first review completed

கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை

From Tamil Wiki

கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை (1838-1911) ஒரு புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை 1838-ஆம் ஆண்டு பிறந்தார்.

தனிவாழ்க்கை

சிவக்கொழுந்துப் பிள்ளைக்கு ஒரு மூத்த சகோதரர் இருந்து துறவு மேற்கொண்டார்.

திருப்பாம்புரம் ஸ்வாமிநாத பிள்ளை என்னும் நாதஸ்வர வித்வானின் மகள் வேலமுத்தமாளை மணந்தார். இவர்களுக்கு மூன்று பெண்களும் ஒரு மகனும் இருந்தனர். மகன் முருகையா பிள்ளை பெண்கள் தொடர்பில் சொத்துக்களை அழித்துவிட்டு பாண்டிச்சேரி அருகே இருந்த வில்லியனூர் சென்று இறந்து போனார். இதில் மனம் நொந்த சிவக்கொழுந்துப் பிள்ளை கும்பகோணம் காமு அம்மாளின் மகன் ராஜண்ணா பிள்ளையை எடுத்து வளர்த்தார். ராஜண்ணா பிள்ளை ஒரு நாதஸ்வரக் கலைஞர், நடிகர் கே. சாரங்கபாணியின் மூத்த சகோதரர்.

இசைப்பணி

மைசூர் சமஸ்தானத்தில் சிவக்கொழுந்துப் பிள்ளையின் கச்சேரிகள் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. அரசரைப் போல உடை அணிந்து கொண்டு நாதஸ்வரம் வாசிப்பது இவரது வழக்கம். மைசூர் மன்னர் சிவக்கொழுந்துப் பிள்ளைக்கு வழங்கிய மரகதக் கிளி கும்பேசர் ஆலயத்தில் மங்களாம்பிகை கரத்தில் இருக்கிறது.

சிறந்த கற்பனைவளத்தோடு ராக ஆலாபனை செய்வதிலும் கீர்த்தனைகளை அடுக்கடுக்கான சங்கதிகளுடன் வாசிப்பதிலும் பெயர் பெற்றிருந்தார். மோஹன ராகத்தில் அமைந்த ‘பவனுத’ என்ற கீர்த்தனையை அடிக்கடி வாசிப்பார்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இவரது வாசிப்பைக் கேட்ட அனுபவத்தை, அவரது இசை மேதைமையை திருவனந்தபுரம் சி.லட்சுமண பிள்ளை தன் நூலில் எழுதியிருக்கிறார்.

ஒருமுறை கும்பேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கருங்கல் நாதஸ்வரத்தை யாருமே வாசிக்க இயலாது என சொன்னபோது சிவக்கொழுந்துப் பிள்ளை அதை வாசிக்க முனைந்தார். அதற்கு சன்மானமாக இரண்டு மரக்கால் பணமும், ஒரு யானையும் வேண்டுமென சொன்னார். கொச்சி சமஸ்தானத்து அரசர் அதற்கு ஒப்புக்கொள்ளவே, அந்தக் கல் நாதஸ்வரத்தில் முக்கால் மணி நேரம் வாசித்து சாதனை செய்தார்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை தன் 73-வது வயதில் 1911-ஆம் ஆண்டு மறைந்தார். இவருக்கு மைசூரிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட அரச உடைகளிலேயே இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

இதர இணைப்புகள்

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.