first review completed

விறலியாற்றுப்படை

From Tamil Wiki
Revision as of 09:06, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)

விறலியரை வள்ளல்களிடம் ஆற்றுப்படுத்தும் பாடல்கள் விறலியாற்றுப்படை என்னும் புறத்துறை. இப்பாடல்களில் வழிப்படுத்திப் பாடப்படும் விறலியர் பாண்மகள் எனப்படும் இசைக்கலைஞர்கள். யாழ், ஆகுளி, பதலை ஆகிய இசைக் கருவிகளைப் கையாள்பவர்கள்.

விறலியாற்றுப்படை என்பது ஆற்றுப்படைப் பாடல்களில் ஒருவகை.

இலக்கணம்

வள்ளலிடம் கொடை பெற்றுவந்த ஒருவன் விறலியை அந்த வள்ளலிடம் செல்வதற்கு வழி கூறி ஆற்றுப்படுத்துவது விறலியாற்றுப்படை என்பது தொல்காப்பியம் கூறும் இலக்கணம்[1]. புறப்பொருள் வெண்பாமாலை விறலி வேந்தன் புகழ் பாடுபவள் எனக் குறிப்பிட்டு இதே செய்தியைச் சொல்கிறது[2].

பாடல்கள்

விறலியாற்றுப்படை என்னும் துறையைச் சேர்ந்த பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் நான்கு உள்ளன[3].  இந்தத் துறை புறநானூற்றில் பாடாண் திணையில் வருகிறது.

புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களில் விறலியாற்றுப்படைப் பாடல்கள் ஒன்பது இருக்கின்றன. அவற்றில் நான்கு பாடல்கள் 'செல்லாமோ’ (இருவரும் செல்லலாமா) எனப் பாடுகின்றன. ஏனைய ஐந்தும் விறலியை மட்டும் ஆற்றுப்படுத்துகின்றன.

விறலியுடன் தானும் (பாடுபவரும்) செல்லல்

  • கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனிடம் பரணர் ஆற்றுப்படுத்துவது [4]
  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம், காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆற்றுப்படுத்துவது[5]
  • ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம், காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆற்றுப்படுத்துவது[6]
  • பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிடம் நெடும்பல்லியத்தனார் ஆற்றுப்படுத்துவது[7]

விறலியை மட்டும் ஆற்றுப்படுத்துதல்

  • தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அரிசில் கிழார் ஆற்றுப்படுத்துவது.[8]
  • இளஞ்சேரல் இரும்பொறையிடம் பெருங்குன்றூர் கிழார் ஆற்றுப்படுத்துவது[9]
  • அதியமான் நெடுமான் அஞ்சியிடம் ஔவையார் ஆற்றுப்படுத்துவது[10]
  • வேள் பாரியிடம் கபிலர் ஆற்றுப்படுத்துவது [11]
  • வேள் ஆய் அண்டிரனிடம் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆற்றுப்படுத்துவது[12]

எடுத்துக்காட்டு

சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி!

தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை

வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்

பெய்யினும் பெய்யா தாயினும் அருவி

கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆக

மால்புடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்

நீரினும் இனிய சாயல்

பாரி வேள்பால் பாடினை செலினே.

பாடியவர்: கபிலர்

பாடப்பட்டோன்: வேள் பாரி

திணை: பாடாண்

துறை: விறலியாற்றுப்படை

பொருள்:

ஒளி பொருந்திய நெற்றியையுடைய விறலி! பெரிய நீர்ச்சுனைகளில் தழைத்த கரிய இதழ்களுடைய குவளையின் வண்டுகள் மொய்க்கும் புது மலர்களில் குளிர்ந்த மழைத்துளிகள் கலக்குமாறு மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும், மேகங்கள் மோதுகின்ற நெடிய பறம்பு மலையின் சிகரங்களிலிருந்து வரும் அருவிகளின் நீர், கொள் விளைப்பதற்காக உழுத வயல்களில் வாய்க்காலாக ஓடி வருகிறது. அந்த நீரினும் மிகவும் இனிய தன்மை வாய்ந்தவன் வேள் பாரி. நீ அவனை பாடிச் சென்றால் சிவந்த பொன்னாலான அணிகலன்களைப் பெறுவாய்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
    ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
    பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ
    சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்

    - தொல்காப்பியம் புறத்திணையியல் 30, பாடாண் திணை

  2. திறல் வேந்தன் புகழ் பாடும்,
    விறலியை ஆற்றுப் படுத்தன்று

    - புறப்பொருள் வெண்பாமாலை 219

  3. புறநானூறு 64, 103, 105, 133
  4. பதிற்றுப்பத்து 49
  5. பதிற்றுப்பத்து 57
  6. பதிற்றுப்பத்து 60
  7. புறநானூறு 64
  8. பதிற்றுப்பத்து 78
  9. பதிற்றுப்பத்து 87
  10. புறநானூறு 103
  11. புறநானூறு 105
  12. புறநானூறு 133



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.