under review

க.ப. அறவாணன்

From Tamil Wiki
க.ப. அறவாணன் (நன்றி மு.இளங்கோவன்)

க.ப. அறவாணன் (கிருஷ்ணமூர்த்தி) (அருணாச்சலம்) (ஆகஸ்ட் 9, 1941 - டிசம்பர் 23, 2018) தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், ஆய்வாளர். புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையின் தலைவராகவும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தார். சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு ஆகிய துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

கிருஷ்ணமூர்த்தி, அருணாசலம் ஆகிய இரு இயற்பெயர்களை க.ப. அறவாணன் கொண்டிருந்தார். பின்னாளில் தன் பெயரை அறவாணன் என்று மாற்றிக்கொண்டார். அறவாணன் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கடலங்குடியில் பழநியப்பன், தங்கப்பாப்பு இணையருக்கு ஆகஸ்ட் 9, 1941-ல் பிறந்தார். தஞ்சாவூரிலுள்ள விஷ்ணுபுரத்தில் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி கற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம், பி.ஓ.எல் பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் 'நன்னூலும் அதன் உரைகளும்' என்ற ஆய்வுக்கட்டுரைக்காக தமிழில் முனைவர் பட்டம் பெற்றார். பகுதி நேர வேலை செய்து கொண்டே பட்டம் பெற்றார்.

வ.ஐ. சுப்பிரமணியம், ச.வே.சுப்பிரமணியன் ஆகியோரின் மாணவர்.

தனிவாழ்க்கை

க.ப. அறவாணன் ஏப்ரல் 21, 1969-ல் ஆய்வாளர் தாயம்மாளை மணந்தார். மகன் அறிவாளன். மகள் அருள்செங்கோர்.

ஆசிரியப்பணி

பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக முதலில் பணியில் சேர்ந்தார். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் முதல்வராக இருந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துணைப்பேராசியராக இருந்தார். செனகல் பல்கலைக்கழகம் ஆய்வுப்பேராசிரியர். சென்னை லயோலா கல்லூரி தமிழ்ப்பேராசிரியரும் துறைத்தலைவருமாக இருந்தார் . 1987 முதல் 1998 வரை புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராசிரியர் மற்றும் தமிழியல் புலத்தலைவராக இருந்தார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

  • சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து 'பண்பாட்டு பாசறை' என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
  • அனைத்து இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் செயலாளர், பொருளாளராக இருந்தார்.
  • இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராக இருந்தார்.
  • தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் தோற்றுவித்த 'தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்றம்' செயலிழந்தபோது ஞானப்பிரகாச அடிகளாரோடு இணைந்து மீட்டெடுத்தார்.
  • தொல்பொருள் துறை ஆய்வாளர்கள், தமிழியல் துறை ஆய்வாளர்கள் இணைந்து ஆராய்ச்சி மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்த காரணமாக இருந்தார். அதன் வழியாக 'ஆய்வுக்கொத்து' என்ற தொகுப்பை வெளியிட்டார்.

இதழியல்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக இருந்தபோது 'தேடல்', 'முடியும்' 'செய்தி விழுது' ஆகிய வெளியீடுகளை வெளியிட்டார். இவற்றில் ஆய்வாளர்கள், ஆசிரியர்களின் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. 'அறிவியல் தமிழியம்','கொங்கு' ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

பதிப்பாசிரியர்

இ.ப.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக்கோவை நூல்களின் பதிப்பாசிரியராக இருந்தார்.

ஆய்வு வாழ்க்கை

1977-82 வரை மேற்கு ஆப்பிரிக்காவின் செனகல் அதிபர் செங்கோரின் அழைப்பின் பேரில் தக்கார் பல்கலைக்கழகத்தில் மொழி சார்ந்த மானுடவியல் ஆய்வை மேற்கொண்டார்.

'தமிழர் அடிமையானது ஏன், எவ்வாறு?', 'தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள்', 'தமிழர்தம் மறுபக்கம்' ஆகியவை இவரின் சமூகவியல்-மானுடவியல் நூல்கள். 1975 முதல் உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்து அவர்களின் பண்பாடு, வாழ்வியலை தமிழர்களின் வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

க.ப. அறவாணன் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். 'அற்றைநாள் காதலும் வீரமும்' என்ற நூல் சங்க இலக்கிய ஆய்வு நூல். 'சைனரின் தமிழ் இலக்கண நன்கொடை', '700 ஆண்டுகளில் நன்னூல்', 'அவிநயம்', 'அமுதசாகரம்', 'இந்திரகாளியம்' ஆகியவை இவர் எழுதிய நூல்கள். கவிதைகள், புனைவுகளும் எழுதினார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டார். ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் 'தொல்காப்பியக்களஞ்சியம்', 'திருக்குறள் அறநூல் களஞ்சியம்' ஆகிய நூல்களை தொகுத்தார்.

நவம்பர் 2024-ல் அறவாணனின் படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடமை ஆக்கியது.

விருது

  • தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
  • 1986-ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது
  • சி.ப. ஆதித்தனார் இலக்கியப் பரிசு
  • 1991-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக "அமெரிக்க பயோகிராப்பிக்கல் நிறுவனம்" இவரைத் தேர்வு செய்தது.

மறைவு

க.ப. அறவாணன் டிசம்பர் 23, 2018-ல் காலமானார்.

இலக்கிய இடம்

க.ப.அறவாணன் கல்வித்துறை சார்ந்த இலக்கிய ஆய்வு நூல்களை எழுதியவராக அறியப்படுகிறார். களப்பிரர் காலம் மற்றும் நீதிநூல்களை பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. பொதுவாக ஒரு குறிப்பிட்ட நோக்கில் மாணவர்களுக்காக பல்வேறு நூல்களிலுள்ள செய்திகளைத் தொகுத்துச் சொல்லும் வகையான நூல்கள் அவை.

நூல் பட்டியல்

புனைவு
  • புரட்சிப்பொறிகள் (கவிதை)
  • அவன் அவள் அது (சிறுகதைத்தொகுதி)
  • அவளொரு பண்புத்தொகை (நெடுங்கதை)
அபுனைவு
  • அற்றையநாள் காதலும் வீரமும் (முனைவர் பட்ட ஆய்வேடு)
  • கவிதை கிழக்கும் மேற்கும் (1975)
  • காலப்போக்கும் கல்லூரிப்போக்கும்
  • கல்வித்துறை உருப்பட
  • சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை
  • தொல்காப்பிய ஒப்பியல் (1975)
  • தொல்காப்பியக் களஞ்சியம் (1975)
  • தமிழர் தடங்கல் (1992)
  • தமிழர்தம் தலைமை வழிபாடு
  • தமிழர்தம் மறுபக்கம்
  • தமிழரின் தாயகம் (உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்)
  • தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்
  • தமிழ்ச்சமுதாய நோய்கள்
  • தமிழ்ச்சமுதாய வரலாறு- முதற்பகுதி
  • தமிழ் மக்கள் வரலாறு
  • திராவிடர்
  • படைப்பாளி + சமுதாயம் = இலக்கியம் (1995)
  • பயண அனுபவங்களின் பாதை வெளிச்சங்கள்
  • பாதையாகு பாறைகள்: வாழ்க்கை முன்னேற்ற வழிமுறைகள் (1988)
  • அருங்கலச்செப்பு (உரை)
ஆங்கிலம்
  • Collected Papers on Tamilogy
பதிப்பித்த நூல்கள்
  • அவிநயம்:மூலமும் உரையும் (1975)

உசாத்துணை

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 16:45:31 IST