under review

தேய்புரிப் பழங்கயிற்றினார்

From Tamil Wiki
Revision as of 13:12, 22 November 2024 by Logamadevi (talk | contribs)

தேய்புரிப் பழங்கயிற்றினார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

தேய்புரிப் பழங்கயிற்றினார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'தேய்புரிப் பழங் கயிறு போல’ என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராகக் கொண்டனர்.

இலக்கிய வாழ்க்கை

தேய்புரிப் பழங்கயிற்றினார் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் 284-வது பாடலாக அமைந்துள்ளது. பொருள்வயின் பிரிந்த தலைவியை எண்ணி உள்ளம் ஏங்கவும் எடுத்த செயலை முடித்துவிட்டு திரும்புவோம் என்று அறிவு கூறவும் தலைவனுக்குள் நடக்கும் மனப்போராட்டத்தை அவனது கூற்றாக உணர்த்தும் பாலைத் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • பெண்கள் நீண்ட கருமையான கூந்தலை கொண்டிருப்பர். நெய்தல் மலர்கள் பூக்கும் நிலம்.
  • எடுத்த செயலை முடிக்காமல் வீடு திரும்புதல் இழிவாக கருதப்படும்.
  • உவமை: மத்தகம் பெருத்த ஆண் யானைகள் இரண்டின் தும்பிக்கையால் எதிரெதிர் புறம் இழுக்கப்பட்டு அறுந்து கொண்டிருக்கும் தேய்ந்த புரியுடைய பழங்கயிறு போல உடல் நலிகிறது.

பாடல் நடை

நற்றிணை - 284

பாலைத் திணை துறை: பொருண் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது

'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம்,
'செல்லல் தீர்கம்; செல்வாம்' என்னும்:
'செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்' என,
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,
'சிறிது நனி விரையல்' என்னும்: ஆயிடை,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல,
வீவதுகொல் என் வருந்திய உடம்பே

உசாத்துணை

‎


✅Finalised Page