first review completed

நெல் விடு தூது

From Tamil Wiki
Revision as of 01:20, 11 May 2024 by Tamizhkalai (talk | contribs)

நெல் விடு தூது (பதிப்பு: 1933), தூது இலக்கிய நூல்களுள் ஒன்று. நெல்லை வள்ளல் ஒருவருக்குத் தூதாக அனுப்பியதே நெல் விடு தூது. எஸ். வையாபுரிப் பிள்ளை பதிப்புரையுடன் வெளியான இந்நூலின் பாட்டுடைத் தலைவர், வைத்தியநாதப் பிள்ளை. இந்நூலின் ஆசிரியரின் பெயரை அறிய இயலவில்லை.

'நெல் விடு தூது' என்ற தலைப்பில், திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய நூல் ஒன்றும் உள்ளதாக உ.வே. சாமிநாதையர் குறித்துள்ளார்.

தோற்றம் வெளியீடு

திருநெல்வேலி மாவட்டம் தென்காசிப் பகுதியில் உள்ள தென்குடிகை என்ற ஊரைச் சேர்ந்தவரும், அனந்த பத்மநாதப் பிள்ளை என்பவரின் மகனுமான வைத்தியநாதப் பிள்ளை என்பவர் மீது பாடப்பெற்ற நூல், நெல் விடு தூது. இந்நூல், 1933-ல், எஸ். வையாபுரிப்பிள்ளையின் பதிப்புரையுடன், சாது அச்சுக்கூடம் மூலம் வெளியானது. இந்நூலின் ஆசிரியர் பெயர், பாடப்பட்ட காலம் முதலியனவற்றை அறிய இயலவில்லை.

நெல் விடு தூது நூல், மறுபதிப்பாக, சிற்றிலக்கியக் களஞ்சியம் - 5 தொகுப்பு நூலில், நான்காவது நூலாக இடம் பெற்றது. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன்.2023-ல், மெய்யப்பன் பதிப்பகம் இத்தொகுப்பை வெளியிட்டது.

உள்ளடக்கம்

நெல் விடு தூதின் பாட்டுடைத் தலைவரான வைத்தியநாதப் பிள்ளைக்கு, நூலின் ஆசிரியர் நெல்லைத் தூதாக விடுத்ததே நெல் விடு தூது. நெல் விடு தூதின் பாட்டுடைத் தலைவரான வைத்தியநாதப் பிள்ளை, சுமார் 300 வருடங்களுக்கு முன்பு வடகரை ஜமீன்தாராக விளங்கிய செம்புலிக் குமாரதுரைச் சின்னணைஞ்ச பூபதி என்னும் பெரிய சாமித் துரையின் தானாபதியாக இருந்தார். இவர், சிறந்த கல்விமானாகவும், தமிழுக்குச் சேவை செய்தவராகவும், வள்ளலாகவும், அரசியல் நிர்வாகியாகவும் திகழ்ந்தாக அறியப்படுகிறார். இவர் குற்றாலம் குற்றாலநாதர் கோயிலுக்கும் பிற ஆலயங்களுக்கும் பல திருப்பணிகளைச் செய்தார். சிறந்த பக்தியாளராகத் திகழ்ந்தார். இவருடைய குலவழி நூலின் 84 முதல் 97 வரை உள்ள கண்ணிகளில் இடம்பெற்றது.

இந்நூலில் புலவர், தாம் அறிந்த நாற்பத்தைந்து விதமான நெல் வகைகளைப் பட்டியலிட்டுள்ளார். அதில் ஒருவகை நெல் திருநெல்வேலிப் பகுதியின் தெய்வமான ’திருக்குறுங்குடி நம்பி’யின் பெயரால் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ’தென்னரங்கன் சம்பா’ என்பது அரங்கநாதர் மீது கொண்ட பற்றால் பெயரிடப்பட்டது..

நெல் வகைகள்

நெல் விடு தூது நூலில் குறிப்பிடப்பட்டுள்ள 45 நெல் வகைகளின் பட்டியல்:

  • கோடைக் குறுவை
  • குளவாளை
  • செங்குறுவை
  • காடைக்கழுத்தான்
  • கருங்குறுவை
  • மொட்டைக் குறுவை
  • நெடுவாற் குறுவை
  • குறுவைக் கிளையான்
  • கட்டையன்
  • மூக்கன் சம்பா
  • சிறிய முள்ளுச் சம்பா
  • காக்கைநிற கருஞ்சம்பா
  • தக்காண நேரிய சம்பா
  • புழுகுச் சம்பா
  • சீரகச் சம்பா
  • செஞ்சம்பா
  • தென்னரங்கன் சம்பா
  • குறுங்கை நம்பி சம்பா
  • புன்னைவனச் சம்பா
  • வன்னச் சம்பா
  • தனியானைக் கொம்பன்
  • செம்பாளை
  • சிறகி
  • சிறுகுருவி
  • பாற்கடுக்கன்
  • பனைமூக்கன்
  • சிறுதி
  • வாலன் சிறை மீட்டான்
  • பூசைப் பாடி வெள்ளை
  • மீளுஞ்சிறை மீட்டான்
  • மலைமுண்டன்
  • வாணன் கருஞ்சூரை
  • கருத்த நிக்கராதி
  • கனவெள்ளை திக்கராதி
  • பொலிவீரகஞ்சுகன்
  • வெள்ளைமுத்து
  • சொரிகுறும்பை
  • முத்துவெள்ளை
  • போரிங்கல் மீட்டான்
  • புழுதி புரட்டி
  • சொக்கன் சம்பா
  • மாராச வாணன்
  • வாள்சுறுணை
  • வாலன்
  • சீராம பாணம்

