under review

சு.தமிழ்ச்செல்வி

From Tamil Wiki
சு.தமிழ்ச்செல்வி

சு. தமிழ்ச்செல்வி (பிறப்பு: மே 4, 1971) தமிழ் எழுத்தாளர். கீழத்தஞ்சை மாவட்டத்தின் வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்தவர். சு.தமிழ்ச்செல்வியின் முதல் படைப்பான 'மாணிக்கம்' சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றது. இயல்புவாத நோக்கில் எழுதப்பட்ட அவரது படைப்புகள் அவரது அனுபவங்கள்,கண்ட மனிதர்கள் மற்றும் பல்வேறு தொழிற் சூழல்களில் செய்த கள ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை.

பிறப்பு,கல்வி

சு.தமிழ்ச்செல்வி திருவாரூர் மாவட்டம் கற்பகநாதர்குளத்தில் சுப்பிரமணி -முத்துலட்சுமி இணையருக்கு மே 4, 1971-ல் பிறந்தார். தந்தை சுப்பிரமணி ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றியவர். இரு மூத்த சகோதரிகள்,ஒரு மூத்த சகோதரர்.

சு.தமிழ்ச்செல்வி கற்பகநாதர் குளத்திலும், இடும்பாவனத்திலும் ஏழாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை வேதாரண்யம் கஸ்தூரிபாய் கன்யா குருகுலத்தில் படித்தார். இக்காலகட்டத்தில் படித்த புத்தகங்கள் அவரது வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டின. திருத்துறைப்பூண்டியில் தனது ஆசிரியர் பயிற்சியை முடித்து கற்பக நாதர் குளத்தில் தான் பயின்ற பள்ளியிலேயே ஆறு வருடம் ஆசிரியராகப் பணியாற்றினார். அஞ்சல் வழியில் பி.லிட், எம்.ஏ, பட்டங்களையும் பெற்றார்.

தனி வாழ்க்கை

சு.தமிழ்ச்செல்வி எழுத்தாளர் கரிகாலனை மணம் செய்து கொண்டார். மகள்கள் சிந்து, சுடர். மகன் கார்க்கி. திருமணமாகி முதல் குழந்தை பிறந்தவுடன் கற்பகநாதர் குளத்தில் செய்துகொண்டிருந்த தனது பணியை விட்டுவிட்டு விருத்தாச்சலத்திற்கு இடம்பெயர்ந்தார். அங்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது.

தற்போது கடலுார் மாவட்டம் கோ.ஆதனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியையாகப் பணிபுரிகிறார்.

இலக்கியப் பணி

udumalai.com

சு.தமிழ்செல்விக்கு அவர் பிறந்த ஊர், அதன் வாழ்க்கை முறை, நிலத்தோற்றம் இவையே பின்னாளில் எழுதுவதற்கான கருப்பொருட்களை தந்தன. " எளிய கிராமத்து பிறப்பும், வளர்ப்புமே என்னை எழுதத் துாண்டின" என்று குறிப்பிடுகிறார்.சு.தமிழ்ச்செல்வியின் முதல் நாவல் மாணிக்கம்

vikatabharathi.blogspot.com

வேதாரண்யம் அருகிலுள்ள கோயில்தாழ்வு என்ற கிராமத்து மக்களின் வாழ்வாதாரமான உப்பளத்தையும், அங்கு உழைக்கும் பெண்களையும் களமாகக் கொண்டது சு.தமிழ்ச்செல்வியின் இரண்டாவது நாவல் அளம். தன் கணவன் கைவிட்டுசென்ற குடும்பத்திற்காக உப்பளத்தில் உழைக்கும் பெண்ணின் கதை. தான் சிறுவயதில் கண்ட, அவ்வூரில் வசித்த தன் தாய்வழி உறவினரின் வாழ்வே 'அளம் ' நாவலின் கரு என தமிழ்ச்செல்வி குறிப்பிடுகிறார்.

குடிப்பழக்கம் எளிய மக்களின் வாழ்வைப் புரட்டிப்போடுவதை சித்தரிக்கும் நாவல் கற்றாழை. சிற்றூர் பின்னணி கொண்ட மணிமேகலை என்னும் சாதாரணப் பெண்ணின் அல்லல் மிக்க வாழ்வு அவளைத் தொழில் நகரமான திருப்பூருக்கு இட்டுச் செல்ல, அங்கு தன்னைப் போன்ற பெண்களோடு ஒரு கம்யூனாக (commune) வாழ அவளது உழைப்பு வழிகாட்டுகிறது. எத்தகைய வறட்சியிலும் தன்னை தகவமைத்துக் கொண்டு உயிர்த்திருக்கும் கற்றாழை இப்பெண்களுக்கான உருவகம்

panuval.com

மீன் பிடிக்கும் வன்னிய சமூகத்தினர் வாழும் ஊர் ஆறுகாட்டுத்துறை.சமத்துவம் கூடிய சமூக அமைப்பாகத் திகழும் அவ்வூரைப் பற்றிய பதிவுகளைத் தன் நாவலில் கொண்டுவரவேண்டி, சமுத்திரவல்லி என்னும் கற்பாத்திரத்தின்மூலம் ஆறுகாட்டுத்துறை நாவலை எழுதினார்.

