first review completed

கம்போங் மேடான் கலவரம்

From Tamil Wiki
Revision as of 14:49, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
00.jpg

கம்போங் மேடான் கலவரம் ( மார்ச் 4,2001-மார்ச் 23, 2001) கோலாலம்பூர் மாநகரை ஒட்டிய கம்போங் மேடான், கம்போங் டேசாரியா, கம்போங் மேடான், கம்போங் காந்தி, கம்போங் லிண்டோங்கான், கம்போங் டத்தோ ஹருண் போன்ற புறநகர்ப் பகுதிகளில் நடந்தது. இது திட்டமிட்டு தொடங்கப்பட்ட இனக்கலவரம் அல்ல என்றாலும் நாட்டு மக்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கும் இனவாத மனப்பான்மையின் தீவிரத்தை வெளிப்படுத்திக் காட்டிய துயரச்சம்பவமாகப் பதிவானது. சிறு கும்பல்களிடையே நடந்த சாதாரண சச்சரவுகள் இனவாத கலவரமாக மாறியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் நிலவியது.

கலவரப் பின்னணி

முதல் சம்பவம்

மார்ச் 4, 2001 அன்று அதிகாலை மணி மூன்றுக்கு கம்போங் செமாராக்கில் (கம்போங் வங்காளி) மாரடைப்பால் இறந்த 51 வயது இந்திய மூதாட்டி ஒருவரின் நல்லடக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. எனவே சாலை ஓரங்களில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கார்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்தன. அதே கம்பத்தில் சுமார் 150 மீட்டர் தொலைவில் அல்வி யூனுஸ் என்ற இஸ்லாமியர் குடும்பத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. எனவே இக்குடும்பத்தினர் பிரதான சாலையை மறைத்தபடி கூடாரம் அமைத்திருந்தனர்.

9m.jpg

அந்தக் கூடாரத்தின் வழியே மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற இந்தியன் ஒருவன் சாலையை மறைத்திருந்த மலாய் குடும்ப உறுப்பினர்களிடம் சச்சரவில் ஈடுபட்டான். அக்குடும்பத்தினர் அவனது மோட்டார் சைக்கிளைப் பிடுங்கிக்கொண்டு அவனைத் துரத்தியடித்தனர். மீண்டும் வெட்டுக்கத்தியுடன் வந்த அந்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளைக் கேட்டு சண்டையில் ஈடுபட்டான். இதில் அல்வி யூனுஸுக்குக் காயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளை மீட்ட இளைஞன் மரண வீட்டில் அதனை வைத்துவிட்டு இருளில் ஓடி மறைந்தான்.

அடையாளம் தெரியாத அந்த இளைஞனைத் தேடி வந்த முப்பது மலாய் இளைஞர்கள் மரண வீட்டில் குழுமியிருந்த இந்தியர்களுடன் சச்சரவில் ஈடுபட்டனர். மரணவீட்டில் இருந்த கூட்டத்தை அவர்கள் தங்களுக்கு எதிராக கூடியிருக்கும் கூட்டம் என புரிந்து கொண்டனர். நான்கு மோட்டார் சைக்கிள்கள் கொளுத்தப்பட்டன. கார் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. பின்னர் அது மரண வீடு என அறிந்து கலைந்து சென்றனர். அந்த முதல் சம்பவம் உள்ளூர் வாசிகளிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இரண்டாவது சம்பவம்

மார்ச் 8, 2001-ல் இந்தியருக்குச் சொந்தமான வேன் ஒன்றின் கண்ணாடி மற்றுமொரு இந்திய இளைஞனின் விளையாட்டுத்தனத்தால் உடைந்தது. அந்த வேனை ஓட்டியவர் ஜந்தான் அமாட் எனும் மலாய்க்காரர். அன்றிரவு இந்திய வேன் உரிமையாளருக்கும் கண்ணாடியை உடைத்த இளைஞருக்கும் நடுவில் சண்டை மூண்டது. அதை ஜந்தான் அமாட் தடுக்க முயன்றதைப் பார்த்த சில மலாய் இளைஞர்கள் ஜந்தான் அமாட்டுக்கு ஆபத்து என உதவிக்கு வந்து, பின்னர் உண்மை அறிந்து கலைந்து சென்றனர்.

