மீனவன் (கவிஞர்)
மீனவன் (கவிஞர் மீனவன்; இரா. நாராயணசாமி; இரா.கு. நாராயணசாமி) (பிறப்பு: ஜனவரி 09, 1933 - இறப்பு: ஆகஸ்ட் 22, 2012) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். தமிழாசிரியராகப் பணியாற்றினார். கவிமாமணி, கவித்தென்றல் உள்ளிட்ட பல்வேறு பட்டங்கள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
இரா. நாராயணசாமி என்னும் இயற்பெயரை உடைய மீனவன், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் இராகுலன் - தையலம்மை இணையருக்கு, ஜனவரி 09, 1933 அன்று மூத்த மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த இவர் தமிழில் புலவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
மீனவன், நாகப்பட்டினம் தேசிய மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராகப் பணியாற்றினார். மணமானவர். இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள்.
இலக்கிய வாழ்க்கை
இரா. நாராயணசாமி, மீனவன் என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டு கவிதைகள் எழுதினார். முதல் கவிதை 1948-ல் வெளியானது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்களில் நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதினார். 'நெய்தல் பாவை', 'முகிலன்', 'தென்மொழி' போன்ற புனை பெயர்களிலும் எழுதினார். முதல் கவிதைத் தொகுப்பு 1971-ல் வெளியானது. பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். பல பட்டிமன்றங்களின் நடுவராகச் செயல்பட்டார்.
மீனவனின் ’கொஞ்சும் குழந்தை’ நூலில் இடம்பெற்ற ’ஒருமைப்பாடு’ என்னும் பாடல் ஐந்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றது. ’முத்திரைக்குமரி’ என்னும் நூலில் இடம்பெற்ற ’சிந்தனைச்சிற்பி’ என்னும் பாடல் பனிரெண்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றது.
அமைப்புச் செயல்பாடுகள்
மீனவன், பொதுவுடைமைவாதி சிங்காரவேலரின் மீது கொண்ட பற்றினால், அவரது பெயரில் ’சிந்தனைச் சிற்பி மழலையர் பள்ளி’யை அக்கரைப்பேட்டையில் தொடங்கினார். நூற்றுக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்களை நடத்தினார். நாகப்பட்டினத்தில் பல்வேறு இலக்கிய மற்றும் சமூக அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார்.
விருதுகள்
- சென்னையில் நடந்த இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில், ‘புகாரில் ஒரு நாள்‘ என்னும் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு, அப்போதைய முதல்வர் சி.என்.அண்ணாத்துரையிடமிருந்து தங்கப்பதக்கம் பரிசாகப் பெற்றார்.
- ’கொஞ்சும் குழந்தை' கவிதைத் தொகுப்புக்கு, தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்காக, அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியால் அளிக்கப்பட்ட முதல் பரிசு ரூபாய் 2000/-.
- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தொடக்க விழாவில், ‘தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்’ என்னும் கவிதைக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரனால் வழங்கப்பட்ட பரிசு. ரூ. 1000/-
- கவிமாமணி விருது - 1981
- ஆதித்தனார் முத்தமிழ்ப் பேரவை பரிசு - 1985
- கவிக்கடல் பட்டம் - 1989
- கவிமுரசு பட்டம் - 1989
- கவித்தென்றல் பட்டம் - 1990
- சொற்செட்டுப் பாவலர் பட்டம் - 1991
- கவிக்கொண்டல் பட்டம் - 1991
- பாவேந்தர் நூற்றாண்டு விழாப் பரிசு - 1991
மறைவு
கவிஞர் மீனவன், ஆகஸ்ட் 22, 2012 அன்று காலமானார்.
நினைவு
கவிஞர் மீனவன் நினைவாக ‘கவிஞர் மீனவன் கல்வி அறக்கட்டளை’ என்ற அமைப்பு மீனவனின் குடும்பத்தாரால் தொடங்கப்பட்டது. இவ்வமைப்பு, மாணவர்களிடையே கவிதைப் போட்டிகள் நடத்திப் பரிசளித்து கவிதை வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் ஊக்கமளித்து வருகிறது.
மதிப்பீடு
கவிஞர் மீனவன் சந்த நயங்களுடனும், அழகியல் தன்மைகளுடனும் பல கவிதைகளை எழுதியவராக அறியப்படுகிறார்.
நூல்கள்
- கொஞ்சும் குழந்தை - 1971
- உழைக்கும் பரிதி - 1977
- முத்திரைக்குமரி - 1987 (தனிப்பாடல் தொகுப்பு)
- சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் பிள்ளைத்தமிழ் - 2002
- பண்டைய தமிழரும், பரதவர் வாழ்வும் - 2004 (ஆய்வு நூல்)
- கவிஞர் மீனவன் கவிதைத் தொகுப்பு
உசாத்துணை
- மீனவன் இணையதளம்
- சிந்தனைச் சிற்பி தளம்
- இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, முதல் பதிப்பு: 2004
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Oct-2024, 12:49:01 IST