under review

டி.டி. கல்யாணசுந்தரம்

From Tamil Wiki
Revision as of 00:35, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:கவிஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

டி.டி. கல்யாணசுந்தரம் (பிறப்பு: ஆகஸ்ட் 26, 1928) கவிஞர், தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களுள் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

டி.டி. கல்யாணசுந்தரம், ஆகஸ்ட் 26, 1928 அன்று, தஞ்சாவூரில் பிறந்தார்.

நாடக வாழ்க்கை

டி.டி. கல்யாணசுந்தரம், சிறு வயது முதலே நாடக ஆர்வம் கொண்டிருந்தார். தனது 11-ம் வயதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் மதுரை தேவி பால வினோத சங்கீத சபாவில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்றார். அதன் மூலம் நாடக நடிகராகத் தமது நாடக வாழ்க்கையைத் தொடங்கினார். இக்குழுவில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.

நாடகப் பங்களிப்புகள்

டி.டி. கல்யாணசுந்தரம், சக்தி கிருஷ்ணசாமியின் சக்தி நாடக வைரம் நாடக சபா, சிவாஜி கணேசனின் சிவாஜி நாடக மன்றம், ஒ.ஏ.கே. தேவர் நாடக மன்றம், எம்.ஆர். ராதா, லலிதா, நம்பிராசன் போன்றோரது நாடகக் குழுக்களின் நாடகங்களில் பல்வேறு வேடங்களில் நடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். அவற்றுள், 'சம்பூரண இராமாயணம்', 'ஸ்ரீ ஐயப்பன்', 'தசாவதாரம்', 'கிருஷ்ண லீலா', 'சக்தி லீலா', 'குமார விஜயம்', 'பக்த துருவன்', 'மனோகரா', 'இன்பசாகரன்', 'ஞான சௌந்தரி', 'விதி', 'தோழன்', 'கவியின் கனவு', 'என் தங்கை', 'ரத்தக்கண்ணீர்', 'தங்கப்பதக்கம்', 'களம் கண்ட கவிஞன்' ஆகியவை குறிப்பிடத்தகுந்த நாடகங்களாகும்.

டி.டி. கல்யாணசுந்தரம், பெரும்பாலான நாடகங்களில் பெண் வேடம் தாங்கி நடித்தார். ஆண் வேடங்களிலும் நடித்தார். நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம் பிள்ளை, சிவாஜி கணேசன், எம். என்.நம்பியார், என்.என். கண்ணப்பா, எஸ்.ஏ. நடராஜன், ஒ.ஏ.கே.தேவர், கே. எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலருடன் நடித்தார்.

'வளம் பெற்ற வாழ்வு', 'தெய்வக்கட்டளை', 'நூற்றுக்கு நூறு' முதலிய நாடகங்களை எழுதியதுடன் அவற்றை நாடகமாகத் தயாரித்தளித்தார்.

இசை வாழ்க்கை

டி.டி. கல்யாணசுந்தரம், கர்நாடக இசை கற்றவர். ஏறத்தாழ 70 இராகங்களில் பாடல் பாடும் ஆற்றல் பெற்றிருந்தார். மிருதங்கம், தபேலா, போன்ற இசைக் கருவிகள் வாசிக்கத் தெரிந்தவர். பாடல் எழுதி மெட்டமைக்கும் திறன் கொண்டவர். 'சம்பூரண இராமாயணம்', பராசக்தி வைபவம்', 'ஸ்ரீ ஐயப்பன்' முதலிய புராணக் கதைகளை இசை நாடகமாக, கதை, வசனம், பாடல்கள் எழுதிப் பல மேடைகளில் அரங்காற்றுகை செய்தார்.

டி.டி. கல்யாணசுந்தரம், இராம காவியத்தை 1008 வரிகளில் ஒவ்வொரு வரியின் முடிவிலும் 'ராம்' 'ராம்' என்று வருமாறு எழுதினார். இதனை எச்.எம்.வி. நிறுவனம் ஒலி நாடாவாக வெளியிட்டது. பாடல்களை டி.எம். சௌந்தரராசன் பாடினார். 'ஸ்ரீ ஐயப்பன் சரித்திரம்' நாடகத்தை எழுதினார். இதில் வரும் பாடல்களை எம்.கே. தியாகராஜ பாகவதரின் மெட்டுகளில் எழுதினார். இது ஒலிநாடாவாகவும் வெளிவந்தது.

மதிப்பீடு

டி.டி. கல்யாணசுந்தரம், நடிகர், நாடக ஆசிரியர், நாடகத் தயாரிப்பாளர், இசைப் பாடலாசிரியர் எனப் பல களங்களில் இயங்கியவர். இசை மற்றும் நாடக உலக வளர்சிக்கு அதிகம் பங்காற்றியவர். பல்வேறு நாடகங்களை எழுதி, தயாரித்து அரங்காற்றுகை செய்தார். உடனுக்குடன் பாடல்களை இயற்றும் ஆற்றல் கொண்டிருந்தார். தமிழ்நாட்டின் மூத்த நாடகக் கலைஞர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

உசாத்துணை

  • நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Nov-2025, 15:39:11 IST