under review

மதுரை மேலைக்கடைக் கண்ணம் புகுத்தாராயத்தனார்

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரை மேலைக்கடைக் கண்ணம் புகுத்தாராயத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மதுரை மேலைக்கடைக் கண்ணம் புகுத்தாராயத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பாண்டிய நாட்டில் உள்ள ஊர்களில் ஒன்று கடையம். இவ்வூர் மேலைக்கடையம், கீழைக்கடையம் என இரு பிரிவுகளாக அமைந்தது. கண்ணம் புகுத்தாராயத்தனார் மேலைக்கடையத்தில் பிறந்து மதுரைக்கு சென்று வாழ்ந்தவர். கண்ணம் புகுத்தாராயத்தனார் என்னும் பெயரில் ஆயத்தனார் என்பது புலவரின் இயற்பெயர். கண்ணம் புகுத்தார் என்னும் சொற்றொடர் துயருற்றாரின் நிலையை பாடியமையால் ஏற்பட்டது என கருதப்படுகிறது. இவரது பெயரில் அமைந்துள்ள மேலைக்கடை என்னும் சொல் சில ஏடுகளில் ஓலைக்கடை என்றும் குறிப்பிடப்படுகிறது. அதன்படி தாழை ஆடை உடுத்தியவரின் வாழ்வியலை பாடியிருப்பார் என்று ஊகிக்கப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

மதுரை மேலைக்கடைக் கண்ணம் புகுத்தாராயத்தனார் பாடிய பாடல் புறநானூறில் 350-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தங்கையை திருமணம் செய்து தர கேட்டு வந்த வேற்றரசர்களின் கோரிக்கையை மறுத்து, தமையன்கள் போர் தொடுத்தனர். அதனால் ஊருக்கு போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை கூறுவதாக காஞ்சித் திணையில் மகட்பாற் காஞ்சித்துறையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • போருக்கு வரும் அரசர் குதிரைப்படை, காலாட்படை ஆகிய படைகளையும் அச்சமூட்டும் ஒலியெழுப்பும் முரசுகளையும் கொண்டிருப்பர்.
  • போரினால் ஊருக்கு பாதுகாப்பாக இருந்த மதில் இடிந்துவிட்டது. மதில் மேல் இருந்த அம்புகளை செல்லும் பெருவிற்களின் நாண் தளர்ந்துவிட்டது. எதிரிப்படையினால் மதிலுக்கு புறத்தே உள்ள பாதுகாப்புக்கான அகழி தூர்ந்து போக செய்யப்படும்.
  • பகையரசர் தமக்கு அடிபணியாத ஊரினை சுற்றி படைநிலை அமைத்து முற்றுகையிட்டு காத்திருப்பர்.
  • உவமைகள்: முரசொலி இடியொலியை ஒத்திருந்தது. மகட் கொடைக்கு உரியவளின் கண் போரில் ஈடுபட்டு இரத்தம் கூரிய வேல் நுனியை போல் சிவந்து தீவிரத்துடன் காணப்பட்டது.

பாடல் நடை

புறநானூறு - 350

  • திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி

தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர்
யாங்கா வதுகொல் தானே தாங்காது
படுமழை உருமின் இரங்கு முரசின்
கடுமான் வேந்தர் காலை வந்துஎம்
நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;
பொருதாது அமருவர் அல்லர்; போருழந்து
அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எஃகின் சிவந்த உண்கண்
தொடிபிறழ் முன்கை இளையோள்
அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Apr-2025, 10:22:15 IST