second review completed

காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்

From Tamil Wiki
Revision as of 08:42, 18 August 2025 by Jayashree (talk | contribs)

காவிரிப் பூம்பட்டினத்து சேந்தன் கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

காவிரிப் பூம்பட்டினத்து சேந்தன் கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கண்ணன் என்னும் இயற்பெயர் கொண்டவர். காவிரிப் பூம்பட்டினத்தை சேர்ந்தவர். சேந்தன் என்பாரின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

காவிரிப் பூம்பட்டினத்து சேந்தன் கண்ணனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 347-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டச் செல்லும் தலைவன் தலைவியும் தன்னுடன் வருவாளாயின் பயணம் இனிதாக இருக்கும் என எண்ணிக்கொள்வதாக பாலைத் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பாலை நிலத்தில் உள்ள நீர் நிறைந்த சுனைகளை ஒட்டி வாகை மரங்கள் வளர்ந்து நிற்கும். நீண்ட காம்பினை கொண்ட வாகை மலர்கள் சுனை நீர் வற்றிய காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும்.
  • உவமை: பாலை நிலத்து வற்றிய சுனைக்குப் பக்கத்தில் நிற்கும் இளைய வாகை மரத்தின் நீள் காம்புள்ள மலர் இளமயிலின் கொண்டைக்கு உவமிக்கப்பட்டது.

பாடல் நடை

குறுந்தொகை - 347

  • திணை: பாலை
  • கூற்று: பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.

மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்
குமரி வாகைக் கோலுடை நறுவீ
மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்
கான நீளிடைத் தானு நம்மொடு
ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின்
நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.