first review completed

ஜாவர் சீதாராமன்

From Tamil Wiki
Revision as of 21:47, 12 March 2024 by ASN (talk | contribs) (படம் சேர்க்கப்பட்டது.)
ஜாவர் சீதாராமன்

ஜாவர் சீதாராமன் (ஜாவர் என். சீதாராமன்; நடேச ஐயர் சீதாராமன்; ஜாவர்) (ஜூலை 6, 1920 – அக்டோபர் 29, 1969) எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், நாடக, திரைப்பட இயக்குநர். பொது வாசிப்புக்குரிய நாவல்களை எழுதினார். அமானுஷ்யம் மற்றும் மர்மம் கலந்து ஜாவர் சீதாராமன் எழுதிய ‘உடல் பொருள் ஆனந்தி’ தொடர் குறிப்பிடத் தகுந்த ஒன்று.

பிறப்பு, கல்வி

நடேச ஐயர் சீதாராமன் என்னும் ஜாவர் என். சீதாராமன், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அழகிய மணவாளம் கிராமத்தில், ஜூலை 6, 1920 அன்று, வழக்குரைஞர் நடேச ஐயரின் மகனாகப் பிறந்தார். கோயம்புத்தூரில் உள்ள சர்வ ஜன ஹைஸ்கூலில் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். திருச்சி தேசியக் கல்லூரியில் இண்டர்மீடியட் கற்றார். புனித ஜோசப் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் படித்தார். சட்டக்கல்லூரியில் படித்து பி.எல். பட்டம் பெற்றார். ஐ.சி.எஸ். படித்தார். ஆனால், தேர்ச்சி பெறவில்லை.

தனி வாழ்க்கை

ஜாவர் சீதாராமன் தேசியக் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் எழுத்துத் துறையிலும், திரைப்படத்துறையிலும் பணிபுரிந்தார். ஜாவர் சீதாராமனின் மண வாழ்க்கை குறித்த விவரங்களை அறிய இயலவில்லை.

ஜாவர் சீதாராமன் நூல்கள்
ஜாவர் சீதாராமன் கட்டுரை

இலக்கிய வாழ்க்கை

ஜாவர் சீதாராமன் ஆங்கில நாவல்கள் வாசிப்பதைத் தனது பொழுதுபோக்காக வைத்திருந்தார். ‘கௌசி’ என்ற புனை பெயரில் பல சிறுகதைகளை, கட்டுரைகளை இதழ்களில் எழுதினார். குமுதம் இதழில், ஜாவர் சீதாராமன் எழுதிய ‘உடல் பொருள் ஆனந்தி’ தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ராமநாதன், திலீபன், சீதா இவர்களுடன் மல்லிகையம்மாள், மேஜர் எனப் பல புதிரான பாத்திரங்களை உருவாக்கி, அவற்றோடு மனோதத்துவம், அமானுஷ்யம் இரண்டையும் இணைத்து அதனை எழுதினார். ‘பணம் பெண் பாசம்’ தொடங்கி பல தொடர்களை எழுதினார். ஜாவர் சீதாராமனின் நூல்களை அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டது.

ஜாவர் சீதாராமன் எழுதிய ’உடல் பொருள் ஆனந்தி’ ஜாவரின் மறைவுக்குப் பின் சென்னைத் தொலைக்காட்சியில் தொடராக வெளிவந்தது.

நாடகம்

ஜாவர் சீதாராமன் பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் ஆர். ஸ்ரீநிவாசனின் ஊக்குவிப்பால் பல நாடகங்களில் நடித்தார். சென்னைக்கு வந்ததும் ‘ஜாவர் தியேட்டர்’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். பல நாடகங்களுக்குக் கதை - வசனம் எழுதி, இயக்கினார். சந்திரபாபு, வி.கோபாலகிருஷ்ணன், சந்தியா, ரா.சங்கரன் உள்ளிட்ட பலர் ஜாவர் தியேட்டர் நாடகங்களில் நடித்தனர்.

திரைப்படம்

நடிப்பு

ஜாவர் சீதாராமன் ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனால் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ஜெமினி தயாரித்த ‘மிஸ் மாலினி’ என்ற திரைப்படத்தில் ஜாவர் சீதாராமன் நாடக இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார்.

விக்டர் ஹ்யூகோவின் 'லா மிஸரபில்லா' என்னும் பிரெஞ்சு நாவலை, 'ஏழை படும் பாடு' என்ற தலைப்பில் சுத்தானந்த பாரதி மொழிபெயர்த்தார். அந்நாவல் திரைப்படமானபோது ‘ஜாவர்’ எனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சீதாராமன் நடித்தார். அப்படத்தின் வெற்றியால் சீதாராமன், ‘ஜாவர் சீதாராமன்’ ஆனார்.

