இல்லற நொண்டி (சிற்றிலக்கிய நூல்)
இல்லற நொண்டி (முதல் பதிப்பு: 1887), ஆண், பெண்களின் குண வேறுபாட்டைக் கூறும் நொண்டி நாடகச் சிற்றிலக்கிய நூல். இதனை இயற்றியவர் இலங்கையைச் சேர்ந்த ஆர்னல்ட் சதாசிவம் பிள்ளை.
வெளியீடு
இல்லற நொண்டி நூல், 'உதயதாரகை' இதழில் தொடராக வெளிவந்தது. பின் இலங்கை யாழ்ப்பாணம் மானிப்பாய், ஸ்திறோங் அஸ்பரி என்பவரது அச்சுகூடத்தில் 1887-ல் அச்சடிக்கப்பட்டது. இதனை இயற்றியவர் இலங்கையைச் சேர்ந்த ஆர்ணல்ட் சதாசிவம் பிள்ளை.
ஆசிரியர் குறிப்பு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்னும் ஆர்னல்ட் சதாசிவம் பிள்ளை, யாழ்ப்பாணக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இலங்கையின் முன்னோடித் தமிழ் இதழான உதயதாரகை இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மெய்வேதசாரம், சற்போத சரணம், பாவலர் சரித்திர தீபகம், ஏசுநாதர் திருச்சதகம், கீர்த்தன சங்கிரகம், நன்னெறிக் கதாசங்கிரகம், நன்நெறிமாலை, நன்நெறிக்கொத்து போன்ற பல நூல்களை இயற்றினார்.
நூல் அமைப்பு
இல்லற நொண்டி நூலின் தொடக்கத்தில் தெய்வத்துதி இடம்பெற்றது. தொடர்ந்து உத்தம ஆடவர், அதம ஆடவர், நற்குணப் பெண்டிர், துர்க்குணப் பெண்டிர் பற்றிய குண இயல்புகள் இடம்பெற்றன. பாடல்கள் நொண்டிச் சிந்து வடிவில் அமைந்தன. பாடல்களின் நடுவே விரிவான வசனங்களும் இடம்பெற்றன.
உள்ளடக்கம்
இல்லற நொண்டி நூலில், நல்ல ஆண்கள் எப்படி வாழ்க்கையில் நடந்துகொள்வார்கள், நடக்க வேண்டும் என்பதும்; தீய ஆண்களின் குணங்கள், நடத்தைகள் எப்படியிருக்கும் என்பதும் உத்தம ஆடவர், அதம ஆடவர் என்ற தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளன. நற்குணப் பெண்டிர், துற்குணப் பெண்டிர் என்ற தலைப்புகளில் நல்ல பெண்களின் நடத்தை பற்றியும், தீய பெண்களின் நடத்தை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
பாடல்
உத்தம ஆடவர்
சுயபுத்திதனிற் சாயான் - பெரியவர்
சொற்புத்தி தனைச்செவி சோரவிடான்
பயபத்தி நிலைஅசையான் - எதொன்றையும்
பதற்றமாய் விறுவிறுப் பொடுபகரான்
யோசனையாய் அயர்வான் - விவேகமாய்
யூகித்தும் கிரகித்தும் ஒளிபெறுவான்
வாசினை கல்விவிடான் - மூவாண்டு ஓடு
மைஏடு கையாலே வழுவவிடான்
வீறுகொண்டு இறுமாப்பாய்க் - குரோதித்து
மேலவர் குருநிந்தை விளைத்தறியான்
தாறுமாறுகள் புரியான் - துணிவொடு
சன்மார்க்க நெறிதனைத் தள்ளிவிடான்
வேதியர் பெரியோர்சொல் - விதிகளை
வெறுத்துத் தள்ளான்கடு கடுத்துத் துள்ளான்
ஞாதியர்தமை எள்ளான்....
அதம ஆடவர்
தேவனைத் துதித்துஇறைஞ்சான் - தெய்வத்தொண்டிற்
சிரத்தைவையான் பவ விருத்தி செய்வான்
நாவலர் தமையணுகான் - சண்டாளரை
நாடிச்செல்வான் கோள்கள் தேடிச்சொல்வான்
வித்தை உத்தியை விரும்பான் - விதாலயம்
வேண்டிச்சாயான் தீமை தாண்டிப்பாயான்
முத்தியின் வழி சாரான் - தேவாலயம்
முன்னிச்செலான் நன்மை எண்ணிச்சொலான்
நற்குணப் பெண்டிர்
தேவனைத் தொழுநாவாள் - தேவாலயம்
தேடியே நடந்திடு தாள் உடையாள்
சீவனி நிகரானாள் - எவர்களும்
தேடிடும்பூடு போல் ஈடுடையாள்
பத்திக்கு வரம்பாவாள் - பராபரப்
பழம்பொருள் தன்னில் அன்பு பழுத்திடுவாள்
முத்திக்கு வித்தாவாள் - சுயம்புவாம்
முதற்பொருள் மேல் நேசம் முதிர்ந்திடுவாள்
தன்பெருநாயகனைத் - தொழுந்தெய்வம்
தனக்கு இரண்டாவதாய்த் தாழ்ந்திடுவாள்
அன்பருள் நிறைமனசாள் - அவன்தனக்கு
அமிர்தசஞ்சீவினி தனைஅனையாள்
காலமோடு இடம் தேர்ந்தே - அவன்மனம்
களிக்கச்செய்வாள் - உளஞ் சுழிக்கச்செய்யாள்....
துற்குணப் பெண்டிர்
இல்லற முறைஒழுகாள் - வரவினுக்கு
ஏற்றமதாய்ப் பொருள் தூற்றிடுவாள்
புல்லிய குணக்காரி - தனைக்கொண்ட
புருடனில் தான்மிகு பொருட்காரி
என்றுசொல் மனச்செருக்கி - அடுத்தவர்
எவர்முகமாயினும் உடன் கருக்கிக்
கொன்றன உரைபகர்வாள் கொழுநன்முன்
கொடுத்திடு பணிகளைத் தடுத்திடுவாள்
துடித்திடு நடைக்காரி - திடீரென்று
சுளித்துமுன் எடுத்திடு படைக்காரி
குடித்திடும் ஊதாரி - அயலுறு
குடிகளைக் கெடுத்திடும் காந்தாரி
வஞ்சகி வாய்க்காரி - அடுத்தவர்
மனசினை வருத்திடு கோட்காரி
குஞ்சரத் தொனிக்காரி - நெளிப்பொடு
கொலுக்காரி மன அழுக்காறி
வேடிக்கைப் பிரியக்காரி - கோலாகல
வேஷக்காரி அகம் தோஷக்காரி
சோடிக்கும் தாமக்காரி - மலர்மிகச்
சொருகு கொண்டைக்காரி.....
மதிப்பீடு
ஆண், பெண்களின் குணாதிசயங்கள், நடத்தைகள், ஒழுக்கங்கள் பற்றிய செய்திகளைத் தாங்கி வெளிவந்த முதல் நொண்டி நாடக இலக்கிய நூலாக 'இல்லற நொண்டி' நூல் குறிப்பிடப்படுகிறது. ஆர்னல்ட் சதாசிவம் பிள்ளை இயற்றிய நூல்களுள் இலங்கையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூலாக 'இல்லற நொண்டி' நூல் அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Oct-2024, 15:27:41 IST
