முத்துமீனாட்சி
- முத்து என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்து (பெயர் பட்டியல்)
அ. மாதவையா எழுதிய நாவல். பெண்விடுதலை, விதவை மறுமணம் குறித்து பேசுகிறது. சாவித்ரி சரித்திரம் என்றபேரில் 1892-ல் விவேகசிந்தாமணி இதழில் தொடராக வெளிவந்து நிறுத்தப்பட்டது. பின்னர் முத்துமீனாட்சி என்ற பேரில் 1903-ல் வெளிவந்தது. முத்துமீனாட்சி என்னும் விதவையின் கதையைச் சொல்லும் நாவல் இது
பிரசுர வரலாறு
முத்துமீனாட்சி 1892-ல் அ.மாதவையாவால் எழுதப்பட்டது. முத்து மீனாக்ஷி (ஒரு பிராமணப்பெண் சுவசரிதை)’ என்ற தலைப்பில் இது வெளிவந்திருக்கிறது. அப்போது அவர் சென்னை கிறித்தவ கல்லூரியில் எம்.ஏ. படித்துக்கொண்டிருந்தார். அவருடைய நண்பர் தொடங்கிய விவேகசிந்தாமணி என்னும் மாத இதழில் இந்த நாவலை தொடராக எழுதினார். அப்போது விவேகசிந்தாமணியில் கட்டுரைகளுக்கு அ. மாதவையா என்ற பெயரை பயன்படுத்தியிருந்தபோதும் இந்நாவலில் ஆசிரியர் பெயர் சாவித்ரி என்றே அளிக்கப்பட்டிருந்தது.
நாவலின் உள்ளடக்கம் எதிர்ப்பை உருவாக்கியது. ஆகவே இதழாசிரியர் பிரசுரத்தை நிறுத்திக்கொண்டார். இது ஆ.மாதவையாவை புண்படுத்தியது. ஆகவே அவர் தொடர்ந்து ஆறாண்டுக்காலம் ஏதும் எழுதவில்லை என அவர் வரலாற்றை எழுதிய அவர் மகனாகிய மா.கிருஷ்ணன் சொல்கிறார்.
1898-ல் அ.மாதவையா தன் இரண்டாவது நாவலான பத்மாவதி சரித்திரத்தை விவேகசிந்தாமணி இதழிலேயே எழுதினார். அது வரவேற்பைப் பெறவே சாவித்ரி சரித்திரம் நாவலை முத்துமீனாட்சி என்ற பெயரில் நாவலாக வெளியிட்டார். பெயர்களையும் இடங்களையும் நாவல் வடிவில் வந்தபோது மாற்றியிருந்தார். அப்போதும் இந்நாவல் கடுமையான விமர்சனங்களை பெற்றது. இந்து நாளிதழில் கண்டனங்கள் வெளியாயின என மா.கிருஷ்ணனின் குறிப்பு குறிப்பிடுகிறது.
அ.மாதவையா 1903-ல் இந்நாவலை தானே வெளியிட்டார். 1924-ல் விரிவுபடுத்திய இரண்டாம்பதிப்பை தன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார். முத்து மீனாக்ஷி (ஒரு பிராமணப்பெண் சுவசரிதை)’ என்ற தலைப்பில் இது வெளிவந்திருக்கிறது. இரண்டாம்பதிப்பு வெளிவந்த பிறகுதான் இந்நாவல் கவனிக்கப்பட்டது.
