first review completed

மனுக்குல வெண்பா

From Tamil Wiki
Revision as of 16:00, 23 May 2024 by ASN (talk | contribs) (ஆசிரியர் குறிப்பு இணைக்கப்பட்டது. சுட்டி இணைக்கப்பட்டது.)

மனுக்குல வெண்பா (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இதனை இயற்றியவர் சூ. தாமஸ்.

வெளியீடு

மனுக்குல வெண்பா, ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் தொகுப்பு நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ், ஆகஸ்ட் 04, 1910 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாரப்பட்டி என்னும் கோட்டூரில், சூசை உடையார் - சூசையம்மாள் என்னும் பாப்பு இணையருக்குப் பிறந்தார். திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். தொடர்ந்து இல்லத்திலிருந்தே தமிழ் படித்தார். 1932-ல், மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரவேசப் பண்டிதத் தேர்வில் வெற்றிபெற்றார். 1936-ல் திருவையாறு தமிழ்க் கல்லூரியில் பயின்று தமிழில் வித்துவான் பட்டம் பெற்றார். தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22  ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.

நூல் அமைப்பு

மனுக்குல வெண்பாவில் 55 பாடல்கள் இடம்பெற்றன. அனைத்தும் வெண்பாவால் இயற்றப்பட்டவை.

உள்ளடக்கம்

மனிதர்கள் வாழ்வில் மேன்மையுறுவதற்கான கருத்துக்கள் மனுக்குல வெண்பா நூலில் இடம் பெற்றன. திருக்குறளையும், கிறிஸ்தவ ஆன்மீகக் கருத்துகளையும் பொதுமைப்படுத்தி இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல் நடை

பெண்ணின் சொல் கேட்டு இறைவனின் அன்பை இழந்தது

ஆதிமனி தன்கடவுள் அன்பை யிழந்தான்தன்
மாதினுரை கேட்டு மனுக்குலமே - தீதே
மனைவிழைவார் மான்பய னெய்தார்
வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது

இறைவனே அனைத்துக்கும் ஆதாரம்

ஆதார மானபுவி யத்தனையும் உண்டுசெய்தார்
மாதேவன் முன்னாள் மனுக்குலமே - ஓதின்
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு

அறிவின் பெருமை

அஞ்சிச் சிறுமகவை ஆற்றினில் விட் டான் பொதிந்து
வஞ்சி யொருத்தி மனுக்குலமே - நெஞ்சின்
அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

மது விலக்கல்

தாதையாம் லோத்தும் மதுமயக்கால் தான்பயந்த
மாதர்க் கிசைந்தான் மனுக்குலமே - ஆதரையில்
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்
எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

ஊழ்வினை

அன்றுரைத்த கானானுக் கார்வமுடன் மோயீசன்
சென்றிடுமுன் செத்தான் மனுக்குலமே - நொந்து
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

அருளுடைமை

நாட்டினின்று போகாமல் நல்லிசரோலைப் பரவோன்
வாட்டியரு ளற்றான் மனுக்குலமே - ஈட்டும்
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றால்மற் றாதல் அரிது

சான்றாண்மை

தீராத் துயருறினும் யோடி சிறிதுமுளம்
மாறா திருந்தான் மனுக்குலமே - பேராத
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்

மதிப்பீடு

மனுக்குல வெண்பா மானுடத் துயர்களை நீங்குவதற்கு இறைவனைச் சரணடைவது குறித்தும், அதன் மூலம் பாவங்கள் விலகுவதையும் ஆன்மிகக் கருத்துக்கள், அறவுரைகள், திருக்குறள் கருத்துக்களுடன் ஒப்பிட்டு விளக்குகிறது. அறம் பேசும் கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக மனுக்குல வெண்பா மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.