under review

சாகலாசனார்

From Tamil Wiki
Revision as of 00:54, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சாகலாசனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் அகநானூறில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

சாகலாசனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சேரநாட்டைச் சேர்ந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

சாகலாசனார் பாடிய பாடல்கள் அகநானூறில் 16 மற்றும் 27-ம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன. அகநானூறின் 16-ம் பாடல் பரத்தையிடம் சென்று வந்த தலைவனது செயலை காண்பிக்கும் தலைவியின் கூற்றாக மருதத் திணையில் அமைந்துள்ளது. 270-ம் பாடல் தன்னோடு கூடியிருக்க வந்தாலும் ஊருக்கு திரும்பி செல்வதனையே நோக்கமாக கொண்டிருக்கும் தலைவனிடம் தலைவி கூறுவதாக நெய்தல் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

அகநானூறு - 16
  • பரத்தையர் தன் இளமுலைகளின் மேல் பொன்னாலான அழகிய அணிகளை அணிந்திருப்பர்.
  • மழலை சொற்கள் மாறாத இளம் சிறுவர் பொன்னலான அரைஞாண் கொடியை அணிந்தவாறு தெருவில் விளையாடுவர்.
  • தெருவில் தன்னந்தனியாக விளையாடிய இளம் சிறுவன் தலைவனின் மகன் என்று அறிந்து, தலைவனது காதற் பரத்தையானவள் அம்மகனை தூக்கிக் கொஞ்சினாள்.
  • பரத்தையானவள் சிறுவனின் தாயான தலைவியைக் கண்டவுடன் பிடிபட்ட திருடனைப் போல உடல் குறுகிய நிலத்தை பார்த்தவாறு வெட்கப்பட்டு நின்றாள்.
  • தலைவி, அப்பரத்தையும் அருந்ததி போல கற்பினள், அவளை என் பொறுப்பில் பாதுக்காக்கிறேன். நம் மகனுக்கு இன்னொரு தாயானாள் என்று தலைவனிடம் கூறினாள்.
  • உவமை: பரத்தையரை நாடி செல்லும் தலைவனின் செயல் தாமரைக்குளத்தில் வாழும் நீர்நாயின் வாழ்வுக்கு ஒப்பாகவும் இல்லத்தில் உள்ள தலைவியின் நிலை தாமரைக்கு ஒப்பாகவும் குறிப்புணர்த்தப்பட்டது. தலைவனின் மகனது கையும் வாயும் தாமரையும் அல்லியும் போல சிவந்து மென்மையாக இருந்தன. பரத்தையின் பற்கள் முல்லையின் வெண்மை நிறத்தில் கூர்மையாக இருந்தன.
அகநானூறு - 270
  • மீனவர்கள் புலால் நாற்றம் வீசும் சிறிய குடியிருப்புகளை உடைய பாக்கம் என்றழைக்கப்படும் கடற்கரையோர கிராமங்களில் வாழ்வர். கூட்டமாக மீன் பிடித்து வருவர்.
  • நெய்தல் நிலத்து மீனவர்கள் பெரிய உப்பங்கழியில் மலர்ந்த வளம் வாய்ந்த இதழ்களையுடைய நீலப்பூக்களையும் புலிநகக்கொன்றை மரத்தினது பூக்களையும் சேர்த்துக்கட்டி தலையில் அணிந்து கொள்வர். இத்தகு ஊரினை சேர்ந்தவன் தலைவன்.
  • சிவந்த இறாமீன்களால் உண்டாக்கப்படும் கடல் அலையின் நுரையானது கிளைகள் தாழ்ந்து தொங்கும் புன்னை மரத்தின் அடிப்பகுதியை மோதி உடையும். தலைவியானவள் அம்மரம் அமைந்துள்ள சோலையில் அமர்ந்து மீனவர்கள் நிலம் வந்து சேரும் பெருந்துறையை நோக்கியவாறு தலைவனின் வருகையை எதிர்ப்பார்ப்பாள்.
  • தலைவன் தன்னிடம் வாராமை கண்டு தனது அழகிய மாநிற மேனியின் அழகு அழிய கண் உறங்காமல் வருந்திய தலைவி தன் நலத்தை இழக்கிறாள்.
  • உவமை: சீரான வெட்டப்பெற்ற பிடரிமயிரினை கொண்ட வலிமைமிக்க அழகிய குதிரைகளை கொண்ட சேர மன்னன் குட்டுவனின் ஊரான கழுமலம் போல அழகு நிரம்ப வாய்க்கப்பெற்றவள் தலைவி.
  • தெய்வத்தினை உடைய முள் மரத்தில் கூடுக்கட்டிய அன்றில் பறவைக்கு ஒப்பாக தலைவன் மேல் தலைவி கொண்ட காதல் உவமிக்கப்படுகிறது. இரவுப்பொழுதில் அன்றில் பேடைப்பறவையை தனியே விட்டுச்சென்ற சேவலுக்கு ஒப்பாக தலைவனது செயலும் கூட்டில் தனித்திருந்து வருந்தும் அன்றிலுக்கு ஒப்பாக தலைவியின் நிலையும் கூறப்பட்டது.

பாடல் நடை

அகநானூறு - 16

  • திணை: மருதம்
  • துறை: பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன் யாரையும் அறியேன் என்றாற்குத் தலைமகள் சொல்லியது

நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அயலிதழ் புரையும்
மாசில் அங்கை மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்
தேர்வழங்கு தெருவில் தமியோற் கண்டே
கூரெயிற் றரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்
பொலங்கலஞ் சுமந்த பூண்தாங் கிளமுலை
வருக மாளஎன் னுயிரெனப் பெரிதுவந்து
கொண்டனள் நின்றோள் கண்டுநிலைச் செல்லேன்
மாசில் குறுமகள் எவன்பே தற்றனை
நீயுந் தாயை இவற்கென யான்தன்
கரைய வந்து விரைவனென் கவைஇக்
களவுடம் படுநரில் கவிழ்ந்துநிலங் கிளையா
நாணி நின்றோள் நிலைகண் டியானும்
பேணினென் அல்லனோ மகிழ்ந வானத்
தணங்கருங் கடவு ளன்னோள் நின்
மகன்தா யாதல் புரைவதாங் கெனவே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Feb-2025, 22:12:54 IST