ஹென்றி பவர்

From Tamil Wiki
Revision as of 20:49, 31 October 2024 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஹென்றி பவர் (17 ஜனவரி 1813-2 செப்டெம்பர் 1885 ) கிறிஸ்தவ இறையியலாளர். கல்வியாளர். தொடக்ககால கிறிஸ்தவ மதப்பணிகளை ஆவணப்படுத்திய எழுத்தாளர் == பிறப்பு, கல்வி == ஹென்றி பவர் 17 ஜனவரி 1813 ஆம் ஆண்டு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஹென்றி பவர் (17 ஜனவரி 1813-2 செப்டெம்பர் 1885 ) கிறிஸ்தவ இறையியலாளர். கல்வியாளர். தொடக்ககால கிறிஸ்தவ மதப்பணிகளை ஆவணப்படுத்திய எழுத்தாளர்

பிறப்பு, கல்வி

ஹென்றி பவர் 17 ஜனவரி 1813 ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிரெஞ்சு போர்வீரருக்கும் இந்தியப்பெண்மணி ஒருவருக்கும் மகனாகப் பிறந்தார். பவர் லண்டன் மிஷன் அமைப்பில் இணைந்து கல்வி கற்றார். மொழியறிவு மிக்கவராக இருந்த பவர் கிரேக்கம், லத்தீன், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் ,கன்னடம், இந்துஸ்தானி மொழிகளை அறிந்திருந்தார்.

மதப்பணி

பவர் லண்டன்மிஷன் அமைப்பில் இணைந்து மதப்பணி ஆற்றினார். பின்னர் ஆங்கிலிகன் சபையில் சேர்ந்து எஸ்.பி.ஜி இயக்கத்தின் இறைப்பணியாளராக அருட்பொழிவு செய்யப்பட்டார்

1877ல் காண்டர்பரி ஆர்ச்பிஷப் பவருக்கு இறையியல் முனைவர் ( Doctor of Divinity) என்னும் பட்டத்தை வழங்கினார்.

பவர் கால்டுவெல் ,ஜான் ஸ்கட்டர், ஜான் டக்கர் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

கல்விப்பணி

பவர் தஞ்சாவூருக்கு அருகே வேதியர்புரம் என்னும் ஊரை உருவாக்கி அங்கே ஓர் இறையியல் கல்வி நிலையத்தை தொடங்கினார்

1871 ஆம் ஆண்டு பவர் சென்னை பல்கலை கழகத்தின் சிறப்பு உறுப்பினர் பதவியை வகித்தார்

பவர் பைபிள் மொழியாக்கத்தைச் செம்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். இது பவர் மொழிபெயர்ப்பு என அழைக்கப்பட்டது.

பவர் 1868 ஆம் ஆண்டு சீவகசிந்தாமணியின் முதல் பகுதியான நாமகள் இலம்பகத்தை நச்சினார்க்கினியர் உரையுடனும் ஆங்கில முன்னுரையுடனும் வேப்பேரியில் இருந்த எஸ்.பி.சி.கே அச்சகத்தின் வழியாக வெளியிட்டார்.

பவர் பகவத் கீதை, நன்னூல் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்

பவர் வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களுடன் அணுக்கமான உறவு கொண்டிருந்தார். அவருடைய கீர்த்தனைகளை பரப்பினார்.

பவர் கிறிஸ்தவ மார்க்கம் இந்து தேசத்தில் விருத்தியான சரித்திரம் என்னும் நூலில் தொடக்ககால கிறிஸ்தவ மதப்பணிகளை ஆவணப்படுத்தினார். நியாயப்பிரமாண விளக்கம், விசுவாசப்பிரமாண விளக்கம் போன்ற நூல்களை எழுதினார்

மறைவு

பவர் 2 செப்டெம்பர் 1885 ல் மறைந்தார். அவருடைய கல்லறை பாளையங்கோட்டை மிலிடரி லைனில் உள்ள கிறிஸ்து ஆலய கல்லறைத்தோட்டத்தில் உள்ளது.

நூல்கள்

  • கிறிஸ்தவ மார்க்கம் இந்து தேசத்தில் விருத்தியான சரித்திரம் 1879
  • வேத அகராதி 1841
  • நியாயப்பிரமாண விளக்கம் 1847
  • விசுவாசப்பிரமாண விளக்கம் 1851
  • இந்து மதத்துக்கும் பாப்பு மதத்துக்கும் இருக்கிற சம்பந்த விளக்கம் 1851
  • பத மஞ்சரி 1852
  • தர்மசாஸ்திர சாரம் 1857
  • சாதிவித்தியாச விளக்கம் 1857
  • பிரசங்க ரத்னாவளி 1875