64 சிவவடிவங்கள்: 31-சண்டேச அனுக்கிரக மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சண்டேச அனுக்கிரக மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் முப்பத்தியொன்றாவது மூர்த்தம் சண்டேச அனுக்கிரக மூர்த்தி. விசாரசர்மனுக்கு சண்டேசப் பதவியை அனுக்கிரகித்ததால் சிவபெருமானுக்கு ‘சண்டேச அனுக்கிரக மூர்த்தி’ என்றப் பெயர் ஏற்பட்டது
தொன்மம்
திருசேய்ஞலூரில் வாழ்ந்து வந்த அந்தணர்களுள் ஒருவர் யஜ்ஞதத்தன். அவர் மனைவி பத்திரை. இவர்களது மகன் விசாரசர்மன். விசாரசர்மன் பிறக்கும்போதே முன்ஜென்ம அறிவின் பயனாக நல்லறிவுடன் பிறந்தான். யாரிடமும் வேதம் பயிலாமல் தானே உணரும் அறிவைப் பெற்றிருந்தான். குல வழக்கப்படி ஏழுவயதில் அவனுக்கு உபநயனம் செய்தனர். எந்த ஆசிரியரிடமும் கற்காமல் தானே அனைத்தையும் உணர்ந்து வேதத்தில் கூறியுள்ளபடி அவன் வாழ்ந்து வந்தான். ஐந்தொழில்கள் செய்து நம்மை வழிநடத்துவதற்குரியவர் சிவபெருமான் ஒருவரே என்பதை அவன் மனப்பூர்வமாக நம்பி வாழ்ந்தான்.
இந்நிலையில் அவனுடன் இருக்கும் ஓர் அந்தணச் சிறுவன், பசுவை ஓட்டி வரும்போது சினத்தால் அதனை அடிப்பதைக் கண்டான். அதனால் மிகவும் மனம் வருந்திய அவன், ஊரார் அனுமதி பெற்று பசு மேய்க்கும் வேலையையும் செய்தான். பசுக்களை அன்புடன் பராமரித்தான். அதனால் அவை முன்பை விட அதிகளவில் பால் கொடுத்தன.
விசாரசர்மன் திருசேய்ஞலூரில் உள்ள மண்ணி ஆற்றங்கரையில் இருக்கும் அத்திமரத்தின் கீழே, மணலில் லிங்கம் செய்து கோயில், கோபுரம், மதில் போன்றவற்றை மணலால் அமைத்தான். தினந்தோறும் சிவபெருமானுக்குப் பூஜை செய்து பசுக்களின் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தான். இதனைக் கண்ட சக சிறுவர்கள் சிலர் ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டனர். ஊர்ப் பெரியவர்கள் விசாரசர்மனின் தந்தையிடம் முறையிட்டனர். விசாரசர்மனின் தந்தை, தான் பார்த்து சரி செய்வதாக அவர்களிடம் வாக்களித்தார்.
மறுநாள் காலை விசாரசர்மன் பசுக்களை ஆற்றங்கரைக்கு ஓட்டிச் சென்றான். பின் குளித்து, பசுக்களின் பாலைக் கொண்டு அபிஷேகம் செய்து மணல் லிங்கத்தைப் பூஜித்தான்.
அப்போது அங்கு வந்த அவன் தந்தை யஜ்ஞதத்தன் சினம் கொண்டு, விசாரசர்மனின் முதுகில் ஓங்கி அடித்தார். பூஜையில் ஒன்றி இருந்த விசாரசர்மன் அடியையோ, வலியையோ உணரவில்லை. அதனால் மேலும் கோபமுற்ற தந்தை யஜ்ஞதத்தன், சிவனுக்கு அபிஷேகம் செய்ய வைத்திருந்த பால் குடங்களைக் காலால் உதைத்துத் தள்ளினார்.
பால் குடங்கள் அனைத்தும் மண்ணிலே கவிழ்ந்தன. உடன் சுயநினைவு வரப்பெற்ற விசாரசர்மன், தந்தையென்னும் பாராமல் அங்கிருந்த ஒரு கம்பை எடுத்து வீசினார். கம்பு மழுவாக மாறித் தந்தையின் கால்களை வெட்டியது.
உடன் சிவபெருமான் இடப வாகனத்தில் உமையுடன் அங்கு காட்சிக்கொடுத்தார். விசாரசர்மனை ஆசிர்வதித்து, “என்னுடைய தொண்டர்கள் அனைவருக்கும் உன்னைத் தலைவனாக்கினோம். இன்று முதல் என்னுடைய அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தையும் உனக்கே தந்தோம்.” என்று கூறித் தனது ஜடாமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசர்மனுக்குச் சூட்டி அவருக்கு சண்டேசப் பதவியை அளித்தார்.
விசாரசர்மனுக்கு சண்டேசப் பதவியை அனுக்கிரகித்ததால் சிவபெருமானுக்கு ‘சண்டேச அனுக்கிரக மூர்த்தி’ என்ற பெயர் ஏற்பட்டது.
சிவனருளால் சண்டேசர், சண்டேசுர நாயனார் ஆக உயர்ந்தார். சண்டேசுர நாயனாரைப் பற்றி சேக்கிழார் தன் பெரிய புராணத்தில் மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
வழிபாடு
கும்பகோணம் சேய்ஞலூர் அருகிலுள்ள திருவாய்ப்பாடியில் சிவபெருமான் சண்டேச அனுக்கிரக மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். இங்கு இறைவன் பெயர் பாலுகந்தமூர்த்தி, இறைவி பெயர் பெரியநாயகி. சண்டேசப் பதவியை அளிக்கும் வல்லமை இவர் ஒருவருக்கே உண்டு என்பதாகக் கூறப்படுகிறது. சண்டேசரை வணங்கினால் மட்டுமே சிவ வழிபாடு முழுமையடையும் என்பது ஐதீகம். சண்டேசரை வணங்க மனம் ஒருமைப்படும், வில்வார்ச்சனையும், வெண்சாத நைவேத்தியமும் பிரதோஷம், சோமவாரங்களில் அளித்து வழிபட நல்லறிவு, நல்லெண்ணம் மேம்படும் என்பதும், இம்மூர்த்தியை பஞ்சகவ்யம் கொண்டு வழிபட ஆன்மா தூய்மையடையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
உசாத்துணை
✅Finalised Page