விவேக சிந்தாமணி
- சிந்தாமணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிந்தாமணி (பெயர் பட்டியல்)
விவேக சிந்தாமணி (1892) சென்னையில் இருந்து வெளிவந்த மாத இதழ். இதில் பி.ஆர்.ராஜம் ஐயர், அ.மாதவையா போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். சி. வி சுவாமிநாதையர் என்பவர் 1892-ம் ஆண்டு தொடங்கி நடத்திய இதழ் இது (விவேக சிந்தாமணி என்னும் பழைய நெறிநூல் ஒன்று உண்டு).
வெளியீடு
சென்னை தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியின் Madras Christian College Magazine வில்லியம் மில்லர் வழிகாட்டலில் 1870-கள் முதல் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் இலக்கியங்களை வெளியிட்டு வந்தது. அதில் எழுதியவர்கள் தமிழில் எழுத விரும்பியமையால் தொடங்கப்பட்ட இதழ் விவேக சிந்தாமணி. 1892-ல் இவ்விதழை வி.சுவாமிநாதையர் தொடங்கினார்.
உள்ளடக்கம்
விவேக சிந்தாமணி இன்று பி.ஆர்.ராஜம் ஐயர், அ. மாதவையா போன்றவர்களின் படைப்புகளை வெளியிட்ட இதழ் என அறியப்படுகிறது. 1893-ம் ஆண்டு முதல் பிப்ரவரியில் விவேக சிந்தாமணியில் தொடர்கதை வடிவத்தில் கமலாம்பாள் சரித்திரத்தை ராஜம் ஐயர் 'அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்' என்ற தலைப்பில் மூன்றாண்டுகள் தொடராக எழுதினார். அ.மாதவையா விவேக சிந்தாமணியில் சாவித்திரியின் கதை என்ற தொடர் நாவலை 1892-ன் இதழில் எழுதத் தொடங்கினார். அதிலிருந்த கடுமையான விமர்சனங்களினால் அத்தொடர் அதன் ஆசிரியரால் நிறுத்தப்பட்டது. இருமாதங்களுக்கு ஒருமுறை என ஆறு அத்தியாயங்கள் மட்டுமே வெளிவந்தன. அந்நாவல் முத்துமீனாட்சி என்றபேரில் நூலாகியது. அ. மாதவையா அதன்பின் விவேக சிந்தாமணியில் 1898-ல் பத்மாவதி சரித்திரம் நாவலை எழுதினார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:42 IST