under review

பாவை

From Tamil Wiki
Revision as of 12:03, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாவை :தமிழில் சங்ககாலம் முதல் இருந்து வரும் ஓர் உருவகம். ஓவியம், சிற்பம், மயக்கும் தெய்வம், கொற்றவை, இளம்பெண் ஆகிய பொருள்களில் இச்சொல் தமிழில் காலந்தோறும் புழங்கி வருகிறது.

சங்ககாலப் பொருள்

பாவை என்னும் சொல் சங்க இலக்கியத்தில் மூன்று பொருட்களில் ஆளப்படுகிறது.

  • ஆடியிலோ நீரிலோ தெரியும் பிம்பம் பாவை எனப்பட்டது. (கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல. குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார்).
  • வரையப்பட்ட உருவங்கள் பாவை எனப்பட்டன. (ஈங்கே வருவாள் இவள் யார் கொல் ஆங்கே, ஓர் வல்லவன் தைஇய பாவைகொல் கலித்தொகை - குறிஞ்சிக்கலி 56. கபிலர்)
  • அணங்கு என்று சொல்லப்படும் பெண் தெய்வங்கள் பாவை எனப்பட்டன. (பாவை அன்ன வனப்பினள் இவள்- நற்றிணை 301, பாண்டியன் மாறன் வழுதி)

பிற்காலப்பொருள்கள்

பாவை வழிபாடு

தொல்தமிழின் நீட்சியாக உள்ள மலையாளத்தில் பாவை என்னும் சொல் பொம்மை என்னும் பொருளில் புழக்கத்தில் உள்ளது. கேரளத்தில் இல்லத்தில் நிறுவப்படும் பகவதி தெய்வம் சுவரில் சித்திரமாக வரையப்பட்டு வழிபடப்படுகிறது. ஆலயங்களில் சித்திரமாக தெய்வத்தை வழிபடும் வழக்கம் சங்க காலத்தில் இருந்து இன்றும் நீடிப்பதன் சான்று இது.

கொற்றவை

சங்க காலத்திற்குப் பின்னர் பாவை என்பது இளம்பெண்ணைக் குறிக்கும் சொல்லாக மாறியது. சிலப்பதிகாரத்தில் பாவை என்னும் சொல் உக்கிரமான தெய்வம் என்னும் பொருளில் கொற்றவை தெய்வத்தைச் சுட்டுவதாக குறிப்பிடப்படுகிறது. வேட்டுவவரி பாடலில் ’பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை, ஆய்கலைப் பாவை, அருங்கலப் பாவை’ என கொற்றவை குறிப்பிடப்படுகிறாள். (பார்க்க கொற்றவை )

பாவை நோன்பு

இளம்பெண்கள் செய்யும் நோன்பும் பூசையும் பாவை நோன்பு என்னும் பெயரில் கடைப்பிடிக்கப்பட்டது. அதை ஒட்டி திருப்பாவை, திருவெம்பாவை போன்ற நூல்கள் உருவாயின. ( பார்க்க பாவை நோன்பு)

கொல்லிப்பாவை

கொல்லிப்பாவை என்னும் சொல் கொல்லும் தன்மை கொண்ட பாவை என்னும் பொருளில் ஓரு பெண்தெய்வத்தைக் குறிக்கிறது. சங்கப் பாடல்களில் கொல்லிமலையில் இருந்த கொல்லிப்பாவை என்னும் தெய்வம் குறிப்பிடப்படுகிறது .(பார்க்க கொல்லிப்பாவை (தொன்மம்) )

அணங்கு

சங்க காலத்தில் அணங்கு என்னும் தெய்வம் குறிப்பிடப்படுகிறது. பார்ப்பவரை மயக்கி ஆட்கொள்ளும் தன்மை கொண்டது. தலைவியின்மேல் நுண்வடிவில் சேர்ந்து அவளை நோய்கொள்ளச் செய்கிறது. அணங்கும் பாவையும் இணையான தெய்வங்களாகச் சொல்லப்படுகின்றன.

(பார்க்க அணங்கு)

மோகினி

சங்க காலத்தில் அணங்கு என்று சொல்லப்படும் பெண் தெய்வம் பிற்காலத்தில் மோகினி என்று வழங்கப்பட்டது. மோகம் கொள்ள வைப்பவள் மோகினி. விஷ்ணு பாற்கடலில் எழுந்த அமுதத்தை பங்கிடும் பொருட்டு மோகினி வடிவம் எடுத்தார் என்னும் தொன்மத்துடன் அணங்கு என்னும் தெய்வ உருவகமும் இணைந்துவிட்டது. பிற்கால ஆலயங்களில் எல்லாம் மோகினி என்னும் சிலை காணப்படுகிறது. சில இடங்களில் வழிபாட்டிலும் உள்ளது.

மோகினி இன்று நாட்டார் நம்பிக்கைகளில் நீடிக்கும் ஒரு தெய்வ உருவகமாகவும் உள்ளது. இளைஞர்களை பற்றிக்கொண்டு அவர்களை நிலைமறக்கச் செய்யும் தன்மை கொண்டது இது. அவர்களை விட்டு நீங்காவிட்டால் உயிர்பறிக்கும் தன்மை கொண்டது. இனிமை, அழகு ஆகியவற்றில் பித்துகொள்ளச் செய்வது. (பார்க்க - மோகினி)

மண்சிலைகள்

வீரர் போரில் மறைந்ததும் அவர்களுக்கு நடுகல் நாட்டி வழிபடுவது தமிழர் வழக்கம். மண்ணிலும் சிலைசெய்து வைத்து ஊனும் கள்ளும் படைத்து வழிபடுவதுண்டு. அவற்றையும் பாவை என்று சங்கப்பாடல் சொல்கிறது. ’பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய் வினை அழி பாவையின் உலறி’ (அகநாநூறு 157 வேம்பற்றூர்க் குமரனார்)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Nov-2022, 13:03:31 IST