பூவை நிலை
பூவை நிலை பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. திருமாலைப் பாடுதலும், அரசனை தெய்வத்துக்கு ஒப்பிட்டுப் பாடுதலும் பூவை நிலையின் இலக்கணங்கள்.
விளக்கம்
பூவை எனில் காயாமரம் என்றும் பொருள். காயாம்பூவைப் புகழ்தல் என்பது பூவை நிலை. 'ஆனிரையைக் காக்கும் காவலன் (திருமால்) நிறத்தொடு ஒப்புக்காட்டிக் காட்டில் மலர்ந்த காயாம் பூவைப் புகழ்தல்' என்று புறப்பொருள் வெண்பாமாலை இதன் இலக்கணத்தை வகுக்கிறது. காயாம்பூ நிறம் திருமாலின் நிறத்தை ஒத்திருக்கும் தன்மைக்காக அதைப் பாராட்டுதல் என்பதும் இறைவனின் மேனி நிறத்தைப் பாராட்டுதலேயாம் என்று கொளு கூறுகிறது
கறவை காவலன் நிறனொடு பொரீஇப்
புறவு அலர் பூவைப்பூப் புகழ்ந்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 192)
இதற்கான எடுத்துக்காட்டு வெண்பா:
பூவை விரியும் புது மலரில் பூங்கழலோய்
யாவை விழுமிய யாமுணரேம் - மேவார்
மறத்தொடு மல்லர் மறம்கடந்த காளை
நிறத்தொடு நேர்தருத லான்'
பொருள்:மாயவனது நிறத்தோடு உவமை கொள்ளுதலால் காயா மலரைப் போலச் சீரியவை எவை என நாங்கள் அறிந்திலேம்.
மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்
தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 5)
என்று தொல்காப்பியமும் திருமாலைப் பாடுவதையே பூவை நிலையின் இலக்கணமாகக் கூறுகிறது. இளம்பூரணர் முத்தொள்ளாயிரத்தில் உள்ள
இந்திரன் என்னின் இரண்டேகண் ஏறூர்தந்த
அத்தரத்தான் என்னிற் பிறையில்லை--அந்தரத்துக்
கோழியான் என்னின் முகன்ஒன்றே கோதையை
கோழியான் என்றுணரற் பாற்று.
என்ற பாடலைத் தம் உரையில் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார். புறநானூறு தொகுப்பில் 8,56, 59, 374 எண்ணுள்ள பாடல்கள் பூவை நிலையில் அமைந்தவை. இவை திருமாலைப் பாடுவதோடல்லாமல் அரசனைத் தெய்வங்களுக்கு ஒப்புமைப்படுத்திப் பாடுபவை. முத்தொள்ளாயிரத்தில் சில பாடல்கள் அரசனைத் திருமாலுக்கு ஒப்புமைப்படுத்துபவை.
எடுத்துக்காட்டு
புறநானூறு 56
- திணை: பாடாண் துறை:பூவை நிலை.
- பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார் (மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எனவும் பாடம்).
- பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்,
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என
ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா நல்இசை நால்வர் உள்ளும்
கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்;
ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
அரியவும் உளவோ நினக்கே? அதனால்
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி, ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே.
" சிவன், திருமால், பலராமன், முருகன் இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள்.உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்; வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்; புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்; நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன். இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால், உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ? அதனால், இரப்போர்க்கு அரிய அணிகலன்களை வழங்கி, யவனர் நல்ல கலங்களில் கொண்டுவந்த, குளிர்ந்த மணமுள்ள மதுவைப் பொன்னால் செய்யப்பட்ட அழகிய கிண்ணங்களில் ஏந்தி வந்து, ஓளிபொருந்திய வளையல் அணிந்த மக்ளிர் உனக்கு நாள்தோறும் கொடுக்க, அதைக் குடித்து, மகிழ்ச்சியோடு சிறப்பாக இனிது வாழ்வாயாக"- என தெய்வங்களைப் பாடி, மன்னனை அவர்களுக்கு ஒப்பிட்டுக் கூறியதால் இது பூவை நிலை.
முத்தொள்ளாயிரம்
குருந்தம் ஓசித்தஞான் றுண்டால் அதனைக்
கரந்த வடிவெமக்குக் காட்டாய்-மரம்பெரு
யோரிற் குருகுஉறங்கும் பூம்புனல்நீர் நாட?
மார்பிற் கடந்த மறு.
சோழனை "நினது மார்பில் இடந்த மறு,முன்னர் நீ குருந்தம் ஒசித்த காலத்தில் இருந்தது, அதை எங்கே ஒளித்தாய்? எமக்குக் காட்டுவாயாக" என்று திருமாலுக்கு ஒப்புமைப்படுத்துவதால் இது பூவை நிலை.
உசாத்துணை
- புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரைஅயும், தமிழ் இனைய மின்னூலகம்
- பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
- Puram1to69
- புறநானூறு,மூலமும் உரையும்-புலியூர்க் கேசிகன், ஆர்கைவ் வலைத்தளம்-
- பூவை நிலை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 16:01:44 IST