’மர்ம யோகி, ‘பணக்காரி’ போன்ற படங்களில் நடித்தார். ’பட்டணத்தில் பூதம்’ படத்தில் பூதமாக நடித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கட்டபொம்மனை எதிர்த்துக் கேள்வி கேட்கும் மேஜர் பேனர்மேன் ஆக நடித்தார்.

திரைக்கதை-வசனம்

ஜாவர் சீதாராமன், ஆங்கிலப் படங்கள் பார்ப்பதைத் தனது பொழுது போக்காக வைத்திருந்தார். ஆர்வத்தாலும் பயிற்சியாலும் தானே பல கதைகளை எழுதினார். அவை எஸ்.எஸ். வாசன், கே. ராம்நாத் உள்ளிட்ட ஆங்கில இலக்கியத் தாக்கம் உள்ள இயக்குநர்கள் பலரைக் கவர்ந்தன. வாசனின் ஊக்குவிப்பால், ஜாவர் சீதாராமன் ஜெமினியின் சந்திரலேகா, என் கணவர் உள்ளிட்ட சில படங்களுக்குக் கதை-வசனங்களில் பங்களித்தார்.

ஜாவர் சீதாராமனின் உத்திகள் இயக்குநர் எஸ். பாலசந்தரை மிகவும் கவர்ந்தன. அவர் ஜாவருக்கு திரைக்கதை அமைப்பதற்கு வாய்ப்பளித்தார். எஸ். பாலசந்தர் இயக்கிய 'கைதி' திரைப்படத்தின் திரைக்கதை அமைப்பில் பங்காற்றினார். தொடர்ந்து ஏவி.எம். தயாரித்து எஸ். பாலசந்தர் இயக்கிய ‘அந்தநாள்’ திரைப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியதுடன், துப்பறியும் இன்ஸ்பெக்டர் வேடத்தை ஏற்று நடித்தார்.

ஜாவர் சீதாராமனின் திறமையைக் கண்டு வியந்த ஏவி. மெய்யப்பச் செட்டியார், ஜாவர் சீதாராமனுக்குத் தொடர்ந்து பல வாய்ப்புகளை அளித்தார். ‘களத்தூர் கண்ணம்மா', ‘குழந்தையும் தெய்வமும்’, ‘ராமு', ‘செல்லப்பிள்ளை’, ‘உயர்ந்த மனிதன்’ போன்ற படங்களுக்குத் திரைக்கதை-வசனம் எழுதினார். பி.எஸ்.வீரப்பா தயாரித்த ‘ஆலயமணி', ‘ஆண்டவன் கட்டளை', ‘ஆனந்த ஜோதி' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார். கே.சங்கரின் முதல் படமான ‘ஒரே வழி’ படத்துக்கும் கதை - வசனம் ஜாவர் சீதாராமன் தான். பல திரைப்படங்களின் கதை-வசனத்தில் ஜாவர் சீதாராமன் பங்களித்தார்.

தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாது ‘தோ கலியாண்’, ‘சூரஜ்’, ‘ஆத்மி’, ‘ஷாடி’, ’பாய் பாய்’ என பல ஹிந்திப் படங்களுக்கும் வசனப் பங்களிப்பு செய்தார்.

இயக்கம்

ஜாவர் சீதாராமன், தமிழில் வெளியான ‘பணமா பாசமா’ படத்தை ஹிந்தியில் ‘பைசா யா ப்யார்’ (Paisa Ya Pyar) என்ற பெயரில் கதை-வசனம் எழுதி இயக்கினார்.

விருதுகள்

  • சிறந்த கதைக்கான பிலிம்பேர் விருது – 1963 : திரைப்படம்: மெயின் சுப் ரஹுங்கி
  • சிறந்த கதையாசிரியருக்கான நந்தி விருது - 1965

மறைவு

ஜாவர் சீதாராமன், அக்டோபர் 29, 1969 அன்று காலமானார்.

மதிப்பீடு

ஜாவர் சீதாராமன் எழுத்துலகம், திரையுலகம் இரண்டிலுமே குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளைத் தந்தவர். தமிழ்நாட்டில் இருந்து சென்று ஹிந்தித் திரையுலகின் வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர். மேலை நாட்டுப் படங்களுக்கேற்ப தமிழிலும் பல மாற்றங்களைக் கொண்டு வர முயற்சித்தவராகவும், தமிழ் திரைக்கதை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவராகவும் ஜாவர் சீதாராமன் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • உடல் பொருள் ஆனந்தி
  • மின்னல் மழை மோகினி
  • பணம் பெண் பாசம்
  • நானே நான்
  • சொர்கத்தில் புயல்
  • காசே கடவுள்
  • கந்தர்வ மண்டலம் (நாடகம்)

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.