தாக்குதல்கள்

மார்ச் 8, 2001 அன்று இரவு தாமான் டேசாரியா, தாமான் மேடான், கம்போங் காந்தி, தாமான் லிண்டோங்கான், தாமான் டத்தோ ஹருண் ஆகிய பகுதிகளில் பிரதான சாலைகளில் சென்ற இந்தியர்கள் மலாய்க்காரர்களால் தாக்கப்பட்டனர். மார்ச் 10, 2001 அன்று காலையிலும் மார்ச் 11, 2001 அன்று இரவிலும் மீண்டும் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. மார்ச் 12, 2001ல் காவல்துறை நடவடிக்கையால் தாக்குதல் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் மார்ச் 21, 2001-ல் மீண்டும் மூன்று இடங்களில் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இறுதியாகப் பதிவு செய்யப்பட்ட தாக்குதல் மார்ச் 23, 2001-ல் நிகழ்ந்தது.

சர்ச்சைகள்

  • திருமண வீட்டில் தகராறு செய்த இளைஞனின் மேலும் இறப்பு வீட்டில் தாக்குதல் நடத்திய மலாய் இளைஞர்கள் மீதும் பத்துக்கும் மேற்பட்ட போலிஸ் புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
  • கலவரத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட மலாய்காரர்களில் ஐவர் முன்னால் இராணுவத்தினர்.
  • காவல் துறையின் தாமதமான நடவடிக்கைகள்

ஊகங்கள்

Imagesmm.jpg

மார்ச் 8, 2001-ல் நடந்த தாக்குதல் உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்திருந்தாலும் அதன்பிறகு தொடர்ந்த தாக்குதல்கள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டவை. எனவே இந்தத் தாக்குதல் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் ஊகங்களும் எழுந்தன. இந்தச் சம்பவத்தை குறித்து மார்ச் 8 கள ஆய்வு நூல் எழுதிய கா. ஆறுமுகம் சில ஐயங்களையும் ஊகங்களை முன்வைக்கிறார்.

  • தாக்கியவர்களில் சிலர் கிளந்தான் மாநிலத்தவர்கள். அவர்கள் வட்டார வழக்கு பிற இனத்தவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது
  • அம்னோவிலிருந்து அன்வார் இப்ராஹிம் வெளியேற்றத்தினால் பிளவுபட்ட மலாய்க்காரர்களை ஒன்றிணைக்க திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரம்.
  • பெரு வணிகர்கள் மாநகரத்தின் வலுவான இடத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியை அபகரிக்க செய்த சதி. இதன்வழி இங்கு குடியேறியவர்கள் விரட்ட முடியும். நில மேம்பாடு சாத்தியம்.
  • திட்டமிட்டுச் செயல்படும் அரசாங்கத்தின் தொடர்புள்ள குழுவே இதைச் செய்தது.
  • மலாய் மற்றும் இந்திய போதைப்பொருள் விநியோகிப்பாளர்களிடம் நெடுங்காலமாக இருந்த எல்லை தகராற்றின் விளைவு. இந்திய போதைப்பொருள் விநியோகிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை இது.

பாதிப்பு

  • ஐந்து இந்தியரும் ஒரு இந்தோனேசியரும் இந்தக் கலவரத்தில் மரணமடைந்தனர். தொண்ணூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் காயம் அடைந்தனர்.
  • மிக பிரமாண்ட வளர்ச்சி அடைந்த கோலாலம்பூர் பெருநகரைச் சுற்றி மிகக்குறைவான வாழ்க்கை வசதிகளுடன் வாழும் மக்களின் மன அழுத்தங்களின் வெளிப்பாடாகவும் இந்த கலவரம் ஆய்வு செய்யப்பட்டது. அதன் வழி பெருநகர வளர்ச்சி திட்டங்கள் மறுவரைவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
  • இக்கலவரம் நடந்தது நவீன மலேசியாவின் தோற்றத்தை விமர்சனத்துக்குள்ளாக்கியது. நவீன வாழ்க்கை வெளித்தோற்றத்தின் உள்ளே, சாமானிய மக்களின் மனதில் பாதுகாப்பின்மையும் இனவிரோத மனப்பான்மையும் ஒளிந்திருப்பதை இக்கலவரம் வெளிப்படுத்திக் காட்டியது.

உசாத்துணை

  • மார்ச் 8 (கட்டுரை நூல்) 2006 -கா. ஆறுமுகம்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.