under review

திக்குறிச்சி மகாதேவர் ஆலயம்

From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
திக்குறிச்சி

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி ஊரில் உள்ள சிவ ஆலயம். மூலவர் மகாதேவர் லிங்க வடிவில் உள்ளார். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் இரண்டாவது ஆலயம்.

இடம்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் பாகோடு பஞ்சாயத்தின் கீழ் உள்ள ஊர் திக்குறிச்சி. தாமிரபரணி(கோதையாறு) ஆற்றங்கரையை ஒட்டி ஆலயம் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது.

மூலவர்

திக்குறிச்சி

மூலவர் பெயர் மகாதேவர். லிங்க வடிவில் உள்ளார். லிங்கத்தின் உயரம் 30 செ.மீ.

தொன்மம்

கோவிலில் மூலவர் முன் நந்தி இல்லை. நந்தி இல்லாததற்கு வாய்மொழிக் கதையாக ஒரு தொன்மம் உள்ளது.

ஊருக்குள் வந்து தொல்லை தந்த காளையை ஊர்மக்கள் ஆயுதங்களால் தாக்கி விரட்ட முயன்றனர். அது உடம்பெல்லாம் ரத்தத்துடன் ஆற்றங்கரையில் சென்று படுத்தது. ஊர்மக்கள் வேண்டுதலை ஏற்று தரணநல்லூர் தந்திரி மந்திரத்தால் ஆற்றின் கசத்தில் மூழ்கும்படி செய்தார். அந்த நேரத்தில் கோவிலில் இருந்த நந்தி மாயமானது.

கோயில் அமைப்பு

திக்குறிச்சி

வடக்கு வாசலில் வேலைப்பாடில்லாத தூண்களுடன் கூடிய சிறு முகப்பு மண்டபம் உள்ளது. கிழக்கு பிராகாரத்தின் வடகிழக்கில் சாஸ்தா கோவிலும் அருகே காலபைரவர் கோவிலும் உள்ளன. மேற்கு வாசலிலும் சிறு மண்டபம் உள்ளது. தென்மேற்கில் பிற்காலத்திய விநாயகர் கோவில் உள்ளது. வடமேற்கு வாயு மூலையில் கல்பட்டையில் சூலம் வரையப்பட்டு ஆகாச யட்சி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளாள்.

ஸ்ரீகோவிலை சுற்றி மூன்று புறமும் 90 செ.மீ. நீளமுள்ள கல்தொங்கு கூரை தூண்கள் மேல் உள்ளது.

இருபுறமும் 8 தூண்கள் கொண்ட சிறு முன் மண்டபம் கிழக்கு பிராகாரத்தில் உள்ளது. வடக்கிலும் தெற்கிலும் மட்டும் சுவர்கள் கொண்ட திறந்தவெளி மண்டபம். மண்டபத்தில் வாடாவிளக்கும் பலிபீடமும் உள்ளன. மண்டப தூண்களில் சில அபூர்வமான சிற்பங்கள் உள்ளன. கிழக்குத் திருச்சுற்று மண்டபம் தெற்கு வடக்காக நீண்டிருக்கும் கல் மண்டபம் ஆகும். மண்டபத்தின் ஆறு தூண்களிலும் சிற்பங்கள் இல்லை.

பக்தர்கள் கருவறை தெய்வத்தை தரிசிக்க மண்டபத்துக்கும் ஸ்ரீகோவிலுக்கும் நடுவே தரைமட்ட கல்மண்டபம் உள்ளது. கருவறையைச் சுற்றி 13 தூண்கள் கொண்ட திருச்சுற்று மண்டபம் உள்ளது. தூண்களின் அமைப்பு மற்றும் கட்டுமானம் அடிப்படையில் பொ.யு. 17 அல்லது 18 -ஆம் நூற்றாண்டில் கட்டபட்டுள்ளதாக கொள்ளலாம் என அ.கா. பெருமாள் கூறுகிறார்.

கருவறைக்கும் மண்டபதிற்கும் இடைப்பட்ட இடத்தில் சிறு பிராகாரம் கல் பலகணிக் கூரையுடன் உள்ளது. ஸ்ரீகோவிலின் தென்புறம் மடப்பள்ளி உள்ளது.

ஸ்ரீகோவில் கருவறை அர்த்த மண்டபம் என இரண்டு பகுதிகள் கொண்டது. 30 செ.மீ. உயர லிங்க வடிவில் மூலவர் மகாதேவர் உள்ளார். கருவறையின் கட்டுமான அமைப்பு பிற்கக்ச் சோழர் பாணியில் உள்ளது. முகப்பு கீர்த்தி விஜயநகர பாணியில் உள்ளது.

கோவிலில் நந்தி , கொடிமரம் இல்லை.

திக்குறிச்சி

சிற்பங்கள்

கிழக்குப் பிரகாரத்தில் உள்ள மண்டப தூண்களில் உள்ள சிற்பங்கள்.

  • பீமன் கையில் கதையுடன் நிற்க வியாக்கிரபாதர் பீமனைச் சபிக்க கையை ஓங்கும் காட்சி சிற்பம்(இது சிவாலய ஓட்டம் தொடர்புடையது)
  • அனுமன் கணையாழியை சீதையிடம் கொடுக்கும் காட்சி சிற்பம்(சீதை அமர்ந்திருக்க அனுமன் பவ்யமாக முன் நின்று கொண்டிருக்கிறான்)
  • அனுமன் அரக்கியின் வாய்வழி நுழைந்து காதுவழி செல்லும் சிற்பம்(இராமாயண யுத்த காண்ட நிகழ்ச்சி)
  • நாகக்குடையின் கீழ் அஞ்சலி ஹஸ்த முத்திரையுடன் காணப்படும் முனிவர் சிற்பம்
  • வில் அம்பு தாங்கிய முனிவர் சிற்பம்
  • ஆயுதத்துடன் வீரன் சிற்பம்
  • அனுமன் சிற்பம்
  • அஞ்சலி ஹஸ்த அதிகார நந்தி சிற்பம்
  • மானின் சிற்பம்

கருவறை அதிஷ்டான சுவரின் மேற்கே விஷ்ணு(இங்கு பொதுவாக நரசிம்மர் இருப்பது வழக்கம்), தட்சணாமூர்த்தி சிற்பங்களும் வடக்கே பிரம்மனின் சிற்பமும் உள்ளன.

திக்குறிச்சி

திருவிழா:

கோவில் திருவிழா மார்கழி மாதம் சதய நட்சத்திரத்தில் தொடங்கி திருவாதிரை நாளில் ஆறாட்டு வரும்படி முடிகிறது. ஆறாட்டு ஆற்றின் கரையில் நடக்கிறது. வேட்டை நிகழ்ச்சி யானை ஸ்ரீபலியுடன் திக்குறிச்சி ஊரில் உள்ள சாஸ்தா கோவிலில் நடக்கிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:12 IST