first review completed

சுந்தரேசனார் அன்னம் விடு தூது

From Tamil Wiki

சுந்தரேசனார் அன்னம் விடு தூது (பண்ணாராய்ச்சி வித்தகர், ஏழிசைத் தலைமகன் சுந்தரேசனார் அன்னம் விடு தூது) (1982) தூது இலக்கிய நூல்களுள் ஒன்று. பண்ணாராய்ச்சி வித்தகரான குடந்தை ப. சுந்தரேசனாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இந்நூலை புலவர் மா. திருநாவுக்கரசு இயற்றினார்.

பிரசுரம், வெளியீடு

சுந்தரேசனார் அன்னம் விடு தூது நூல், ப. சு. நாடுகாண் குழுவினரால், அரியலூர் ஜனோபகார மின் அச்சகத்தில் மே 1982-ல் அச்சிடப்பட்டு வெளியானது.

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் புலவர் மா. திருநாவுக்கரசு நவீன காலத்தில் சிற்றிலக்கியங்கள் இயற்றி அம்மரபை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கவிஞர்.

நூல் அமைப்பு

சுந்தரேசனார் அன்னம் விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவர் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்.

சுந்தரேசனார் அன்னம் விடு தூது நூலின் தொடக்கத்தில் முருகன் மீதான காப்புச் செய்யுள் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து கலிவெண்பாவால் இயற்றப்பட்ட 117 கண்ணிகள் அமைந்துள்ளன. இந்நூலில் கீழ்க்காணும் தலைப்புகள் இடம்பெற்றன.

  • நூல் (1-13 கண்ணிகள்)
  • பிறபொருள் தூதிற்சிறவா வென்றல் (14-17)
  • அன்னத்தின் தகுதி (18-21)
  • தலைவி மையல் கொள்ளல் (22-29)
  • தசாங்கங்கள் (30-54)
  • மலை (30-32)
  • ஆறு (33-38)
  • நாடு (39-40)
  • ஊர் (41-43)
  • தார் (44-45)
  • குதிரை (46-47)
  • யானை (48-49)
  • கொடி (50-51)
  • முரசு (52)
  • ஆணை (53-54)
  • தலைவர் சிறப்பு (55-77)
  • தலைவர் திருத்தொண்டு (78-90)
  • தலைவரைக் காணுமிடம் (91-105)
  • தூது (106-117)

சுந்தரேசனார் அன்னம் விடு தூது நூலில், சுந்தரேசனாரிடம், அன்னத்தைத் தூதாக விடுத்துத் தன் காதலைத் தெரிவித்து, ‘அவரிடமிருந்து மின்னும் வண்ண மணிமாலையை வாங்கிவா’ என்பதாக இந்நூல் பாடப்பட்டுள்ளது. நூலாசிரியர், தன்னை நாயகியாகக் கருதிக் கொண்டு இந்நூலை அகத்தூதாகப் பாடினார்.

இந்நூலில் சுந்தரேசனாரின் தமிழ்ப்பணிகளும் இசைப்பணிகளும் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

பாடல்கள்

அன்னத்தின் சிறப்பு

அன்னமே ஆருயிரே அன்பாலே காதலர்க்கு
உன்னைப்போல் பாரில் உதவுதல்யார் - பொன்னேர்
நளனுக்குத் தூதுசென்று நன்மையே செய்தாய்
உளம்வாக்குக் காயமெலாம் உண்மை - உளதாலிப்
பாரினில் யார்தான்நின் பண்பறிந்து போற்றாதார்
யாரிடத்து மில்லா அணிநடையாய் - தேரின்தீம்
பாலோடு நீரைப் பகுத்தறியும் நுண்ணறிவை
நூலோர் அறிவாரோ நூறுகோடி - நூலோடு
கூடிப் பழகினும் கூட்டின் குணமுணரார்
தேடித் தெளியார் தெளிவதனை - வாடிடுவார்

காதல்

மாமாங்கம் ஒன்றிருக்கும் மாமன்னன் சுந்தரேசன்
ஆமாம் அவன்பாட யான்கேட்டேன் - தேமாவாம்
ஏழிசையான் பாட்டினிலே என்புருகி மெய்ம்மறந்து
ஆழித் துரும்பானேன் அன்பாலே - வாழியென்றேன்
அந்நாளில் என்றன் அகம்புகுந்தான்

சுந்தரேசனாரின் சிறப்பு

செந்தமிழ்ச் செவ்விசையைச் செம்மையுறப் பாடியவர்
எந்தப் பகைவரினும் ஏற்புடைய - சொந்த
கருத்தைச் சொலவஞ்சார் கண்ணுர் அருமைத்
திருத்தொண்டர் மாக்கதையைத் தீம்பால் - அருந்துதல்போல்
கேட்பார் மனங்குளிரக் கேட்க உரைசெய்வார்
நாட்டில் திருக்கோயில் நண்ணுவார் - ஏட்டில்
அறியாத செய்தியை ஆய்ந்தறிந்து கூட்டி
நெறியாகத் தந்திடுவார் நித்தம் - குறிப்பிட்ட
காலத்தே சென்று கலந்து நிகழ்ச்சியைக்
கோலமாய் ஆற்றுகின்ற கொள்கையார் - ஞாலத்தில்
காசாசை அற்றுசெய் காரியத்தில் கண்ணாகும்
பேராசை கொண்ட பிழைப்புடையார் - யாரார்க்கும்
தம்மால் இயன்ற தருமத்தைச் செய்வதிலே
அம்மா இவர்போல யானறியேன்! - பெம்மான்

மதிப்பீடு

இலக்கிய, இலக்கணச் சிறப்புடைய சுந்தரேசனார் அன்னம் விடு தூது நூல், தூது இலக்கணத்திலிருந்து சிறிதும் மாறுபடாது அமைந்துள்ளது. சுந்தரேசனாரின் பன்முகங்களை விளக்கமாகவும், விரிவாகவும் கூறும் நூலாக சுந்தரேசனார் அன்னம் விடு தூது நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.