being created

கைந்நிலை

From Tamil Wiki
கைந்நிலை - அனந்தராமையர் உரை

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று கைந்நிலை. இதனை அனந்தராமையர் என்பவர் பதிப்பித்தார். கைந்நிலையே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம் பெறத்தக்கது என்பது அனந்தராமையரின் கருத்து. இது ஓர் அகப்பொருள் நூல்.

பதிப்பு வரலாறு

கைந்நிலை நூல் பதிப்புப் பற்றி, அதற்கு உரை எழுதிய சங்குப்புலவர், “கைந்நிலை என்ற நூல் 1931 ஆம் ஆண்டு பேராசிரியர் திரு. அனந்தராம ஐயர் அவர்களால் முதலில் அச்சியற்றி வெளிவந்ததாகத் தெரிகிறது. அவர்கள் முகவுரையில் ‘இந்நூற் பிரதியொன்று எனக்குச் சிறிது காலத்திற்கு முன் கிடைத்தது. அது முதலிலும் சில பகுதியின்றியும், இருக்கும் செய்யுட்களிலும் சில பகுதி சிதைந்து பிழை விரவியும் இருந்தது. முன்பு வேறு சிலரிடத்திலிருந்த இந்நூல் ஏட்டுப் பிரதிகளைப் பார்த்திருக்கிறேன். அவையும் இதனைப் போலவே முதலிலும் இடையிலும் சில ஏடின்றியும் சிதைந்து பிழைபட்டுமே இருந்தன. அதனைப் பதித்து முற்றுப்பெறுங்காலத்து இராமநாதபுரம் சேது சமஸ்தான வித்துவான் உ.வே.ரா. இராகவையங்காரவர்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் இந்நூற் பிரதியிருப்பதை யறிந்து கேட்டு வாங்கிப் பார்த்து அவ்வேட்டிலுள்ள படியே பதிப்பித்தேன்” என்று விளக்கமாக வரைந்திருக்கின்றனர்.” [1] என்று குறித்துள்ளார்.

உள்ளடக்கம்

கைந்நிலை தமிழர்களின் ஐவகை நிலங்களைப் பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என இதன் திணைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணைக்கும் 12 பாடல்கள் வீதம் 60 பாடல்களைக் கொண்டுள்ளது. அதனால் கைந்நிலைக்கு ‘ஐந்திணை அறுபது’ என்ற பெயரும் உண்டு.

கைந்நிலை நூலை இயற்றியவர், மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். 60 பாடல்களில் 18 பாடல்கள் சிதைந்துள்ளன. இந்நூல் செய்யுட்களை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலிய பழைய உரைக்காரர்கள் தங்கள் உரைகளில் மேற்கோள் காட்டியுள்ளனர். முழுமையான பழைய உரை எதுவும் கிடைக்கவில்லை.

’தாரா' (40) என்ற பறவைப் பெயர் கைந்நிலையில் காணப்படுகிறது. பாசம் , ஆசை , இரசம் , கேசம் , இடபம் , உத்தரம் , முதலிய வடசொற்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

பொன்னம் பசலையும் தீர்ந்தது ; பூங்கொடி

தென்னவன் கொற்கைக் குருகு இரிய மன்னரை

ஓடு புறங்கண்ட ஒண் தாரான் தேர் இதோ

கூடல் அணைய வரவு

- என்ற நூலின் இறுதிப் பாடலில், பாண்டியனையும் கொற்கை நகரையும் புலவர் புல்லங்காடனார் குறிப்பிட்டுள்ளார்.