பாடல் நடை

வைத்தியநாதப் பிள்ளையின் சிறப்பு

சீர்கொண்ட வெள்ளிச் சிகரமும் பொற்சிலம்பும்
வார்கொண்ட கந்தரந்தேர் மந்தரமும் - பேர்கொண்ட
வெவ்வேறாய் நின்றால் விடையேறு மெங்கோனுக்
கவ்வேறு சிந்தனையுண் டாமென்று - வெவ்வேறாய்

மூன்று மலையுங் கொடுமுடிகள் மூன்றாகத்
தோன்றுந்த்ரி கூடமெனுந் தூயமலை - யா(ஈ)ன்ற பற்ப
சிங்கா சனமாகச் செண்பகப்பூங் காவனமே
கொங்க(ந)ர் பதியாய்க் கொலுவிருப்போன் - மங்கை

குழல்வாய் மொழிபாகன் குற்றாலத் தெம்மா
னிழல்பாய் குறும்பலவி னித்தன் -- அழகை
செங்கமலத் தாள்பரவச் செய்யசடை மேலிருக்குங்
கங்கைகுலத் தேயுதித்த காராளன் -- தங்கப்

பொருப்புச் சிலையானைப் போற்றுதற்கா யந்தக்
கருப்புச் சிலையொளித்த காமன் -- விருப்பமுடன்
முன்னா ளரனை முனியாய் வணங்குமலை
மன்னாகி நித்தம் வணங்கவென்றும் - அந்நாளில்

செண்டா லடித்துத் திருப்பியொரு சேலெழுதிக்
கொண்டா னவனாடு கொள்ளவென்றும் -- தண்டாமல்
அத்தம் படைத்ததனை யாதுலர்க்கெல் லாங்கொடுத்து
நித்தம் புகழ்படைக்க நேமித்துச் -- சித்தமுற

அன்புந் தயவு மறிவு பொறையுடைய
வின்பமு மாறா விரக்கமும் -- நின்பொருட்டால்
சந்ததமும் பொன்மேருத் தன்பேர் மறைத்துலகில்
வந்த புரு - மகாமேரு - முந்துகுட

வேலைதனிற் கொள்ளாமல் மேலமலை யேறாமற்
காலமென்றுங் கோடையென்றுங் காட்டாமல் -- நாலுகலை
பேசுதமி ழோர்க்குப் பெருகுநிதி மாரிபெய்யக்
காசினியில் வந்துதித்த கார்மேகம் -- தேசுபெறு

கல்விக்குக் கம்பன் கவனப் பரிநகுலன்
வில்லுக்கு வாய்த்த விறல்விசையன்

நெல்லிடம் தூதுக்கு விண்ணப்பம்

பண்ணைகளும் வைத்தேன் பயிர்க்கோவை சேகரித்தேன்
மண்ணுலகில் வேண்டும் வளமைபெற்றேன் - அண்ணே நான்
கூழ்குடித்த வாயாற் குழம்புப்பா லுங்குடித்தேன்
வாழ்குடிக்கும் மேற்குடியாய் வாழ்கின்றேன் -- சூழ்பயிரும்

அன்னம் படைப்பதுவும் ஆபரணம் பூண்பதுவும்
சொன்னம் படைத்துச் சுகிப்பதுவும் -- இன்ன
மிடுகின்ற பிச்சையு மேத்தும் விளங்குங்
குடி(கை)யர்கோன் புண்ணியங்கா கோவே - குடிகை

வயித்தியனா தேந்திரன்போல் வாழ்வித்தாய் நீயே
அயிக்கமுனைப் போலெனக்கா ரய்யா - உயிர்த்துணைபோ
லொத்திருந்தா யாகையினால் ஒன்றுங் குறையிலைகாண்
வித்தகனே யின்னமொரு விண்ணப்பம் - சித்ரசபை

அய்யர்திரி கூடருக்கு மம்மைகுழல்வாய்மொழிக்கும்
செய்யபுரட் டாதித் திருநாளில் -- வையத்
தமரிக்கை பேசிமத னாடலுக்குள் வந்து
சமரிக்கை கூட்டுந் தறுவாய் -- குமரிப்பெண்

பட்டுடையை விட்டுமறு பாவாடை சுற்றயிலே
தட்டுடையுஞ் சிற்றுடையுந் தள்ளாடத் - தொட்டொருகை
தாங்கப்போ யென்மனது தள்ளாடிக் கொள்ளாமல்
ஏங்கப்போ னேன்விழித்தே னென்செய்வேன் - தூங்கப்போய்

என்னசளம் வந்ததென்றே யென்னுடைய பாயலெல்லாம்
கன்னிதனைத் தேடினேன் காண்கிலேன்

மதிப்பீடு

தூது இலக்கிய வகைகளுள் மண் வளத்தையும் நெல்லின் சிறப்பையும் கூறும் நூலாக நெல் விடு தூது நூல் அமைந்துள்ளது. 40-க்கும் மேற்பட்ட அக்காலத்தில் விளைவிக்கப்பட்ட நெல் வகைகளைப் பற்றிய ஆவணப் பதிவாக நெல் விடு தூது நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-5; தூது இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.
  • நெல் விடு தூது: தினமணி இதழ் கட்டுரை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.