under review

கல்பொருசிறுநுரை (வெண்முரசு நாவலின் பகுதி - 25)

From Tamil Wiki
Revision as of 13:56, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கல்பொருசிறுநுரை ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 25)

கல்பொருசிறுநுரை[1] ('வெண்முரசு’ நாவலின் பகுதி - 25) கிருஷ்ணனின் மைந்தர்கள் தங்களுக்குள்ளாகப் போரிட்டு அழிவதையும் துவாரகையின் வீழ்ச்சியையும் சொல்கிறது. கிருஷ்ணரின் மரணத்துடன் இந்தப் பகுதி நிறைவுபெறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் 25-வது பகுதியான 'கல்பொருசிறுநுரை’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் மார்ச் 2020 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜூன் 2020-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

இளைய யாதவருக்கு எட்டு மனைவியர். இளைய யாதவரின் மகன்கள் எண்பதுபேர். அதில் மூன்று மகன்கள் மட்டுமே துவாரகையின் மணிமுடியைச் சூடும் தகுதியைக் கொண்டுள்ளனர். ஆனால், எண்பதுபேரும் துவாரகையை ஆளவே விழைவு கொண்டுள்ளனர். இளைய யாதவரின் மகன்களுள் ஒருவரான முரளி மட்டும் இவர்களை விட்டு விலகி இருக்கிறார். அவர் தன் தந்தையான இளைய யாதவருக்கு இணையாகக் குழலிசைக்கும் மாற்றுத் திறனாளியாகப் பின்னாளில் அறியப்படுகிறார்.

துவாரகை சத்யபாமையின் ஆட்சியிலிருந்தது. பின்னாளில் அது துரியோதனனின் மகள் கிருஷ்ணையின் ஆளுகைக்கு உட்படுகிறது. பின்னர், இளைய யாதவரின் மகன்கள் துவாரகையை முழுதாள எண்ணுகிறார்கள். அவர்களுள் மூத்தவர் ஃபானு. அவரை எதிர்க்கவும் ஆதரிக்கவும் அவரின் தம்பியரும் துவாரகை மக்களும் திரள்கிறார்கள். இளைய யாதவரின் மகன்கள் அனைவருமே தன் தந்தையை வெறுக்கிறார்கள். அவரைப் போருக்கு அறைகூவிக் கொல்லவும் ஆயத்தமாக இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அஸ்தினபுரியின் முற்றழிவுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்த கணிகர் துவாரகைக்கு வருகிறார்.

கணிகர் ஒரு நச்சுநிழல். அந்த நிழல் எங்குப் படிந்தாலும் அந்த இடம் பாழ்தான். அந்த நிழல் எவர் மீது படிந்தாலும் அவர் தன்னைச் சுற்றியிருப் பவரையும் அழித்து, தன்னையும் அழித்துக் கொள்வார். எல்லாவற்றையும் அழித்துவிட்டு இறுதியில் கணிகர் இளைய யாதவரின் பாதங்களில் சரணடைகிறார். ஒருவகையில் பார்த்தால், இளைய யாதவர் கணிகரையும் தன்னுடைய படைக்கலமாகவே கையாண்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

கிருதவர்மரும் ருக்மியும் துவாரகைக்கு ஒருவகையில் ஆதரவாகவும் பிறிதொரு வகையில் எதிர்ப்பாகவும் இருக்கிறார்கள். இளைய யாதவரையும் அவரின் மனைவியர் மற்றும் மகன்களையும் ஒன்றிணைக்க சாத்யகி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறார். அவரும் கிருதவர்மரும் இணைந்து துவாரகையின் பிதாமகர் நிலையில் அமர்ந்து, இளைய யாதவரின் மகன்களை ஒன்றிணைக்கின்றனர். அந்த ஒற்றுமை கணிகரின் அதிசூழ்ச்சியால் சிதறுகிறது. இளைய யாதவரின் மகன்கள் ஒருவரையொருவர் அழித்துக்கொள்கின்றனர். துவாரகையில் ஆழிப்பேரலை எழுகிறது. கணிகர் எண்ணியது போலவே அனைத்தும் நிகழ்கின்றன.

இளைய யாதவரை மீண்டும் துவாரகைக்கு எழுந்தருளச் செய்யும் உருக்கமான மன்றாடல்கள் தொடர்கின்றன. இளைய யாதவரின் மகன்களுள் சிலர் துவாரகையின் கருவூலத்தோடு புதிய நிலத்துக்குப் புலம்பெயர்கின்றனர். செல்லும் வழியில் மக்களிடையே கலவரம் எழுகிறது. பலர் இறக்கின்றனர். அவர்கள் பிரபாசக்ஷேத்ரத்திற்கு வருகின்றனர். புதிய நிலத்தில் காலூன்றுகின்றனர். அது எந்த வகையிலும் அவர்களுக்கு வாழ்வளிக்காத நிலமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அதில் வாழ முற்படுகின்றனர் இளவேனில் விழாவைக் கொண்டாடுகின்றனர். கள்மயக்கில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொல்கின்றனர்.

'வெண்முரசு’ நாவலின் 'பன்னிருபடைக்களம்’ பகுதியில் இடம்பெற்றிருப்பது போன்ற ஒரு சூதாட்டம் இந்தக் கல்பொருசிறுநுரையிலும் நிகழ்கிறது. அஸ்தினபுரியில் நடைபெற்ற சூதாட்டத்தில் சகுனி சதியாட்டம் ஆடினார். மூத்த யாதவரான பலராமருக்கும் ருக்மிக்கும் இடையே மதுராவில் நடைபெற்ற இந்தச் சூதாட்டத்தில், ஊழே சதியாட்டம் ஆடுகிறது. அதன் விளைவாக ருக்மி கொல்லப்படுகிறார். ஆழிப்பெருக்கால் துவாரகை முற்றிலும் அழிகிறது.

கதை மாந்தர்

இளைய யாதவர், பலராமர், இளைய யாதவரின் மகன்கள் ஆகியோர் இந்தக் கல்பொருசிறுநுரையில் முதன்மைக் கதைமாந்தர்களாக இடம்பெற்றுள்ளனர். சாத்யகி, பிரதிபானு, சோமன், ஸ்ரீகரர் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாக வந்துள்ளனர். இந்தத் துணைமைக் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே இளைய யாதவரைச் சந்தித்து உரையாடுவதன் வழியாகத் துவாரகையில் நடந்தவை அனைத்தும் வாசகருக்குக் காட்சிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Dec-2022, 08:47:25 IST