சாதி மற்றும்பாலியல் ரீதியாக ஒதுக்கப்பட்ட பெண்ணின் சீற்ற வெளிப்பாடுதான் கண்ணகி '. தன் உழைப்பால் உயர்ந்து தொழில் முனைவோராக வளரும் பெண்ணின் வாழ்வேதொப்புள் கொடி</>'</> நாவலின் கதைக்கரு. விரும்பி ஏற்றுக்கொண்ட கணவன் செய்யும் துரோகம், அவள் மீது காட்டும் அலட்சியப்போக்கு இவற்றால் சோர்ந்து போகமல் உழைத்து,தனது லட்சியம் நிறைவேறியதும் அனைத்தையும் உதறிச் சென்று கோயில் வாசலில் பிச்சைக்காரர்களுக்கு இடையில் சென்று அமரும் பெண்ணின் கதை.

ஆண்டுதோறும் விருத்தாச்சலத்தின் புறநகர்ப் பகுதிக்கு ஆட்டுக்கிடை போட வரும் நாடோடிகளான கீதாரிகளிடம் பழகி, அவர்கள் வாழ்க்கையைப் பதிவு செய்த நாவல் 'கீதாரி'. கீதாரிப் பெண்களின் இருப்பையும், நாடோடி வாழ்க்கையில் அவர்களின் பாடுகளையும் சொல்லும் நாவல் 'பொன்னாச்சரம்'. நகர்மயமாதலால் அவர்கள் வாழ்வியல் ஏற்படும் பாதிப்புகளையும் , நில ஆதாரம் இல்லாத அவர்கள் ஊரின் புழங்கு வெளிகளுக்குள் அடிமை போலவே நடத்தப்படுவதையும் இந்த இரு நாவல்களும் பதிவுசெய்கின்றன.

சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகளை முன்வைத்து பல மாணவர்கள் முனைவர், இளம் முனைவர் பட்ட ஆய்வுகள் செய்துள்ளனர்.

விருதுகள்,சிறப்புகள்

 • தமிழ் வளர்ச்சித் துறை- சிறந்த நாவல் விருது( மாணிக்கம் -2002)
 • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது(கற்றாழை)
 • கலைஞர் பொற்கிழி விருது
 • ஸ்பாரோ விருது

இலக்கிய இடம்

panuval.com

"எனது புனைவுகளின் ஆன்மாவாக எங்கள் மக்களின் பண்பாடும், வாழ்வோடு அவர்கள் நடத்தும் போராட்டமுமே அமைந்திருக்கிறது" என்று சு.தமிழ்ச்செல்வி தன் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். "மாணிக்கம், அளம், கற்றாழை ஆகிய மூன்று புதினங்களும் தமிழக இலக்கிய/அரசியல் வெளியில் அதிக அளவில் பிரதிநிதித்துவம்பெறாத முத்தரையர் சமூகத்தின் வாழ்நிலையை, பண்பாட்டை விவரிப்பவை. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி போன்ற பகுதிகளில் பெருமளவில் வசிக்கும் இவர்கள் ஒடுக்கப்பட்ட இனக்குழுவாக அடையாளம் காணப்படுவார்கள்" என்று தமிழ்ச்செல்வி கூறுகிறார்.

தனது புனைவுகளுக்கான களங்களைத் தான் வசிக்க நேர்ந்த இடம், அனுபவிக்க நேர்ந்த தருணம், பழக நேர்ந்த மனிதர்கள் ஆகியோரிடமிருந்தே எடுத்துக்கொள்வதால் சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகள் யதார்த்த வாழ்வின் அனுபவச் சாயல் கொண்டவையாக அமைகின்றன. கீழத்தஞ்சை பகுதியின் கிராமியச் சமூக அமைப்பில் உள்ள மக்களின் தொழில், சடங்குகள், திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள், நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் பாடல்கள் எனக் கிராமச் சித்திரமாகவே புதினங்கள் உருப்பெற்றுள்ளன.

panuval.com

தான் நன்கு அறிந்த, நேரில் கண்டுணர்ந்த, பின் தங்கிய கிராமப் பகுதிகளில் உழைக்கும் பெண்களின் உழைப்பையும் வியர்வையையும் வலியையும் பாடுபொருளாகவும் அவர்களின் உழைப்பை வேண்டி நிற்கும் வயல் காடுகளைப் பாடுகளங்களாகவும் தேர்வு செய்கிறார். கதை மாந்தர்கள் ஈடுபடும் தொழிலிடங்களில் (விவசாயம், உப்பளம், ஆட்டுக்கிடை, பீங்கான்தொழில், மீன் பிடிப்பு ) கள ஆய்வு செய்து அத்தொழில்களின் சூழல், நுட்பங்கள், கடினத்தன்மை, தொழிலாளர்களிடையே நடைபெறும் பண்டமாற்று முதலியவற்றை நுண் விவரங்களுடன் பதிவு செய்திருக்கிறார்.

சு.தமிழ்ச்செல்வியின் அனைத்து நாவல்களிலும் பொதுமைப் பண்பாக அமைந்திருப்பது திருமணமான பெண்களின் துயரங்களே. ஒடுக்கப்படும் பெண்கள் தங்கள் உழைப்பினால் மெல்ல எழும்போது, அடுத்த தலைமுறைப் பெண்கள் தம்மை அழுத்தும் தளைகளை மீறி குடும்பத்தை விட்டு வெளியேறவும் துணிகிறார்கள்.

படைப்புகள்

நாவல்கள்
 • மாணிக்கம் (2002)
 • அளம்( 2002)
 • கீதாரி( 2003)
 • கற்றாழை ( 2005)
 • ஆறுகாட்டுத்துறை(2006)
 • கண்ணகி (2008)
 • பொன்னாச்சரம் ( 2010)
சிறுகதைகள்
 • சாமுண்டி (2006)
 • சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள் ( 2010)

உசாத்துணை