கைந்நிலை பற்றி சங்குப்புலவரின் கருத்து

கைந்நிலையைப் பற்றி சங்குப்புலவர் தனது ஆய்வு நூலில், “ 6 எண்ணுள்ள ‘மரையாவுகளும்’ என்ற கவியும், 7 எண்ணுள்ள ‘தாழை குருகீனும்’ என்ற கவியும் தொல்காப்பியம் இளம்பூரணத்தில் இன்ன இன்ன துறைக்கு மேற்கோளாகக் காட்டப்பட்டன என்று பழையவுரை காட்டுகிறது. அதன்படியே ஆராய்ந்தால் ஆங்காங்கு அவைகளே மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியத்திலும் ஒன்று மேற்கோளாகக் காட்டப்பட்டதாகவும் நம்பியகப்பொருளில் இரண்டடி மட்டுமே மேற்கோளாகக் காட்டப்பட்டதாகவும் பழையவுரை கூறுகிறது. அதன்படியே அமைந்திருக்கக் காண்கிறோம்” [2] என்கிறார்.

கைந்நிலை தொல்காப்பியம், நம்பி அகப்பொருள் போன்றவற்றில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளமையால் அதுவே கீழ்க்கணக்கு நூல்களில் இடம் பெறத் தக்கது என்பது சங்குப் புலவரின் முடிவு.

கைந்நிலை பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றுதானா?

பதினெண் கீழ்க்கணக்கு நூல், இன்னிலையே, கைந்நிலையே என்னும் அக்காலப் புலவர்களின் சர்ச்சையில், கைந்நிலை பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றுதான் என்பதற்கான ஆதாரமாக வேம்பத்தூர் முத்து வேங்கட சுப்ரபாரதியாரால் இயற்றப்பட்ட ‘பிரபந்த தீபிகை’ என்னும் நூல் சுட்டப்பட்டுகிறது. அந்நூலின், 44-ம் பாடலில்,

“ஈரொன்பதின் கீழ்க்கணக்கினுட் படும்வகை யியம்பு நாலடி நானூறும்

இன்னாமை நாற்பது நான்மணிக்கடிகை சத மினிய நாற்பான் காரதே

ஆருகளவழி நாற்ப தைந்திணையு மைம்பதும் ஐம்பதுட னிருபானுமாம்

அலகிலா சாரக்கோ வைசதம் திரிகடுக மையிருப தாகுமென்பர்

சீருறும் பழமொழிகள் நானூறு நூறதாஞ் சிறுபஞ்ச மூலம் நூறு

சேர்முது மொழிக்காஞ்சி யேலாதியெண்பதாம் சிறுகைந்நிலையறுபதாகும்

வாரிதிணைமாலைநூற்றைம்பதாம்திணைமொழி வழுத்தைம்பதாம் வள்ளுவமாலையீ

ரொன்பதாய்ச் சாற்று பிரபந்தம் வழுத்துவர்கள் புலவோர்களே”

- என்று குறிப்பிப்பட்டுள்ளதைப் புலவர்கள் ஆதாரமாகக் கொண்டு, கைந்நிலையே பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று என்று முடிவு செய்துள்ளனர்.

வ.உ.சி.க்கு நிகழ்ந்த ஏமாற்றம்

”திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர் 'இன்னிலை' என்ற பேரில் ஒரு நூலின் ஏட்டை வ.உ.சி.யிடம் கொடுத்து இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று எனக் கூறி வ.உ.சி.யிடம் கணிசமாக பணமும் பெற்றிருக்கிறார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இன்னிலையையும் சேர்த்து அதை பதிப்பித்தார் வ.உ.சி. இப்பதிப்பு போலியானது, தவறானது என மயிலை சீனி வேங்கடசாமி, மு. அருணாசலம் ஆகியோர் எழுதிய பின்பு வ.உ.சி.யின் பதிப்பு தவறானது என்று தெரிந்தது. 1931-ல் அனந்தராம ஐயர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று 'கைந்நிலை' என பதிப்பித்த பின்னர் வ.உ.சி. மனம் நொந்திருக்கிறார். இதை வையாபுரிப்பிள்ளையும் கு. அருணாசலக்கவுண்டரும் பதிவு செய்துள்ளனர்.” [3] என்கிறது இக்கட்டுரை.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.