under review

வேணு வேட்ராயன்

From Tamil Wiki
Revision as of 20:18, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
வேணு வேட்ராயன்
வேணு வேட்ராயன்

வேணு வேட்ராயன் (பிறப்பு: அக்டோபர் 30, 1978) நவீன தமிழ் கவிஞர். கவிதைகளும், கவிதைகள் குறித்து கட்டுரை, விமர்சனம் எழுதி வருகிறார். சென்னையில் மருத்துவராக பணிபுரிகிறார்.

பிறப்பு, கல்வி

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது 2020

வேணு வேட்ராயன் அக்டோபர் 30, 1978 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டாலி புதூர் கிராமத்தில் வேட்ராயன் - ரஞ்சிதம் தம்பதியருக்கு பிறந்தார். ஆரம்ப பள்ளியை கிருஷ்ணகிரியிலுள்ள டி.கே. சாமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். மேல்நிலைப் பள்ளியை சேலத்திலுள்ள ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். சென்னையிலுள்ள மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

வேணு வேட்ராயன் சிறிது காலம் கப்பலில் மருத்துவராக பணியாற்றினார். பின் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். சென்னையில் தற்போது சகோதரியின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

வேணு வேட்ராயன் விஷ்ணுபுரம் - ஊட்டி காவிய முகாம் வழியாக இலக்கிய அறிமுகம் ஏற்பட்டு எழுத வந்தவர். 2014 முதல் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் கவிதை தொகுப்பான ‘அலகில் அலகு’ 2019 ஆம் ஆண்டு விருட்சம் வெளியீடாக வந்தது. தனது ஆதர்சங்களாக தேவதேவனையும், பிரமிளையும் குறிப்பிடுகிறார்.

கவிதைகள் குறித்து அரூ இணைய இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். வேணு வேட்ராயன் பள்ளி நாட்கள் முதலே ஓவியத்தில் ஆர்வம் கொண்டவர்.

இலக்கிய இடம்

வேணு வேட்ராயனின் கவிதை உலகு உலகியலுக்கு அப்பால் நிற்பவை. மனிதனின் உலகியல் கேள்விகளுக்கு அப்பால் இருக்கும் பிரபஞ்சத்தை பற்றி பேசுபவை. அந்த வகையில் வேணு வேட்ராயன் தேவதேவனை தன் ஆதர்சமாக கொண்டவர்.

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது

“வேணு வேட்ராயனின் கவிதைகள் முற்றிலும் உலகியல் மறுப்பு கொண்டவை. அடிப்படை விழைவுகளுக்கு அப்பால் செல்ல முயல்பவை. பிரபஞ்சத்துடனான ஒத்திசைவை கற்பனை செய்பவை. தனிமனிதனைக் கடந்த தத்துவத் தேடல்களைக் கொண்டவை. அதனாலேயே இங்கே பொதுவாக கவிதைகளை வாசித்து - பேசும் வட்டத்திற்கு வெளியே நிலைகொள்பவை.” என்று எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

விருது

நூல்கள்

  • அலகில் அலகு - கவிதை தொகுப்பு - விருட்சம் வெளியீடு 2019

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page