under review

மயூரகிரிக்கோவை

From Tamil Wiki
Revision as of 14:00, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தமிழ் இணைய கல்விக் கழகம்

மயூரகிரிக்கோவை (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) மயூரகிரியில் கோவில் கொண்ட ஆறுமுகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட கோவை என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

மயூரகிரிக்கோவையை இயற்றியவர் சாந்துப்புலவர். மயூரகிரிக் கோவை மருது பாண்டியர்களின் அவையில் (பொ.யு. 1798) காளயுக்தி ஆண்டு தை 27 வெள்ளிக் கிழமை அன்று அரங்கேற்றப்பட்டது. சாந்துப் புலவருக்கு மருதரசர்கள் ஆடையும், பொன்னும், காளையார் கோயிலுக்கு அருகில் உள்ள 'புலவன் மருதங்குடி' என்ற கிராமத்தையும் கொடையாக வழங்கினர். இந்நூலை மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் ஆண்டு நடந்த வித்துவசபையில் மே 25 ,1908 அன்று பாண்டித்துரைத் தேவர் விருப்பப்படி படிக்கப்பட்டு அரசன் சண்முகனாரால் உரை நிகழ்த்தப்பட்டது.

நூல் அமைப்பு

மயூரகிரி (குன்றக்குடி) பாண்டிய நாட்டில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற தலம். அங்கு கோவில் கொண்ட முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது மயூரகிரிக்கோவை. தலைமக்கள் களவு தொடங்கிக் கற்பாகி மகப்பேறு எய்தி இன்பமாக இருக்கும் இல்லற வாழ்க்கையே கோவையின் பேசு பொருள். ஐந்து திணைகளும் அவற்றுக்குரிய முதல், உரி, கருப்பொருள்களுடன் இடம்பெறுகின்றன.

இக்கோவை 536 கட்டளைக் கலித்துறை பாடல்களை உடையது. பாட்டுடைத் தலைவராகிய குமாரக்கடவுள்‌ தம்‌மைப்‌ பூசித்‌த அகத்தியர் முதலிய முனிவர்களுக்கு அருள் புரிந்ததும், புராணக் கதைகளும், வேதாந்தக் கருத்துகளும், நீதிகளும், அப்போது சிவகங்கையில்‌ அரசராக இருந்த மருதுபாண்டியரின் வீரமும், ஈகையும், கொடையும், அறங்களும், மயூரகிரிக்குச் செய்த திருப்பணிகளும் பாடப்படுகின்றன.

மயூரகிரிக் கோவையில் சிங்கம் வினாதல், கரடி வினாதல், முயல் வினாதல் எனப் பல வினாக்கள் வருகின்றன. எல்லா வினாக்களுக்கும் தோழி எதிர்மொழி பொருந்தச் சொல்லுகின்றாள்.

பாடல் நடை

மருதுபாண்டியர் செய்த தடாகம்

கரமெது கந்தன் மயூர கிரிக்குத் தொடர்ந்தசரி
சரவணத் திற்கெது வாரி யெதுதிருச் சன்னதிக்கே
யரச வனத்திற் கெதுபட்ட மத்தம்வை யாபுரிக்கே
துரையு மருது துரைசெய் தடாகத்துக் கோர்நெறியே.
(பாடல் - 118)

பாங்கி தலைவனுக்கு உடன்போக்‌கு உணர்த்தல்‌

அஞ்சப்‌ படைபஞ்‌ சனுப்பிவெஞ்‌ ரூர னணியைவென்றோன்‌
மஞ்சிற்‌ பொலியு மயில்வரை காக்கின்ற மன்னவரே
செஞ்சொற்‌ கிளியையுன்‌ பூங்கா வனத்திற்‌ செறிந்தனன்றாங்,
கொஞ்சத்‌ தனத்துக்குக்‌ கொஞ்சத் தனத்தைக் கொடாரெமரே,

உசாத்துணை

மயூரகிரிக்கோவை, தமிழ் இணைய கல்விக்கழகம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Sep-2023, 09:27:21 IST