க. நவம்
க.நவம் (கந்தையா நவரத்தினம்) (பிறப்பு: 1950) ஈழ எழுத்தாளர், சிற்றிதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர். புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார். நான்காவது பரிமாணம் இதழை நடத்தினார்.
பிறப்பு, கல்வி
க.நவம் இலங்கை யாழ்ப்பாணத்து வடமராச்சியில் உள்ள பொலிகண்டில் கந்தையா, சின்னம்மாள் தம்பதியருக்கு 1950ல் பிறந்தார். இவரது சகோதரர் ஈழ எழுத்தாளரான தெணியான்.
வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் சென்ட் பற்றிக்ஸ் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆகியவற்றில் க.நவம் கல்விகற்றார். பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் சிறப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்வியை முடித்தார். இலங்கை பேராதனைப் பல்கலையில் இளங்கலைப் பட்டமும், வேளாண்மை பொருளியலில் முதுகலைப்பட்டமும் பெற்றார்.
தனிவாழ்க்கை
க.நவம் 16 ஆண்டுகள் இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறிது காலம் கல்லூரி ஆசிரியராகவும் இருந்தார். இலங்கை கல்வி அமைச்சகரத்தில் பாடவிதான அபிவிருத்திச் சபையில் பணியாற்றினார். கனடாவில் கல்விமதிப்பீட்டாளர் (Accreditation Facilitator) ஆக பணியாற்றி ஓய்வுபெற்றார். கனடிய அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.
க.நவம் அவர்களின் மனைவி ஷியாமளா நவம் எழுத்தாளர். 1986-ல் புலம்பெயர்ந்து கனடாவில் டொரெண்டோ நகரில் வசிக்கிறார்கள்.
இலக்கியவாழ்க்கை
க.நவம் சிரித்திரன் இதழ் நடத்திய ’சிரிகதைப் போட்டி’யில் 1965ல் நகைச்சுவைக் குறிப்புக்காக மூன்றாம் பரிசுபெற்றார். அது எழுத்துவாழ்வின் தொடக்கமாக அமைந்தது. அதே ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம் – கல்லூரி மாணவர் சிறுகதைப் போட்டியில் ‘தாயுள்ளம்’ சிறுகதைக்கு இரண்டாம் பரிசுக்கான வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
க.நவம் எழுதி இதழில் வெளிவந்த முதல் சிறுகதை 1966ல் தினபதி நாளிதழில் பிரசுரமான ‘விரதம்’ தொடர்ந்து தினபதி, சிரித்திரன், மல்லிகை, வீரகேசரி, தினகரன், தினக்குரல், வளர்மதி, ஊற்று, ஜீவநதி, கலைமுகம், ஞானம் போன்ற இலங்கை இதழ்களில் எழுதினார்.மல்லிகையில் வெளிவந்த ‘ஒரு பூ உதிர்கிறது’ என்ற சிறுகதையே தனது காத்திரமான இலக்கிய முயற்சியின் துவக்கப் புள்ளி என நவம் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.
க.நவம் எழுதிய முதல் சிறுகதைத் தொகுதி ‘உள்ளும் புறமும்’ கனடாவில் 1991-ல் நான்காவது பரிமாணம் வெளியீடாக பிரசுரமாகியது. ’உண்மைகளின் மௌன ஊர்வலங்கள்’ என்னும் அரசியல் கட்டுரைத் தொகுதி நான்காவது பரிமாணம் சார்பாக 1991-ல் வெளிவந்தது. ’எனினும் நான் எழுகின்றேன்’ கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டுள்ளார்.
நாடகம்
க.நவம் எழுதி, தயாரித்து, நெறிப்படுத்திய ‘இவர்கள் பைத்தியங்கள்’ என்ற நாடகம் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட நாடகப் போட்டியில் 1973-ல் முதலிடம் பெற்றது. அவர் எழுதி, தயாரித்து, நெறிப்படுத்திய ‘இந்தத் தேசத்துக்காக’ என்ற நாடகம் கல்வியமைச்சின் அகில இலங்கை நாடகப் போட்டியில் முதலிடத்துக்கான தங்கப் பதக்கத்தை 1974-ல் பெற்றது. இவர்கள் பைத்தியங்கள், அந்தரங்கம் புனிதமானது, நட்சத்திரவாசி, மனிதவேட்டை போன்ற நாடகங்களை இலங்கையில் நெறிப்படுத்தி நடத்தினார்.
