நாலு மந்திரி கும்மி

From Tamil Wiki
Revision as of 23:43, 29 December 2023 by ASN (talk | contribs) (Para Added and Edited: Image Added; Link Created)
நாலு மந்திரி கும்மி

நாலு மந்திரி கும்மி (2004) ஓலைச்சுவடியிலிருந்து நேரடியாகப் பதிப்பிக்கப்பட்ட ஒரு சிற்றிலக்கிய நூல். இதனை சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டது. இதனைப் பதிப்பித்தவர், புலவர் ச. திலகம். நாலு மந்திரி கும்மி நூலை இயற்றியவர் யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்.

பிரசுரம், வெளியீடு

நாலு மந்திரி கும்மி நூல், 2004 ஆம் ஆண்டில், தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தால் வெளியிடப்பட்டது. ஓலைச்சுவடியிலிருந்து நேரடியாகப் பதிப்பிக்கப்பட்ட இந்த நூலின் பதிப்பாசிரியர், புலவர் ச. திலகம்.

இதே நூல், இலங்கையைச் சேர்ந்த சண்டிலிப்பாய் எம். வேலுப்பிள்ளையால் யாழ்ப்பாணம், கரவெட்டி வடக்கு ஞானசித்தியந்திரசாலையில், 1934-ல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

‘நாலு மந்திரி கதை’ என்ற தலைப்பில், இதே கதையமைப்பைக் கொண்ட நூல், 2005-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சுவடியியல் பதிப்பியல் துறை ஆய்வேடாக வெளிவந்துள்ளது.

ஆசிரியர் குறிப்பு

நாலு மந்திரி கும்மி செய்யுள் நூலை இயற்றியவர் யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவர். இவர் சிறந்த தமிழ்ப் புலவராகத் திகழ்ந்தவர். இவர் இயற்றிய பிற நூல்கள்: மறசை அந்தாதி, கல்வளை அந்தாதி, பறாளை விநாயகர் பள்ளு, கரவை வேலன் கோவை ஆகியனவாகும்.

நூல் அமைப்பு

மதுராபுரி என்னும் ஊரில் போதவாதித்தன், போதவிபூஷணன், போதவியாகரன், போதச்சந்திரன் என்னும் நால்வர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் நால்வரும் தென்மதுராபுரியை ஆண்டு வந்த அழகேசன் என்ற மன்னனிடம் மந்திரிகளாக ஆன கதையைக் கும்மி வடிவில் கூறுவதே நாலு மந்திரிக் கும்மி. இந்நூலில் மந்திரிகள் மன்னனுக்கு கூறும் ஐந்து கதைகள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் மன்னனும் ஒரு கதை கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.

தொன்மக் கூறுகள் இந்நூலில் அதிகம் அமைந்துள்ளன. ‘எதையும் தீர விசாரித்து முடிவு செய்ய வேண்டும்’ என்பதே நூல் கூறும் நீதி. பல்வேறு உவமைகள், பழமொழிகள் இக்கும்மி நூலில் காணக்கிடைக்கின்றன.

விநாயகர் வணக்கக் காப்புச் செய்யுளுடன் நூல் தொடங்குகிறது. வடிவேலன், வாலை, பரமேஸ்வரி ஆகியோரது வணக்கச் செய்யுள்கள் நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் 240 செய்யுள்கள் இடம்பெற்றுள்ளன. (இலங்கையில் அச்சிடப்பட்ட நூலில் 243 செய்யுள்கள் உள்ளன.)

மதிப்பீடு

கும்மிப் பாடல்கள் சமயம், வரலாறு, வழிபாடு, கதைப் பாடல்கள் எனப் பல்வேறு வகையில் அமைந்துள்ளன. அவ்வகையில் கதைப் பாடல் வடிவில் அமைந்துள்ள நூல், நாலு மந்திரி கும்மி. பேச்சு வழக்குச் சொற்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

யாழ்ப்பாணத்து நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இயற்றி வெளியாகியிருக்கும் ‘நாலு மந்திரி கும்மி’ அச்சு நூலுக்கும், சரஸ்வதிமகால் நிலையம் மூலம் நேரடியாக ஓலைச்சுவடி மூலம் அச்சிடப்பட்ட நூலுக்கும் இடையே பாடல்கள் அமைப்பு, எண்ணிக்கை எனச் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன.

பாடல்கள் நடை

ஒட்டகத்தின் தன்மை

ஒட்டகம் இவ்வழி காணீர்க ளோவென்று

உரைத்திட நாலுபே ருமிருந்துக்

கட்டுடன்தப்பிய ஒட்டகம் ஒற்றைக்கண்

பொட்டையோ வென்று ஒருவன் உரைத்தான் .


சூலென் றொருவனுரைத்தானே முழங்கால்

மூடமென் நொருவனுரைத்தான்

கூழை வாலென் றொருவனுரைத் தான்மொழி

கூரினதுஞ்சரி யாயிருக்க


மந்திரி சொன்ன கதை

அன்னை பிதாவும் பொசித்தாக் கல்பதி

னாறுள்ள தேகம் பெறுவார்கள்

என்னைக்கி நம்மளைக் காப் பாத்து வாரென்று

ஏகிக் கிளிவீட்டில் வந்ததுவே.


வீட்டில் கிளிகனி கொண்டு வரஅதை

வேதியன் கண்டு மனமகிழ்ந்து

தாட்டிக மாய்மறை யோனுக்கு முன்னந்

தாரணை யெல்லா முரைத்ததுவே.


மன்னன் சொன்ன கதை

காவிரி யென்றொரு பட்டண முண்டந்தக்

காசினி யிலொரு மாமறையோன்

தேவாதி தேவன் பிரம்மன் சியலாகச்

செய்தான் அவருக்கு ஆறுபிள்ளை


ஆறும் பிறந்திட மாமறை யோன்தேவி

அந்நாள் மரணமாய்ப் போயிடவே

சித்தங் கலங்கியே வேதியனு மந்த

தேசத்தில் பிச்சைகள் தானெடுத்துப்


பிள்ளைகள் ஆறையுங் காப்பாத்தி யிவன்

கிள்ளை மொழிகள் அமந்தேத்தி

வல்லாண்மை யாக வருகையி லேவினை

வந்தவகை கேளும் மந்திரியே

உசாத்துணை