ரமா சுரேஷ்
- சுரேஷ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுரேஷ் (பெயர் பட்டியல்)
ரமா சுரேஷ் (பிறப்பு: ஜூன் 9, 1979) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். நாவல், சிறுகதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
ரமா சுரேஷ் தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டில் ப.ரெங்கசாமி, கா.கேரளாமணி இணையருக்கு ஜூன் 9, 1979-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு தம்பி. இலுப்பைதோப்பு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலுள்ள அரசுப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். வல்லம் பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டடக்கலையில் பட்டயப்படிப்பை முடித்தார்.
தனி வாழ்க்கை
ரமா சுரேஷ் சென்னையிலுள்ள Genesis Architecture நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளும் சிங்கையிலுள்ள D.P. Architecture நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளும் வரைவாளராகப் பணியாற்றினார். 2007-ம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறார்.
ரமா சுரேஷ் 2005-ல் சுரேஷை மணந்தார். மகள்கள் சாதனா, மணிகர்ணிகா.
அமைப்புப் பணிகள்
ரமா சுரேஷ் மாயா இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக சிங்கப்பூரின் புனைவுகள் குறித்த உரையாடல்களை முன்னெடுத்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
ரமா சுரேஷின் முதல் சிறுகதைத்தொகுப்பு 'உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81' 2017-ல் வெளியானது. காலச்சுவடு, 'தி சிராங்கூன் டைம்ஸ்' ஆகிய இதழ்களிலும் யாவரும், கனலி, மலைகள், தங்கமீன் போன்ற இணைய இதழ்களிலும் ரமா சுரேஷின் படைப்புகள் வெளிவந்துள்ளன. லஷ்மி சரவணகுமார், சாரு நிவேதிதா ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.
விருதுகள்
- சிங்கப்பூர் இலக்கிய விருது (2022)
- சிங்கப்பூர் தங்கமுனை விருது (2015 & 2017)
- க.சீ.சிவகுமார் நினைவு சிறுகதைப் போட்டி பரிசு (2018)
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 'முத்தமிழ் விழா' சிறுகதைப் போட்டியில் பரிசுகள்
இலக்கிய இடம்
“வழக்கமாக பெண்களின் புனைவு எல்லைகளாகக் கருதப்படும் காதல், காமம், குடும்ப வாழ்வு என இல்லாத கதைப்பொருளைக் கொண்டு விரியும் விதத்தில் இவரது சிறுகதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவரது கதைகள் மனித வாழ்வில் எதிர்பாராமல் நடக்கக்கூடிய, நம்புவதற்கு சிரமமான யதார்த்தங்களைப் பேசுபவை. ஆகையால் அதற்கே உரிய வகையில் புனைவில் ஆங்காங்கே ரகசியத்தையும், இருளையும், மர்மத்தையும் கொண்டிருக்கின்றன” என சு.தமிழ்ச்செல்வி குறிப்பிடுகிறார்.
“அம்பரம் நாவலை எழுதிய கை சிங்கை தமிழ் இலக்கியத்தை நகர்த்த வேண்டும் என்ற உண்மையான நோக்கம் கொண்டது. எனவே பல கலை குறைபாடுகள் இருந்தாலும் அந்தக் கை மதிக்கத்தக்கது. ரமாவுக்கு வாழ்க்கை குறித்த தனித்த பார்வை உள்ளது. மனிதர்கள் குறித்த சில தனித்த அபிப்பிராயங்கள் உள்ளன. இதனாலேயே அவர் முக்கியமான படைப்பாளியாக சிங்கப்பூரில் உருவாக அதிக சாத்தியங்கள் உள்ளது என நினைக்கிறேன்” என ம. நவீன் குறிப்பிடுகிறார்.
நூல்கள்
- உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 (2017, சிறுகதைத் தொகுப்பு)
- அம்பரம் (2021, நாவல்)
இணைப்புகள்
- அம்பரம் நாவல் பற்றிய உரை-ம.நவீன்
- அம்பரம் - நோயல் நடேசன்
- அம்பரம் – நூல் பார்வை - யாவரும்.காம் (yaavarum.com)
- அழகுநிலா உரை | ரமா சுரேஷ் - அம்பரம் - YouTube
- உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 – ரமா சுரேஷ் – சிவானந்தம் நீலகண்டன் (wordpress.com)
- நேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ் | திண்ணை (thinnai.com)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-Mar-2024, 10:46:02 IST