க.நவம் 21 நாடகங்களில் நடித்துள்ளார். 10 நாடகங்களை இயக்கினார். 6 நாடகங்களை எழுதினார். கனடாவின் மனவெளி கலையாற்றுக் குழுவின் அரங்காடலுக்கென நெறிப்படுத்திய நாடகங்கள் ‘அவன்.அவள் – 2000), ‘ஊர்ப்போக்கு’ – 2003 (பிரதியாக்கம்: கவிஞர் சேரன்); கவிமொழிவு, ‘முதுவேனிற்பதிகம்’ – 2012 (கவியாக்கம்: கவிஞர் திருமாவளவன்); ‘கடலிலிருந்து கையளவு மேகம்’ – 2013 (பிரதியாக்கம்: கவிஞர் செழியன்)
இதழியல்
பள்ளியில் படிக்கும்போது ‘குழலோசை’ என்னும் கையெழுத்துப்பத்திரிகையை நடத்தினார்.
க.நவம் நான்காவது பரிமாணம் என்னும் கலை இலக்கிய மாத இதழின் ஆசிரியர், வெளியீட்டாளராக செயல்பட்டார்.
கணையாழி – கனடா சிறப்பிதழின் (2000) தொகுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
வெளியீட்டகம்
க.நவம் நான்காவது பரிமாணம் என்னும் பதிப்பகம் சார்பில் ஒரு நாவல், 4 கவிதைத் தொகுதிகள், 3 சிறுகதைத் தொகுதிகள், 8 கட்டுரைத் தொகுதி, 1 சுயசரிதை, ஒரு தகவற் தொகுதி, ஓர் ஆய்வுநூல், ஓர் அகராதி ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.
திரைப்படம்
க.நவம் ‘சகா’ என்ற பெயரில் ஜூலை 2005 கனடாவில் தயாரித்துத் திரையிடப்பட்ட திரைப்படத்திலும், ‘உறவு’ என்ற பெயரில் 2010-ல் கனடாவில் தயாரித்துத் திரையிடப்பட்ட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
காட்சியூடகம்
க.நவம் TVI தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக பணியாற்றினார். CTRன் செய்தி ஆசிரியர் பதவியிலும் சிறிது காலம் இருந்தார்.
தொகுப்பாசிரியர்
- க.நவம் ’சித்தம் அழகியான்,’ திரு.சுப்பிரமணியம் இராசரத்தினம் – பணிகளும் பதிவுகளும், (2013) என்னும் நூலின் தொகுப்பாசிரியர்.
- தெணியான் கட்டுரைகளின் தொகுப்பாகிய ’பார்க்கப்படாத பக்கங்கள்’ (2015) நூலின் தொகுப்பாசிரியர்.
விருதுகள்
ஸ்ரீலங்கா வர்த்தக, கப்பல் துறை அமைச்சு மற்றும் கலாச்சார அமைச்சு என்பன இணைந்து நடத்திய அகில இலங்கை ஆக்க இலக்கியப் போட்டியில் ‘உள்ளும் புறமும்’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு முதலிடத்துக்கான பரிசாக தங்கப் பதக்கமும் 5000 ரூபா ரொக்கப் பணமும் (1983)
2008-ம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதையும் தங்கப் பதக்கத்தையும் ‘கனடா தமிழர் தகவல் நிறுவனம்’ வழங்கியது.
இலக்கிய இடம்
க.நவம் ஈழ அரசியல் எழுத்தாளராகவும், புலம்பெயர்ந்தசூழலில் தமிழிலக்கியத்தை முன்னெடுத்த முன்னோடியாகவும் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
சிறுகதை
- உள்ளும் புறமும்
- பரதேசம் போனவர்கள்
கட்டுரை
- உண்மைகளின் மௌன ஊர்வலங்கள்
- படைப்புகளும் பார்வைகளும்
- தடங்களைக் கடந்து செல்லும் காலநதி
மொழியாக்கம்
- எனினும் நான் எழுதுகின்றேன்
உசாத்துணை
- க.நவம் இணையப்பக்கம்
- க.நவம்- அருண்மொழிவர்மன் கட்டுரை
- க.நவம் படைப்புகள் நூலகம் தொகுப்பு
- க.நவம் சிறுகதைகள். சிறுகதைகள் பக்கம்
- க.நவம் பேட்டி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Mar-2025, 20:52:49 IST