இங்கித மாலை
இங்கித மாலை, இராமலிங்க வள்ளலாரால் இயற்றப்பட்ட சிற்றிலக்கிய நூல். தொடக்க காலத்தில் தனி நூலாக வெளிவந்து, பின் திருவருட்பாவின் முதல் திருமுறையில் இடம்பெற்றது. இதன் காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.
பதிப்பு
இங்கித மாலை நூல், இராமலிங்க வள்ளலாரின் மாணவரும் சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பண்டிதருமான க. வ. திருவேங்கடநாயுவின் உரையுடன், குளத்தூர் குப்புசாமி முதலியாரால், சென்னை, கலாரத்நாகர யந்திரசாலையில் 1904-ல் அச்சிடப்பட்டு வெளியானது . தொடர்ந்து பலரது உரைகளுடன் பல்வேறு பதிப்பகங்கள் இங்கித மாலையை வெளியிட்டன.
வள்ளலாரின் பாடல்கள் முறையாகத் தொகுக்கப்பட்டபோது, 'இங்கித மாலை' திருவருட்பாவின் முதல் திருமுறையில் இடம்பெற்றது.
நூல் வரலாறு
"இராமலிங்க வள்ளலார் தோத்திரப் பாடல்கள் பாடுவதில் மட்டுமே வல்லவர். இலக்கிய, இலக்கண நயங்களுடன் சொற்செறிவு, பொருட்செறிவோடு பாட அவரால் இயலாது" - என்பது அவர் காலத்தில் வாழ்ந்த புலவர்கள் சிலரது கருத்தாக இருந்தது.
வள்ளலார் மீது அன்பும் மதிப்பும் கொண்டிருந்த வேறு சில புலவர்கள், மேற்கண்ட கருத்துக் கொண்டவர்களின் எண்ணத்தை மாற்றும் வகையில் புதிய பிரபந்தம் ஒன்றை இயற்றியருளுமாறு வள்ளலாரிடம் வேண்டிக் கொண்டனர். அதன்படி வள்ளலார் இயற்றியதே 'இங்கித மாலை'.
நூல் அமைப்பு
இங்கித மாலை நூலின் தொடக்கத்தில் விநாயகர் மற்றும் முருகப்பெருமான் மீதான காப்புச் செய்யுள் இடம்பெற்றது. பின்னர் நூல் இடம்பெற்றது. இந்நூலில் காப்புச் செய்யுள் தவிர்த்து 165 பாடல்கள் உள்ளன. 'சேடி யென்னேடீ' என்ற வரிகள் ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் இடம்பெற்றன.
உள்ளடக்கம்
நயமாகவும், இன்பமாகவும் குறிப்புப் பொருள் தோன்ற பேசுவதும் எழுதுவதும் 'இங்கிதம்' எனப்படும். அவ்வாறு பாடப்பட்ட மாலை நூல்களின் தொகுப்பே 'இங்கித மாலை' தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தையும், அவர்கள் மனைவியரது தங்கள் கற்பின் மீதான செருக்கையும் அடக்கக் கருதிய சிவபெருமான், பிச்சாடனர் வேடத்தில் அங்கு தோன்றினார். அவரைக் கண்ட ரிஷி பத்தினிகள், அவர் அழகு கண்டு மயங்கி உள்ளுறையோடு கேட்ட கேள்விகளுக்கு இறைவன் அளித்த பதில்களே இங்கித மாலை நூலாக அமைந்துள்ளது.
பாடல்
தண்ணார் மலரை மதிநதியைத் தாங்குஞ் சடையா ரிவர்தமைநா
னண்ணா லொற்றி யிருந்தவரே யைய ரேநீர் யாரென்றே
னண்ணா ரிடத்து மம்பலத்து நடவா தவர்நா மென்றுசொலி
யெண்ணா தருகே வருகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ
முந்தை மறையோன் புகழொற்றி முதல்வ ரிவர்தம் முகநோக்கிக்
கந்தை யுடையீ ரென்னென்றேன் கழியா வுன்றன் மொழியாலே
யிந்து முகத்தா யெமக்கொன்றே யிருநான் குனக்குக் கந்தையுள
திந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ
சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் செல்வப் பெருமா னிவர்தமைநா
னோடார் கரத்தீ ரெண்டோள்க ளுடையீ ரென்னென் றுரைத்தேனீ
கோடா கோடி முகநூறு கோடா கோடிக் களமென்னே
யீடா யுடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ
வேலை ஞாலம் புகழொற்றி விளங்குந் தேவ ரணிகின்ற
மாலை யாதென்றேனயன்மான் மாலை யகற்று மாலையென்றார்
சோலை மலரன் றேயென்றேன் சோலை யேநாந் தொடுப்பதென
வேல முறுவல் புரிகின்றா ரிதுதான் சேடி யென்னேடீ
ஆற்றுச் சடையா ரிவர்பலியென் றடைந்தார் நுமதூ ரியாதென்றேன்
சோற்றுத் துறையென் றார்நுமக்குச் சோற்றுக் கருப்பேன் சொலுமென்றேன்
றோற்றுத் திரிவே மன்றுநின்போற் சொல்லுங் கருப்பென் றுலகியம்ப
வேற்றுத் திரியே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ
உசாத்துணை
- வள்ளலாரின் மாலை இலக்கியங்கள், சி.வெ. சுந்தரம், கங்காராணி பதிப்பகம், முதல் பதிப்பு, 2012
- இராமலிங்கரும் தமிழும், ஊரன் அடிகள், சமர சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், முதல் பதிப்பு, 1967
- திருவருட்பா தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Dec-2024, 09:16:55 IST
