under review

முதற்கனல் (வெண்முரசு நாவலின் முதற்பகுதி)

From Tamil Wiki
Revision as of 13:52, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
முதற்கனல் ('வெண்முரசு’ நாவலின் முதற்பகுதி)

முதற்கனல்[1] எழுத்தாளர் ஜெயமோகன் மகாபாரதத்தை மீட்டுருவாக்கம் செய்து நவீனச் செவ்வியல் நடையில் எழுதிய வெண்முரசு நாவலின் முதற்பகுதி. மாபெரும் காவியநாவலான வெண்முரசுக்கு அஸ்திவாரம் போன்று மிகவும் உறுதியாக அமைக்கப்பட்ட பகுதி இது. 'முதற்கனல்’ மாபெரும் அழிவின் முதல் பொறி. ஒரு பெண்ணின் சாபமே குருகுலத்தை அழிக்கும் முதற்கனல். அது அம்பையுடையது என்றல்ல, அதற்கும் முன்னால் அறுபது வயதில் பிள்ளைகள் பெற்று மடிந்த சுனந்தையின் கனல். 'திரௌபதியின் கண்ணீர்தான் மகாபாரதம்’ என்று பொதுவாகக் கூறப்படும் சூழலில், 'திரௌபதி போன்றே நூற்றுக்கும் மேற்பட்ட திரௌபதிகளின் கண்ணீரே மகாபாரதம்’ என்பதை இந்த 'முதற்கனல்’ பகுதி காட்டுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் முதற் பகுதியான முதற்கனல் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் ஜனவரி 1, 2014 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் என வெளியிடப்பட்டு பிப்ரவரி 2014-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் முதற் பகுதியான முதற்கனலை நற்றிணை பதிப்பகம் 2014-ல் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. பின்னர், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

முதற்கனல்’ ஜனமேஜெயனின் சர்ப்ப சத்ர யாகத்தை நிறுத்த வரும் ஆஸ்திகன் தன் அன்னை மானசா தேவியின் வேசர நாட்டிலிருந்து புறப்படுவதில் துவங்கி, அவன் வெற்றியுடன் தாயிடம் திரும்புவதில் முடிகிறது. இடையில் வைசம்பாயனரின் சொல்லில் விரிகிறது பாரதம். வியாச பாரதத்தில் உள்ள பகுதியைப் பொறுத்தவரை சந்தனுவின் மரணத்தில் துவங்கி சிகண்டி பீஷ்மரை இன்னாரென்று அறியாமல் சந்தித்து, தன்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள இறைஞ்சுவதோடு முடிகிறது.

கதை மாந்தர்கள்

சத்தியவதி, பீஷ்மர், வியாசர், அம்பை, அம்பாலிகை, விசித்திரவீரியன், சிகண்டி ஆகியோர் இந்த முதற்கனலின் முதன்மை மாந்தர்கள்.

உருவாக்கம்

நாவல் வரிசையின் முதல் நூலான இதில் அம்பை தனித்த 'முதற்கனல்’ மட்டுமல்ல, மகாபாரதம் முழுக்க பற்றி எரியக் கூடிய அனைத்துத் திரிகளையும் ஏற்றி வைக்கும் முழு முதற்பெருங்கனலுமாக இருக்கிறாள்.மகாபாரதத்தில் அம்பையைப் போன்ற எத்தனையோ தெய்வங்களைக் காண நேரும். அவர்களுக்குக் 'கட்டியம்’ கூறுவதாகவே இந்த 'முதற்கனல்’ அமைந்திருக்கிறது.

பீஷ்மர் காசிநகரின் மூன்று இளவரசிகளையும் சிறையெடுத்து, கங்கைநதியில் படகில் அஸ்தினபுரிக்குச் செல்லும்போது, அம்பை தான் சால்வரையே விரும்புவதாகக் கூறுகிறாள். அதன்படியே அம்பையைத் திருப்பி அனுப்பினாலும் சால்வனும், காசி மன்னனும் அம்பையை அவளை ஏற்க மறுக்கிறார்கள். தன்னுடைய தாயகமும் தன்னைப் புறக்கணித்தபோது அம்பை கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறாள். அப்போது 'விருஷ்டி’ என்ற தேவதையின் சொல்வழியே அம்பை தன் அகம் பீஷ்மரை விரும்புவதை குறிப்புணர்ந்து பீஷ்மரை நாடிச் செல்கிறாள். அவரும் புறக்கணித்தபோது அவர் மீது அவளுக்கு மாறாச் சினம் ஏற்படுகிறது. ஆனாலும் அவர் மீது அவளின் அகம் கொண்ட பற்று சிறிதும் குன்றவில்லை. இருப்பினும் அவர் மீது கொண்ட வஞ்சம் தீர்க்க அதுவே ஒற்றை இலக்காகக் கொண்டு பிற அனைத்தையும் துறந்து பிச்சியென அலைந்து சிகண்டி எனும் மகவை அடைகிறாள். சிவன் அம்பைக்குக் கூறிய அருளுரையின்படி, அம்பை தன் அகக் கனலை முழுமையாகச் சிகண்டியிடம் கையளித்து, பீஷ்மரைக் கொல்லுமாறு கூறுகிறாள்.

இதில் அம்பையின் கனல் அடிநாதமாக இருந்தாலும் எண்ணற்றவர்களின் அகக்கனல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.அம்பையைப் போலவே வாழ்க்கையில் மிகுந்த சினத்தை ஏந்தி அலைபவராக நாம் சிகண்டியையும் (அம்பைக்கு ஏற்பட்ட இழிவு) பால்ஹிகரையும் (தன் அண்ணன் தேவாபிக்கு ஏற்பட்ட இழிவு), கங்காதேவியும் (சந்தனு தனக்குக் கொடுத்த வாக்கை மீறியதால்), வியாசரையும் (அவரின் அன்னை சத்யவதி 'மச்சகுலம்’ என்பதால், அவர் ஞானம் பெறுவதற்கு அதுவே தடையாக இருப்பதால்) இப்படைப்பில் காணமுடியும்.

இது, 'எண்ணற்றவர்களின் முதற்கனலின் தொகுப்பு’ என்றும் கூறலாம்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2022, 08:44:30 IST