first review completed

தெய்வமணி மாலை

From Tamil Wiki

இராமலிங்க வள்ளலாரால் பாடப்பட்ட மாலை இலக்கியங்களுள் ஒன்று, தெய்வமணி மாலை. இது வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருவருட்பாவில் இடம் பெற்றுள்ளது.

பாடல் தோற்றம்

இராமலிங்க வள்ளலார், சென்னை, ஏழுகிணறுப் பகுதியில் உள்ள விராசாமிப் பிள்ளைத் தெருவில் வாழ்ந்திருந்த காலத்தில், சென்னை, கந்தகோட்டம் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானை வழிபட்டுப் பாடியது தெய்வமணி மாலை. இது  31 பாடல்களைக் கொண்டுள்ளது. இந்தப் பாடல்களை இராமலிங்க வள்ளலார், தனது ஒன்பதாம் வயதில், பள்ளியில் படிக்கும் காலத்தில் இறையருளால் பாடியதாகக் தொன்மக் கதை கூறுகிறது. இம்மாலை, இராமலிங்க வள்ளலாரின் பாடல்களின் தொகுப்பான திருவருட்பா நூலில் இடம் பெற்றுள்ளது.

நூல் அமைப்பு/உள்ளடக்கம்

திருவோங்கு புண்ணியச் செயலோங்கி யன்பருள்
திறலோங்கு செல்வ மோங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து

- என்று தொடங்கி,

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

- என்று 31 பாடல்கள் பாடி நிறைவு செய்துள்ளார், வள்ளலார்.

தெய்வமணி மாலையில், வள்ளலார், முருகப் பெருமானின் சிறப்பை, பெருமைகளைப் பலவாறாகப் புகழ்ந்துரைத்துத் தனது வேண்டுதல்களை முன் வைத்துள்ளார். முருகப்பெருமானை பிரணவ மந்திரத்தின் திருவுருவம் என்று குறிப்பிட்டு, அவருக்கு நிகரானவர் எவருமில்லை என்றும், சிவபெருமானின் முகத்தில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமான் தோன்றினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரணவத்தின் சொரூபமாகத் தோன்றிய முருகப் பெருமானிடம், இராமலிங்க வள்ளலார், நெறிப்பட்ட மனதுடன் உன் மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்றும், உனது புகழைப் பேச வேண்டும்; பொய் பேசாமல் இருக்க வேண்டும்; உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் பேசும் உறவுகள் தன்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும் என்று வேண்டுகிறார். மதமான பேய் தன்னை அணுகாதிருக்க வேண்டும் என்றும், பெண்ணாசையை மறக்க வேணடும்; முருகனை மறவாதிருக்கு வேண்டும்; நோயற்ற வாழ்வு உடையவனாக இருக்க வேண்டும் என்றும் பலவாறாகத் தனது வேண்டுதல்களை முன் வைத்துள்ளார்.  

பாடல் நடை

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
        உத்தமர்தம் உறவு வேண்டும்
        உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
        உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
        பேசா திருக்க வேண்டும்
        பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
        பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
        மறவா திருக்க வேண்டும்
        மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
        வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

ஈகையும், பக்தியும் வேண்டுதல்

ஈயென்று நானொருவரிட நின்று கேளாத
        இயல்பு மென்னிட மொருவரீ
        திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாம
        லிடுகின்ற திறமும் இறையாம்
நீயென்று மெனைவிடா நிலையும் நானென்று முன்
        னினை விடா நெறியு மயலார்
        நிதியொன்று நயவாத மனமு மெய்ந்நிலை நின்று
        நெகிழாத திடமு முலகில்
சீயென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்
        தீங்கு சொல்லாத தெளிவும்
        திரமொன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின்
        திருவடிக் காளாக்கு வாய்
தாயொன்று சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.