under review

கள்ளோ காவியமோ

From Tamil Wiki
Revision as of 16:31, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Kallo Kaviyamo. ‎

கள்ளோ காவியமோ

கள்ளோ காவியமோ ( 1947) மு.வரதராசன் எழுதிய நாவல். பெண்விடுதலையை மரபார்ந்த ஒழுக்கப் பார்வை மீறாமல் முன்வைக்கும் நாவல். பெண்களுக்கு சமூக அமைப்பு அளிக்கும் இன்னல்களையும் அவர்கள் மீதான அடக்குமுறையையும் முதன்மையாகப் பேசுகிறது

எழுத்து ,வெளியீடு

மு. வரதராசன் இந்நாவலை 1947-ல் எழுதினார். இது மு.வ. எழுதிய இரண்டாவது நாவல். முதல் நாவல் 'செந்தாமரை'. இதை அவரே தன்னுடைய' தாயகம்' பதிப்பக வெளியீடாகப் பிரசுரித்தார். கள்ளோ காவியமோ நாவலை மு. வ, வின்‌ மாணவர்களில்‌ ஒருவரான ம.ரா.போ.குருசாமி சக்தி வெளியீடாகக்‌ கொணர முயன்றார். ஆனால்‌, சக்தி வை.கோவிந்தன்‌ இதை ஒரு நாவலாகக்‌ கருதவில்லை, கொண்டு வந்து தந்த குருசாமியிடமே அவர்‌ அதைத்‌ திரும்பிக்‌ கொடுத்துவிட்டார்‌. இப்படித்‌ திருப்பியனுப்பப்‌பட்ட நாவல்‌ தான்‌ பின்னர்‌ தமிழ்வளர்ச்சிக்கழகத்தின்‌ பரிசைப்‌ பெற்றது என்று நாரண துரைக்கண்ணன் மு.வ நினைவுமலர் கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்நாவலை மு.வ.வின் ஆசிரியரான திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் தனது சாது அச்சகத்தில் அச்சிட்டு அளித்தார். மு.வ. தான் சொந்தமாகத் தொடங்கிய தன் பதிப்பகத்திற்கு தாயகம் என பெயரிட்டார். அதன்பின் தன் நாவல்களைத் தானே வெளியிட்டார்.

கதைச்சுருக்கம்

மங்கை இளமையில் தாயை இழந்தவள். தந்தை குடிகாரர். அத்தையின் வளர்ப்பில் கொடுமைக்குள்ளாகும் மங்கை, ரயிலில் சந்திக்க நேர்ந்த ஒரு குடும்பத்துடன் சென்று அவர்களின் வீட்டு வேலைக்காரியாக ஆகிறாள். அந்த இல்லத்து பெரியவரின் தூண்டுதலால் எழுதப்படிக்க கற்கிறாள். அந்த வீட்டைச்சேர்ந்த அருளப்பனும் மங்கையும் ஒருவருக்கொருவர் விரும்புகிறார்கள். அருளப்பனின் சகோதரி மணமுடித்து பெங்களூருக்குச் செல்கையில் மங்கையையும் உடன் அனுப்புகிறார்கள். அங்கே அவள் வேலைக்காரியாக பணியாற்றுகிறாள். அருளப்பனின் தந்தைக்கு இக்காதல் தெரியவருகிறது. அவர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். அவர்களுக்கு தேன்மொழி என்னும் குழந்தை பிறக்கிறது

மங்கை மீது அருளப்பன் சந்தேகமும் கசப்பும் அடைகிறான். மங்கை கணவனையும் தேன்மொழியையும் விட்டுவிட்டு பம்பாய்க்குச் சென்று அங்கே ஒரு வட இந்தியரின் உணவு விடுதியில் பணிபுரிகிறாள். மங்கை சென்றபின் தன் தவறை அருளப்பன் உணர்கிறான். ஆனால் பல ஆண்டுகள் கழித்தும் மங்கையைக் கண்டுபிடிக்க முடியாமையால் தேன்மொழியிடம் மங்கை இறந்துவிட்டதாகச் சொல்லிவிடுகிறான். ஒரு வேலைக்காக பம்பாய் செல்லும் அருளப்பன் அங்கே மங்கையைச் சந்திக்கிறான். அவளை அழைத்து வருகிறான். ஆனால் தேன்மொழி அவளைத் தன் அம்மாவாக ஏற்க மறுக்கிறாள். மங்கை மனம் உடைந்து நோயுற்று இறக்கும் தருவாயில் தேன்மொழி அவளை அம்மா என அழைக்கிறாள்.

இலக்கிய இடம்

இந்நாவல் சமூகத்தில் பெண்களின் உரிமைகள் எப்படி மறுக்கப்படுகின்றன, அவர்கள் எப்படி அடிமையாகவே நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பேசுவது. தன்மானத்தை விட்டுக்கொடுக்காத பெண்ணாக மங்கை சித்தரிக்கப்படுகிறாள். சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி மு.வ நாவல் முழுக்க ஆசிரியர் கூற்றாகவும் கதைமாந்தர் கூற்றாகவும் தன் கருத்துக்களைச் சொல்கிறார். தமிழில் நாவல்கள் எழுதப்பட்ட இரண்டாம் காலகட்டத்தில் உருவான சமூகவிமர்சனப்போக்கின் உதாரணமாக இந்நாவலை சிட்டி- சிவபாதசுந்தரம் அவர்களின் 'தமிழ்நாவல்' நூலில் குறிப்பிடுகிறார்கள். கள்ளோ காவியமோ அன்றைய பொதுவாசிப்பு எழுத்தின் பல கூறுகள் கொண்டது. இந்நாவலின் கதைக்கட்டமைப்பில் மீ.ப.சோமு எழுதிய ரவிச்சந்திரிகா நாவலின் சாயலைக் காணலாம். அனாதைப்பெண், அவளுக்குச் சிக்கல்கள், காணாமல் போய் கண்டுபிடித்தல் போன்றவை வங்க நாவல்களில் இருந்து அன்றைய பொதுவாசிப்புச் சூழலுக்கு வந்த கூறுகள்.

விருது

கள்ளோ காவியமோ 1949-ல் அன்றைய மதராஸ் மாகாண அரசின் சிறந்த நாவல் விருதைப் பெற்றது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:02 IST