஊர்ந்து செல்லும். குருதியும் நிணமுமான போர்க்களத்தை கண்டவாறு பேய்மகள் அழுது கொண்டே ஓடுவாள். செம்பருந்துகளும் கழுகுகளும் பிணங்களை உண்ண காத்திருக்கும்.
  • தென்னாட்டு போரில் பரதவரையும் வடநாட்டு போரில் வடுகரையும் வென்றவன். சோழனின் கோட்டை வெண்ணிறத்தில் அமைந்து சுற்றிலும் அகழியால் சூழப்பட்டது. அரண்மனை தோரண மாலையால் அலங்கரிப்பட்டு கள் விருந்து கொண்டாடும் வளமிக்கது. மன்னன் குதிரைப்படையும் கையில் வேலும் தலையில் கண்ணி மாலையும் சூடியவன்.
  • பனம்பழமும் பனங்குருத்தும் தின்று வறுமையில் வாடும் புலவர்கள் தம் சுற்றத்தாருடன் நாடி வருகையில் வேண்டிய அளவு உணவு சமைத்து அளிப்பான். போர் களத்திலும் அவ்வாறு கொடையளிக்கும் வல்லமை கொண்டவன்.
  • அரண்மனையில் இருக்கையில் நாடிவந்து புகழும் புலவர்களின் சுற்றத்தார் மகிழும்படி பொன்னும் மணியும் அணிகலன்களும் நிரம்ப கொடை வழங்கி சிறப்பிப்போன்.
  • மன்னர் வழங்கிய அணிகலன்களை உடலில் பொருத்தமில்லாத இடங்களில் மாற்றி மாற்றி அணிந்துகொண்ட பாணரின் செயல்பாடு, இராவணன் கடத்தி செல்கையில் சீதை கழட்டி எறிந்த நகைகளை எடுத்தணிந்த குரங்குகளின் செயலை ஒப்ப இருந்தது.
மன்னர்களுக்கான அறக்கருத்துகள்
  • பிறர் மேல் குற்றம் சொல்பவர்களை நம்பக்கூடாது. ஒருவரின் தீமையை ஆராய்ந்து அதற்கு தக்க தண்டனை வழங்குதல் வேண்டும். குற்றம் புரிந்தவர் மனந்திருந்தி மன்னிப்பு கேட்டால் தண்டனை குறைக்கலாம்.
  • வான் மழை எப்படி மண்ணுக்கு குறையாது நீர் வழங்கி சிறப்பிக்கிறதோ அதுபோல் மன்னரும் இரவலருக்கு இல்லையெனாது கொடையளிக்கும் மாண்பு கொண்டிருக்க வேண்டும். கொடையளிக்க முடியாத மன்னரின் வருத்தத்தை விட பரிசில் பெறாத இரவலரின் துயரம் பெரிது.

பாடல் நடை

புறநானூறு - 10

  • திணை: பாடாண் திணை
  • துறை: இயன்மொழி

வழிபடுவோரை வல் அறிதீயே;
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே;
நீ மெய் கண்ட தீமை காணின்;
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப!
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங்கானல் நெடியோய்!
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2026, 09:22:05 IST