under review

சின்ன கட்டியம்

From Tamil Wiki
Revision as of 17:41, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சின்ன கட்டியம் (பதிப்பு: 2019) திருப்போரூரில் உறையும் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். இதன் ஆசிரியர்: ஸ்ரீ சிதம்பர சுவாமிகள்

வெளியீடு

சின்ன கட்டியம் நூலை, நிறைமதி வழிபாட்டுச் சங்கம், 2019-ல் வெளியிட்டது. இதன் ஆசிரியர்: சிதம்பர சுவாமிகள். உரையாசிரியர்: புலவர் மாசிலாமணி. திருப்போரூர் முருகன் சந்நிதி முறை தொகுப்பில் இந்நூல் இடம்பெற்றது.

ஆசிரியர்

சிதம்பர சுவாமிகள் (சிதம்பர அடிகள்) வீரசைவ மரபைச் சேர்ந்த பக்திக் கவிஞர். வீரசைவ மரபைச் சேர்ந்த துறையூர் சாந்தலிங்க அடிகளின் மாணவர். திருப்போரூரில் கோயில் கொண்ட முருகன் மேல் பல துதி நூல்களை இயற்றியவர்.

கட்டியம் விளக்கம்

அரசன் அவையில் வீற்றிருக்கும்போது அவ்வரசனின் புகழை, அவையில் உள்ள சான்றோர்கள் கேட்டு மகிழும் வகையில், கட்டியங்காரன் புகழ்ந்து கூறும் பாடல்களே 'கட்டியம்' ஆகும். பாடல்களின் அளவைப் பொறுத்து இவை 'பெரிய கட்டியம்' என்றும் 'சிறிய கட்டியம்' என்றும் அழைக்கப்படுகின்றன.

நூல் அமைப்பு

சின்ன கட்டியம் நூலில் 20 பாடல்கள் இடம்பெற்றன. இப்பாடல்கள் இரண்டடிகளால் ஆனதாகவும், துதிப் பாடலாகவும் அமைந்துள்ளன. பாவகையால் சிறியது என்பதால் 'சின்ன கட்டியம்' என்ற பெயரைப் பெற்றது.

உள்ளடக்கம்

திருப்போரூர் தலத்து முருகப் பெருமானின் பெருமையும், தலத்தின் சிறப்பும் சின்ன கட்டியம் பாடல்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

பாடல்

சுரர்முனிவர் உலகர் பணி பாதா
சுகசொருப நிசகலை விநோதா
பர அறிவை அறிய அருள்போதா
பரவதிக சமரபுரி நாதா

குறவர்மகள் தழுவுமணி மார்பா
குலவுபரி பூரணசொ ரூபா
நறவுபரி மளம்நிறையும் நீபா
நயசமர புரிமருவு பூபா

நெட்டூர சூரசங் காரா
நித்தமிடு பச்சைமா யூரா
விட்டொளிரும் வச்சிரகே யூரா
வித்தகர்து தித்தபோ ரூரா

நீலக்க லாபமயில் வீரா
நீபத்து மாமலர்கொள் தாரா
கோலத் தியாககெம் பீரா
கோதற்ற நாதபோ ரூரா

பொன்மாரி பொழிகின்ற புயலே
பொய்யாத அறி ஞோர்கள் செயலே
தென்மாறன் மகிழ்பலகை இயலே
செஞ்ஞான சுகம்விளையும் வாயே

மதிப்பீடு

சின்ன கட்டியம் இனிய சந்தத்துடன், சொற்சுவையும், பொருட் சுவையும் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. முருகன் மீதான பக்தி இலக்கியங்களில் ஒன்றாகவும், 17-ம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • சின்ன கட்டியம் (திருப்போரூர் சந்நிதி முறை), உரையாசிரியர்: பா. மாசிலாமணி, வெளியீடு: நிறைமதி வழிபாட்டுச் சங்கம், விற்பனை உரிமை: ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வழிபாட்டுச் சங்க கல்வி அறக்கட்டளை, புதுப்பெருங்களத்தூர், சென்னை; முதல் பதிப்பு: 2019.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2025, 13:06:37 IST