காப்பியஞ் சேந்தனார்
காப்பியன் சேந்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
காப்பியஞ் சேந்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சேந்தனார் என்னும் இயற்பெயர் உடையவர். காப்பியன் என்பது ஊர் பெயர், குடிப்பெயர் மற்றும் தந்தையின் பெயர் ஆகிய மூன்றில் ஒன்றை குறிப்பதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
காப்பியஞ் சேந்தனார் பாடிய பாடல் நற்றிணையில் 246 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்ட சென்ற தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவிக்கு, தலைவியை சுற்றி நடக்கும் சகுணங்களை எடுத்துக்காட்டி, தலைவனின் வருகை உறுதி என்று ஆறுதல் சொல்லும் தோழியின் கூற்றாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- கார்காலத்தில் பொன்னிற கொன்றை பூவுடன் பிடவம் பூவும் மலர்ந்திருக்கும்.
- வீடுகளுக்கு வேலியாக நொச்சி செடியையும், வேலிக்கு உள்ளாக மாமரங்களை வளர்க்கும் வழக்கம் இருந்துள்ளது.
- வீட்டு சுவரில் உள்ள பல்லி எழுப்பும் சப்தமும் மாமரத்தில் இருந்து கருங்குயில் எழுப்பும் ஒலியும் விரும்பியவரின் வருகையை அறிவிக்கும் நன் நிமித்தமாக நம்பப்பட்டுள்ளது.
பாடல் நடை
நற்றிணை - 246
- திணை: பாலை
- கூற்று: பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி,
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,
வருவர் வாழி-தோழி!-புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன் இசை வானம் இரங்கும்; அவர்,
'வருதும்' என்ற பருவமோ இதுவே?
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- நற்றிணை - 246:Tamilvu
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.