சாவித்திரி என்ற புராண காலப் பெயரைத் தம் நாவலுக்கு முதலில் குறியீடாகச் சூட்டியிருக்கிறார் மாதவையா. தாய் மீனாட்சி, இளம்வயதிலேயே மறைந்த சகோதரி முத்துலட்சுமி (1860-76), மகள் முத்துலட்சுமி இவற்றை இணைத்து முத்துமீனாட்சி என்ற பெயரை சூட்டியிருக்கலாம் என்று ஆய்வாளர் கால சுப்ரமணியம் குறிப்பிடுகிறார்
இந்நாவலின் இரண்டாம் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் அ.மாதவையா இவ்வாறு குறிப்பிடுகிறார்
இந்த நாவல் 21 ஆண்டுகளுக்கு முன், முதலில் வெளிவந்த பொழுது, இதன் கொள்கைகளையும் வாழ்க்கைக் குறிக்கோளையும் 'ஹிந்து’ பத்திரிகை பழித்துக் கண்டித்தெழுதியது. பின்பு பத்து வருஷங்களுக்குள் அந்தக் கோட்பாடுகளின் விருத்தியுரை என்னலாகும் குசிகர் குட்டிக் கதைகளை, அதே பத்திரிகை தானே பிரசுரித்தது மன்றி, புஸ்தக ரூபமாகவும் திரட்டி வெளியிட்டு நாடெங்கும் பரவச் செய்தது. சிலவாண்டுகளுக்குள் நம்மவர் அபிப்பிராயங்கள் எவ்வளவு திருந்தி முன் வந்திருக்கின்றன என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்
சாவித்ரியின் கதை முத்துமீனாட்சி நாவலாக ஆனபோது கீழ்க்கண்ட மாறுதல்கள் நிகழ்ந்தன என்று ஆய்வாளர் கால சுப்ரமணியம் குறிப்பிடுகிறார்
சாவித்திரி – முத்துமீனாட்சி,செங்கமலம் – குட்டியம்மாள்,இலட்சுமியம்மாள் – பார்வதியம்மாள்,சேஷி- நாணி – ,சங்கரி சங்கரி,விசாலாட்சி – விசாலாட்சி,காமாட்சி – காமாட்சி,இலட்சுமி – இலட்சுமி,நடேசன் – சுந்தரேசன்,கோபாலன் – சுப்பிரமணியன்,கிருஷ்ணன் – இராமன்,சுப்பையர் – சங்கரையர்,சுந்தர சாஸ்திரி – இராமபத்ர சாஸ்திரி,சுந்தரமையர் – சுந்தரமையர்,கோவிந்தப்பபுரம் – இராமாபுரம்
இந்த இரு கதை வடிவங்களையும் தேடி எடுத்து இணைத்து தமிழினி வெளியீடாக “முத்துமீனாட்சி (சாவித்திரி சரித்திரம்)“என்ற தலைப்பில் 2020-ல் செம்பதிப்பு நூலாகக் கொண்டுவந்துள்ளார் காலசுப்ரமணியம்.
மொழியாக்கம்
மாதவையாவின் மகள் லட்சுமி (1896-1958) 'முத்துமீனாட்சி’ நாவலை 1931-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'Social Reform Advocate’ பத்திரிகையில் தொடராக வெளியிட்டார். நூல்வடிவு பெறவில்லை.
கதைச்சுருக்கம்
இந்நாவல் முத்துமீனாட்சி என்னும் விதவையின் கதையைச் சொல்கிறது. இளம்வயதிலேயே பணத்துக்கு ஆசைப்பட்டு பெற்றோரால் முதியவர் ஒருவருக்கு அவள் மணம்செய்து வைக்கப்படுகிறாள். அவர் ஏற்கனவே மணமாகி குழந்தைகளும் உள்ளவர். கிழவரான கணவர் இறக்கவே இளம்வயதிலேயே விதவை ஆகிறாள். தலை மொட்டையடிப்பது உட்பட எல்லாவகையான கொடுமைகளுக்கும் ஆளாகும் முத்துமீனாட்சியின் அவலவாழ்க்கையை நாவல் சித்தரிக்கிறது.
இலக்கிய இடம்
முத்துமீனாட்சி நாவலின் தொடக்கத்தில் அ.மாதவையா
தொன்முறை மாறித் துலங்கும் புதுமுறை;
நன்முறை ஒன்றினே ஞாலம் அழுங்காமே
பன்முறையின் ஆளும் பரன்.
என்னும் செய்யுளை முன்னுரையாக அளித்துள்ளார். தொன்மையான ஆசாரங்கள் ஒழிந்து உலகம் துலங்கவேண்டும் என்னும் நோக்கம் அதில் வெளிப்படுகிறது. மாதவையாவின் பத்மாவதி சரித்திரத்துக்கும் இந்நாவலுக்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. பத்மாவதி சரித்திரத்தில் அன்றைய வாசகர்களைக் கவரும் காதல், சதிவேலைகள், குடும்பச்சிக்கல்கள், முடிவில் நன்மை ஆகிய கட்டமைப்பு இருந்தது. முத்துமீனாட்சி மிக நேரடியான, அப்பட்டமான சமூகச் சாடல் கொண்ட நாவல். ஆகவே பிற்கால விமர்சகர்கள்கூட அந்நாவலை பெரிதாக பொருட்படுத்தவில்லை.
தமிழில் நேரடியான சமூகச்சாடல் கொண்ட முதல் நாவல் முத்துமீனாட்சிதான். அத்தகைய நாவல்கள் அதற்குப் பிறகும் தமிழில் குறிப்பிடும்படி உருவாகவில்லை.
உசாத்துணை
- முத்துமீனாட்சி – தமிழினி வெளியீடு. கால.சுப்ரமணியம் ஆய்வுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:00 IST